நிலவு

மிகுந்த தொலைவில் இருண்ட வானில் மிதக்கக் காண்கின்றேன்.
வெள்ளை முகிலும் உன்னைத் துகிலாய் மறைக்கக் காண்கின்றேன்.
உலகில் இருந்து உந்தன் முகத்தின் ஒளியை ரசிக்கின்றேன். 
உள்ளச் செவியால் நிலவே உந்தன் பாடல் கேட்கின்றேன்.

வெள்ளிக் கடலைத் தங்கக் குளமாய் மினுக்கி எழுகின்றாய் 
விண்மீன் பெண்களோடு சிரித்துப் பேசி வருகின்றாய் 
அள்ளக் குறையா அழகோவியமாய் வானில் நடக்கின்றாய் 
ஆளைக் கொல்லும் பார்வை ஒன்றை வீசிக் கடக்கின்றாய் 

இருண்ட இரவில் சுருண்ட அலைகள் விரைந்து கரைமோத 
எழுந்த கடலின் பாடல் கேட்டு இதயம் ஆடுகையில் 
பரந்த வெள்ளை மணலின் மேலே பாலைப் பொழிகின்றாய் 
பச்சைத் தென்னை இலையூடு என்னைப் பார்த்து நகைக்கின்றாய் 

உருவத் தழகோ? ஒளியின் குளிர்வோ? நுதலிற் கறைதானோ?
உலகுக் கதிகம் மகிழ்வைத் தருமுன் உயர்வின் விதமோ? என்
பருவத் திமிரோ? வெள்ளை மனதைப் பறியாய்க் கொடுத்திட்டேன். 
பார்த்துப் பலநாள் ஆயிற்று அடியேய், பறுவம் இன்றன்றோ?

இருபத் திருநால் நெடுநாட் கழிய இன்று ஓர் திருநாளாய்
இளமைப் பொலிவும் நிறைவுக் கனிவும் இணைசேர் பாலாறாய் 
வருமத் திசையில் மனமும் அலைய வழிமேல் விழிவைத்து 
மனிதப் பயலும் எதிர்பார்த்திருந்தேன். வந்தாய் தேன்குடமே!

அல்லற்படுதல் என்றும் மறவா எந்தன் மனமென்னும் 
அல்லிக் குளத்தில் நிழலை வீழ்த்தும் அழகோவியமே நீ 
முல்லைத் தரள முறுவல் திகழ முகட்டு வான்வந்தால் 
முந்தும் வெள்ளித் தோழிமாரின் அழகும் மறைகிறதே! 

இரவு வானில் நிலவே எழாத நாள்கள் பலவுண்டு 
இளைய நிலவும் பாதி மதியும் எழுந்த நாளுண்டு.
எழிலின் வடிவாய் நிறைந்த நிலவாய் இன்று நீ வந்தும் 
இன்னும் எந்தன் அருகில் வராத நாணம் ஏனம்மா?

இருண்டு வருமோர் இரவு வானில் எழுந்த வேடன், தன் 
இரண்டு பெரிய வேட்டை நாயோடு உன்னைத் துரத்துவதால் 
வெருண்டு வான வெளியில் நீந்தி எங்கோ ஓடுகிறாய்.
மிரண்ட விழியால் அங்கும் இங்கும் எனையா தேடுகிறாய்?

விந்தைப் பெண்ணாம் உன்னை மடக்கி வெம்மைச் சிறைசெய்த 
மிகுந்த கரிய மேகத்திரையை விலக்கி வெளியே நீ 
வந்தாய் என்று நொந்தாய் என்று வார்த்தை பேசுகிறேன்.
வார்த்தை சரியாய் வரலில்லாமல் மனசும் நோகுதடி!

உருகும் தங்கம் போல உன்தன் அழகின் சாயல்களை 
உலகில் ஆங்காங்கு இடையே கண்டு, உள்ளம் களி கொண்டு, 
விரகம் மனதில் நதியாய் ஓட, மிகவும் உனைத்தேடி, 
வெளியில் அலைந்து, மழையில் நனைந்து, “விசர்” என்று ஊர் சொல்லப்,

பெரிய கவிதை எழுதி, மையற் பித்து முழுதேறிப்,  
பிதற்றி, உந்தன் பெயரைச் சொன்னான் கவிஞன்: நீயென்றால் 
கரிய மேகக் கூந்தல் வீசும் காற்றில் அலைபாயக்,
காட்டில் மான்போல் ககன வெளியில் எங்கோ நடக்கின்றாய்

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *