நாட்டுப்பாட்டு – VIII 

காப்பெட்டுப் போட்டது ரோட்டு – அதில் 

காத்திருப்பது ரயில் கேட்டு – அதில் 

வெகுவேகமாய் வழிபாய்கையில் யமனாய் வரு ரயில்மோதிட 

விழுவாய் – இல்லைக் 

கழுவாய்.

தாவடி கிஸ்ஸென்று கேட்டு – மொட்டைத் 

தலையினில் ஹெல்மெட்டும் போட்டு – நீ 

விரைவாகவே தெருவேறிட ஒருவாகனம் எதிரேவர 

மிரண்டு – விழுவாய் 

உருண்டு.

ஆக்சிலரேட்டரை மிதித்து – ரோட்டில் 

அடுத்தவனை முந்தக் கொதித்து – நீ 

வசுவோடிடில் அதிலேறுவோர் வளைவொன்றிலே தடுமாறுவர் 

வாந்தி – பையில் 

ஏந்தி.

கையொடு கைகளைக் கோர்த்து – உச்சிக்

கடுவெயிலில் உடல் வேர்த்து – பல 

இளநண்பர்கள் மிதிவண்டியில் சமமாய்வர லொறியால் உயிர் 

ஈவு – பள்ளி 

லீவு.

இரவிரவாக மண் ஏற்றி – பொலிஸ் 

இருக்கென்று பாதையை மாற்றி – துயில் 

வெகுவாய் வரு பெருவாதையில் அதனோடு சேர் மதுபோதையில் 

விரையும் – டிப்பர் 

இரையும்.

தவறணை வாசலில் ஆடி – றோட்டைத் 

தாவியே கடந்திட ஓடி – நீ 

மதுபோதையில் உருவாடிட வரு வாகனம் சதிராடிட

மறுநாள் – மனைவிக்கு 

அறுநாள்.

விரைவதில் இல்லையே வீரம் – உயிர் 

விடுவதில் என்னய்யா தீரம் – நீ 

தெருவீதியில் வருவாய் எனில் தெளிவாகவும் மெதுவாகவும் 

திரிக – செய்கை 

புரிக.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *