நாட்டுப் பாட்டு – 2

வாக்கிலே தவறமாட்டோம் வஞ்சனை புரியமாட்டோம் 

வாக்கெமக்குப் போடுவீர்கள் என்பார் – நாம் 

வாழ்வதுவே சேவைசெய்ய என்பார் – எங்கள் 

போக்கினிலே விட்டுவிடும் பொங்கிடும் பெருவளங்க

ள்பொன்னுலகைக் காட்டிடுவோம் என்பார் – வோட்டுப் 

போட்டவரையே முடிவில் தின்பார்.

தேசத்தை அழித்துவரும்

நாசகாரக் கும்பலினைத் 

தீர்த்துக்கட்டக் கூடியவர் நாமே – சமர் 

செய்து பெரு வெற்றிபெற லாமே – என்று 

பாசம் மண்ணில் வைத்தவர் போல்

வேஷங்கள் பலவும் இட்டுப் 

பாமரர் மனங்களைக் குழப்பி – நாசம் 

பண்ணிடுவார் மோச மொழி செப்பி.

வாயினால் வடைசுடுவோர்

ஆயிரமாய் வாக்குறுதி 

வாரியே விடுவர் நம்பிடாதே – அவர் 

வாசலில் விழுந்து கும்பிடாதே – கொடும் 

நோயினால் வருந்துபவன்

பாயினால் எழுந்திருக்க 

நோகும்படி குத்த வேண்டும் ஊசி – வெறு

ம்நொள்ளைப்பேச்சில் நன்மையில்லை யோசி!

நாட்டிலே நலம்வளர

வீட்டிலே துயர்மடிய 

நல்லவர் அரசியலில் தேவை – அன்றேல்

நாமெல்லாம் பிறரின் கையில் பாவை – பெருங் 

கேட்டிலே செலுத்துவோரை

வோட்டிலே கொணர்ந்துவிட்டுக் 

கேட்பதேன் மிக விரைவில் தீர்வை – வாழ்வு 

கிட்டிடவே சிந்தவேண்டும் வேர்வை.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *