அஞ்சாம் வகுப்பு வந்துவிட்டால்
அஞ்சா தவரும் அஞ்சிடுவார்
பிஞ்சாய் இருக்கும் பிள்ளைகளைப்
பேயாய்ப் பிடித்து ஆட்டிடுவார்
கொலசிப் என்றால் சும்மாவோ?
குட்டிப் பையா / பெண்ணே, நீ
எளிதாய் இதனை எண்ணாதே!
இன்னே படிக்கத் தொடங்கிடுவாய்!
காலை தமிழைக் கற்றுவிடு!
கணக்கு மதியம் செய்துவிடு!
மாலை வந்தால் ‘பாஸ்பேப்பர்’
வழக்கப் படுத்திக் கொண்டுவிடு!
பாப்பா நீயும் படிப்பாலே
பாடல் ஆடல் தனைவிட்டுப்
பீப்பா ஆனால் கவலையில்லை.
பெறவே வேண்டும் உயர்புள்ளி!
அக்கா மகளும் முன்வீட்டு
அன்னம் மகனும் பாசாமே!
மக்கா நீயும் பெயில் விட்டால்
மானம் கப்பல் ஏறிவிடும்!
நகரப் பள்ளிக் கூடமதில்
நன்றாய்ச் சேர வேண்டுமெனில்
நகரா திருந்து படித்துவிடு
நல்ல புள்ளி எடுத்துவிடு
வெட்டுப் புள்ளி விஷம்போலே
விரைவாய் ஏறல் பார்த்திடுவாய்
எட்டிப் பிடிக்க வேண்டுமெனில்
இருந்து படிக்கப் பழகிடுவாய்
முட்டைக் கோப்பி நான்தருவேன்
முழித்து இருந்து படிப்பாய் நீ
தட்டுப் பட்டால் வெளியில் நாம்
தலையைக் காட்ட முடியாது!
‘மணி’சேர் மத்சில் வித்தகராம்
மகனே சென்று படிப்பாய் நீ
அணில் சேர் திறமாம் தமிழ்க்கனியை
அவருடன் சேர்ந்து கடிப்பாய் நீ!
இரண்டு மூன்று டியூஷனுக்கு
இன்னே சென்று கற்றிடுவாய்
கரண்டு இல்லை என்றாலும்
கட்டுப் பாடாய்ப் படித்திடுவாய்
அப்பா அம்மா இப்படியே
அலறிக்கொண்டு திரிவதனால்
அப்பாவிச் சிறு பிள்ளைகளும்
ஆலாய்ப் பறந்து கற்றிடுமாம்
சிலபேர் பாசு செய்திடவே
சிறுவர் பலபேர் மனம்நொந்து
உலகில் தாங்கள் மக்கென்று
உள்ளம் மிக்க வெதும்புவராம்
கொலசிப் என்ற சோதனைக்காய்க்
கொஞ்சும் சிறிய பிஞ்சுகளைக்
குலையாய்ப் பிடுங்கிக் காயவைக்கும்
கொடுமை இங்கே நடக்கிறதே!