தண்ணீர் – ஒரு கண்ணீர்க் கதை-IV

உயிருக்கு முதல் என்று சொன்னோம் – எங்கள்
உயர்வுக்கும் மகிழ்வுக்கும் வழியென்று சொன்னோம்
பயிருக்கு வேர் என்று சொன்னோம் – பச்சைப்
பழனத்தின் வளர்வுக்கு விசை என்று சொன்னோம்

தொழிலுக்கு உரமென்று சொன்னோம் – மின்
துரிதத்தில் விளைவிக்கும் முறை ஒன்று கண்டோம்
எழிலுக்கு வழி என்று கண்டோம் – பூக்கள்
இதமுற்று மலர்தற்கு நீர் வேண்டுமென்றோம்

கவிதைக்கு ஊற்றென்று கண்டோம் – நீள்
கடல்மேலும் நதிமேலும் பா நூறு செய்தோம்
புவி வாழ மழை வேண்டும் என்றோம் – மிக்க
புகழ் வேந்தர் கொடை வன்மை உவமானம் என்றோம்

களையோடு பயிர் ஓம்பலாலே – தண்ணீர்
தரை மீதில் சான்றோருக்கு உவமானம் ஆச்சு.
இளையோர்கள் நீர்வேண்டும் என்று – கேட்டு
எழில் நங்கை மனம் வெல்லும் ஒரு சொல்லுமாச்சு.

நதி செய்த பிழை இல்லை நம்பீ – ஆங்கு
நறு வெள்ளம் பெருகாது வரள்வு எய்துமாயின்;
விதி செய்த பிழை என்று கம்பன் – ராமன்
மிடிமைக்கு நதி நீரை உவமானம் சொன்னான்.

கவிதைக்கு அழகென்று பாவோர் – இங்கு
கனமிக்க உவமானம் பல சொல்வதுண்டு
சவியுற்ற கவி போன்றதென்று – சான்றோர்
கவிதைக்கே உவமேயம் நதி கொண்டதுண்டு

இடியோடு மழை பெய்த போது – பாறை
இடி செய்து துடியோடு நடை போடும் ஆற்றின்
மடிமீது புணை போல வாழ்க்கை -எங்கள்
மதியன்றி விதி சொல்லும் வழிசெல்லும் என்றோம்

அருளுக்கு நிகரற்ற சோழன் – கையில்
அழகுற்ற ஜெய தண்டம் வளைவற்றதாலோ
மருளுற்ற காவேரி மங்கை – மிக்க
வளைவுற்று நெளிவுற்று வருகின்றாள் என்றோம்

அணை வைத்து நதி நீரைத் தேக்கி – மிக்க
அகலத்தில் பயிர் வைத்து நிகரற்று வாழ்ந்தோம்
இணையற்ற தொழில் நுட்பம் கண்டோம்- நீரில்
இதழ் வைத்த சுழல் வைத்து மின்சாரம் பெற்றோம்

பிழை விட்ட நாளெந்த நாளோ? மண்ணில்
பிரமிக்கும் விளைவுக்காய் உரமிட்ட போதோ?
களை நீக்க மருந்திட்ட போதோ? மிக்க
கனமுற்ற பாறைக்கு வெடி வைத்த போதோ?

விரைவுக்கும் வசதிக்கும் வேண்டி – ஊர்தி
விதமிக்க பல செய்து, மசகெண்ணெய் வேண்டித்,
தரை மிக்க கிழி செய்து தோண்டிப் – பூமி
சடலத்தில் ‘ஒயில்’ கண்டு களிகொண்ட நாளோ?

கடைதோறும் படியேறிச் சென்று – கண்
கடையின்றிப் பல நூறு பொருள்வாங்க வென்று
உடையாத பொலிதீனில் பைகள் – செய்து
உணர்வற்றுப் பூமிக்கு உரமிட்ட போதோ?

அனல் மின்னும் புனல் மின்னும் வேண்டி – இன்னும்
அணு மின்னும் கொலை நஞ்சு தரு மின்னும் வேண்டிக்
கனமிக்க ‘டேர்பைன்’ கள் கட்டி – ஆங்கு
கழிவுற்ற விஷம் எல்லாம் புவியிட்ட போதோ?

உயிருக்கு அமுதாகி நின்ற – எங்கள்
உயர்வுக்கும் வளர்வுக்கும் வழியாகி நின்ற
பயிருக்கு உரமாகி நின்ற – தண்ணீர்
பருகற்கும் உதவாத நஞ்சானதின்று.

கொல்லையிற் கிணற்றிலே நஞ்சு – கோவிற்
குளத்திலும் சுப்பரின் துரவிலும் நஞ்சு
வல்லையின் வெளியிலே நஞ்சு – எங்கள்
வழுக்கையாம் ஆற்றிலும் வருவதோ நஞ்சு

அந்த நாள் அப்புவும் கண்டு – எங்கள்
ஆழக் கிணற்றிலே முட் கொடி வீச
வந்தது நாகமும் ஒன்று – இன்று
வாராத நாகங்கள் ஆயிரம் உண்டு.

*** முற்றும் ***

————————————————————-
2014ம் ஆண்டு மார்கழித் திங்களில் இணுவில் மத்திய கல்லூரி அரங்கத்திலே யாழ்ப்பாணத்தின் தண்ணீர் மாசடைதல் பிரச்சனை பற்றிய விழிப்புணர்வு நாடகமாக மேடையேற்றப் பட்டது.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *