“தேற்றம்”  அமைப்பு நடாத்திய “பாதுகாப்பான இணையப் பாவனை: ஒரு வழிகாட்டல் செயலமர்வு” – ஒரு கண்ணோட்டம் 

“தேற்றம்”  அமைப்பு நடாத்திய “பாதுகாப்பான இணையப் பாவனை: ஒரு வழிகாட்டல் செயலமர்வு” – ஒரு கண்ணோட்டம் 
 
“தேற்றம்”  அமைப்பு வழங்கிய “பாதுகாப்பான இணையப் பாவனை: ஒரு வழிகாட்டல் செயலமர்வு”  என்னும் அறிவியல் கருத்தரங்கு 13.10.2018 சனிக்கிழமை மாலை 4.30 – 7.30 மணிவரை சிட்னி பெண்டில்ஹில்  பகுதியில்  அமைந்துள்ள யாழ் நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்றது. 
 
“மெய்ப்பொருள் காண்” எனும் மகுட  வாக்கியத்துடன், அறிவியல் கருத்துக்களைத் தமிழரிடம், தமிழ் மொழிமூலம் எடுத்துச் செல்லும் நோக்கிலே  சமீபத்த்தில் உருவாக்கப்பட்ட  தேற்றம் அமைப்பின் இரண்டாவது நிகழ்வு இதுவாகும்.
 
இன்று சிறுவர் முதல் முதியோர் வரை இணையத்தைப் பாவிக்கிறார்கள். இணையம் என்பது இருமுனையும் கூரான கத்தி. இந்த உலகத்தையே சுருக்கி அது  கைகளில் தருகிறது. அதேவேளை இதன் பாவனையில் அபாயங்களும் உண்டு. வைரஸ், ட்ரோஜன், பிஷ்ஷிங், கிரெடிட் கார்டு மோசடி, இணைய மூலமான பணக்களவாடல் என்று இணையப்பாவனை பலவழியில் பாவனையாளர்களை  மிரட்டுகிறது. அதுவும் இதுபற்றி அதிக விபரமில்லாத முதியோர் அல்லது இலகுவில் ஏமாறத்தக்க இளையோர் இந்த வலையமைப்பின் ‘வலையில்’ இலகுவாக வீழ்ந்துவிடும் பூச்சிகளாக மாறுகிறார்கள். இதனால், பாதுகாப்பான இணையப்பாவனை என்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியம் பெறுகிறது.  அவ்வகையில், செயலமர்வின் பேசுபொருள் காலத்தின் தேவையாக இருந்தது.
 
சிட்னி  தமிழ்ப்பாடசாலை மாணவர்களின் விவாத அரங்கம், துறைசார் நிபுணர்களின் சொற்பொழிவுகள் என இரண்டு பகுதிகளாக நிகழ்ச்சி இடம்பெற்றது.
 
தவிர்க்கமுடியாத காரணங்களால் பதினைந்து நிமிடங்கள் தாமதமாகவே நிகழ்வு தொடங்கியது என்பதைச் சொல்லவேண்டும்.  திரு. வே. நாகராஜா  அவர்கள்: Mortgage Broker,  இயக்குனர்,  Ringo Boy Homeloans, திருமதி மாலினி சோமாஸ்கந்தன் அவர்கள்,  அதிபர், ஹோம்புஷ் தமிழ்ப்பாடசாலை,  திருமதி வித்யா சிவகுமார் அவர்கள் , சிரேஷ்ட  ஆசிரியை, வெண்ட்வேர்த் வில்  தமிழ்ப்  பாடசாலை, திரு ராஜேஷ் பிரபு துரைராஜ் அவர்கள், அதிபர், Balar Malar Seven Hills, திருமதி ஹரிதா  நடராஜன் அவர்கள், அதிபர், Balar Malar Minto ஆகியோர் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து  வைத்தனர். தொடர்ந்து ‘தேற்றம்’ அமைப்பின் நிறுவனரும்,  சிட்னி பல்கலைக்கழக பொறியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான  கலாநிதி. ம. பிரவீணன்  அவர்கள் தேற்றம் அமைப்பின் நோக்கங்கள் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை  வழங்கினார்.
 
அடுத்ததாக இடம்பெற்ற மாணவர் அரங்கில் முதலாவதாக “மின்முறை வங்கிப்பயன்பாட்டில் (இன்டர்நெட், போன் பாங்கிங், கடனட்டைகள்)  வசதிகள்,  ஆபத்தைவிட  அதிகமா? ஆபத்து, வசதியை விட அதிகமா?” என்ற விவாதம் இடம்பெற்றது.   “வசதிகள்,  ஆபத்தைவிட  அதிகம் ! ” என்று பாலர்  மலர்  Seven Hills மாணவர்கள்  Siddarth Ramasubramanian, Bhuvan Senthiல், Mani Sri Harish Mahendra Prabhu  ஆகியோரும்,  “ஆபத்து,  வசதியை விட அதிகம் !” என  ஹோம்புஷ்  தமிழ்ப்பாடசாலை  மாணவர்கள் Dinoshiya Gnanamoorthy, Dushyanthan Mohanathas, Dilogi Baskaran ஆகியோரும் விவாதித்தனர்.  நடுவர் ஆக  திருமதி ஷிவானி தீரஜ் கடமையாற்றினார். இணையமூல வங்கியத்தினால் நேரம்  மீதமாகிறது,  வசதியாக இருக்கிறது என்பதை ஒரு தரப்பு  வலியுறுத்த, அதனால் திருடர்கள் மோசடிக்காரர்களுக்கும் வசதியாகி விடுகிறது என்பதை மற்றத்தரப்பினர்  வலியுறுத்தினர். மாணவர்கள் அழகு தமிழில் பேசியதோடு கலைச்சொற்களையும்  தமிழிலேயே பாவித்தனர். சபையோருக்கு அறிவைக் கொடுப்பதே  பிரதான நோக்கம் என்பதால், நடுவர் ஷிவானி, தீர்ப்பேதும் வழங்காமல் தொகுப்புரையை மட்டும் முன்வைத்தார். 
 
இரண்டாவதாக இணையவழி சமூக ஊடகங்கள் (ஒன்லைன் சோசியல் மீடியா), மனிதர்களின் நன்னிலையை (well-being) அதிகரிக்கின்றனவா? குறைக்கின்றனவா? என்ற  விவாதம் நடந்தது. அதிகரிக்கின்றன என்று வெண்ட்வேர்த் வில்  தமிழ்ப்  பாடசாலை மாணவர்கள்  Anjala Ranjith, Thenuka Thanikairajan, Ankujan Sriskantharajah ஆகியோரும்,  குறைக்கின்றன என்று பாலர் மலர் மிண்டோ மாணவர்கள் Anbukkarasi Dhanapal, Yashila Velusamy, Aditri Ramia Anagan ஆகியோரும்  வாதிட்டனர். நடுவராக திரு மாரிமுத்து சுந்தரவடிவேல்  கடமையாற்றினார். மிகவும் சுவாரஸ்யமாக நடந்த இவ்விவாதத்தில், இந்த விவாதத்திற்கான தயார்படுத்தலை பாடசாலை விடுமுறை காலத்தில் தாங்கள்  செய்வதற்கே இணையவழி சமூக ஊடகங்கள் தான்  துணைசெய்ததாக வெண்ட்வேர்த் வில் மாணவர்கள்  தெரிவித்தனர்.  அதேவேளை, “உங்கள் முகப்புத்தகத்தில் நீங்கள் இட்ட  இடுகைக்கு பத்து ஆதரவான பின்னூட்டங்களும் ஒரு எதிரான பின்னூட்டமும் வந்தால் எது அன்று முழுதும் உங்கள் மனதில் நிற்கும்?” என்று பாலர் மலர் மிண்டோ மாணவி கேட்டது அவையோரைச் சிந்திக்க வைத்தது. இணையவழி சமூக ஊடகங்களில் எல்லோரும் ஒரு போலியான  நல்வாழ்வைக்கட்டுவதால், ஒவ்வொருவரும்  தங்களது உண்மையான வாழ்வை மற்றவர்களின் போலிச்சந்தோஷ வாழ்வுடன் ஒப்பிட்டு, தம்மை விட மற்றவர்கள் எல்லோரும் நன்றாக வாழ்வதாகக் கருதுகிறார்கள் என்பதும், இது ஒவ்வொருவரின் சந்தோஷத்தையும் பாதிக்கிறது என்பதும்  எடுத்துக்காட்டப்பட்டது. நடுவர் சுந்தரவடிவேல் தொகுப்புரையை முன்வைத்தார். 
 
இதற்கிடையில், “வயிற்றுக்கும் ஈயப்படும்” என்பதையும் மறக்காமல் சுவையான சிற்றுண்டிகளும்  பானங்களும் வந்தவர்கள் எல்லோருக்குமே வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன  ஒருபுறம்.  இவ்விடயத்தில் தேற்றம் அமைப்பினர் தமிழர்களின்  பழைமையான விருந்தோம்பல் பண்பைக்  கடைப்பிடித்தனர்.
 
அடுத்ததாகத் துறைசார் அறிஞர்கள் உரையாற்றினார்.   முதலாவதாக, ” இணையமூலம்  வங்கிப்  பரிவர்த்தனை:  அபாயங்களும், எச்சரிக்கைகளும் ” எனும் தலைப்பில் திரு. வேங்கடராஜ்  ஜெயராஜ், MCA, Senior Consultant TCS, Digital Engagement  Manager,  Commonwealth Bank of Australia அவர்கள் உரையாற்றினார். அவர்  தமதுரையில், வாடிக்கையாளர்களை ஏமாற்றிப்  பணம் பறிப்பதற்காக இணையத்திருடர்கள் கையாளும் முறைகளைப்  புட்டுப்புட்டு வைத்ததோடு அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளையும்  எடுத்துரைத்தார். முழு உரையையும் தமிழில் ஆற்றியதோடு முக்கியமான கலைச்சொற்களையும் தமிழிலேயே முதலில் கூறி விளக்கத்துக்காக மட்டும் ஆங்கிலச் சொற்களையும் சேர்த்துக் கொடுத்தார். அடுத்ததாக “இணையத்தில் வாங்குதல்: நன்மைகளும் வாய்ப்புகளும் ” எனும் தலைப்பில் திரு. பொன்னையா  அருளானந்தம், BBA Hons,  Media Coordinator WPP AUNZ அவர்கள் உரையாற்றினார். இவர் வெண்ட்வேர்த்வில் தமிழ்ப்பாடசாலையின் அதிபருமாவார். தமதுரையை முடிந்தவரை நேரான (positive ) கருத்துக்களைக் கொண்டதாக வைத்துக்கொண்டதோடு விமான பயணச்  சீட்டுகளில் இருந்து விடுதி அறைகள் வரை இணையத்தில் வாங்குவதால் செய்யக்கூடிய பணச்  சேமிப்புகள் பற்றி நேரடி உதாரணங்கள், விளக்கங்களுடன்  எடுத்துரைத்தார்.  உரையாற்றியோர் இருவருமே Powerpoint Presentation களையும் பிற தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தியது பிற தமிழ் மொழிமூல உரையரங்குகளில் இருந்து வித்தியாசமாகவும் அதிக தகவல்களையும் சிந்தனைகளையும் அவையோர் மனதில் புகுத்த வசதி ஏற்படுத்துவதாகவும் இருந்தது.
 
தேற்றம் அமைப்பின்  சார்பில் திரு. புனிதன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் உத்தியோகபூர்வமாக  நிறைவடைந்தன. அதன்பிறகும்  அவையினர் உரையாற்றியோரிடம் விளக்கங்களைக் கேட்டுப்  பெற்றுக் கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
 
சிட்னியில் ஒரு வித்தியாசமான நிகழ்வாக, “புத்தம் புதிய  கலைகள், பஞ்ச பூதச்  செயல்களின் நுட்பங்கள் கூறும், மெத்த வளருது மேற்கே. அந்த மேன்மைக்கலைகள் தமிழினில் இல்லை” என்ற பாரதியாரின் ஆதங்கத்தைப்  போக்கி, நவீன தொழில்நுட்ப அறிவைத்  தமிழர்களுடனும் தமிழுடனும் பகிரும் ஒரு அரங்கமாக இந்நிகழ்வு அமைந்தது.
 
 
 
 
 
 
 
 
 

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *