பொரு களத்திலே முடி கவித்தவன் (கொப்பம், கூடல் சங்கமச் சமர்கள்)
பத்தாம் – பதினைந்தாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திலே இந்திய உபகண்டத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய போர்கள் என்று கொப்பம், கூடல் சங்கமம் ஆகிய இடங்களில் நடந்த பெரும் சமர்களைக் கூறலாம். கிபி 1054, 1059 – 1066 ஆகிய ஆண்டுகளில் நடந்த இச்சமர்கள் அக்காலத்தில் உபகண்டத்தின் மிகப்பெரும் படைவலுக்களாக விளங்கிய சோழ சாம்ராஜ்யத்துக்கும் சாளுக்கிய சாம்ராஜ்யத்துக்கும் இடையே நடந்தவை. இன்று வரை தொடரும் தமிழ் – கன்னட விரோதத்துக்கும் இச்சமர்களால் விளைந்த உளவியல் வடுக்கள் காரணங்களாகலாம்.
சோழர் படைத்தலைமை: இராஜாதிராஜன் – I ( பிறப்பு: கிபி 1000; சோழப்பேரரசன் 1044 – 1054), அவன் சகோதரன் இராஜேந்திரன் – II (பிறப்பு: கிபி 1003; சோழப்பேரரசன் 1054 – 1063), இன்னுமொரு சகோதரன் வீர இராஜேந்திரன் (பிறப்பு: கிபி 1010; சோழப்பேரரசன் 1063 – 1069), இராஜேந்திரன் – II இன் மகன் ராஜமகேந்திரன். இராஜாதிராஜனின் சகோதரி மகனான அநபாயனும் (ராஜேந்திர சாளுக்கியன் அல்லது குலோத்துங்கன் – I : சோழப்பேரரசன் 1070 – 1120) பெரும்பாலும் இப்போர்களில் பங்கெடுத்திருக்கலாம்.
சாளுக்கியர் படைத்தலைமை: ஆகவ மல்லனான சோமேசுவரன் – I (சாளுக்கியப் பேரரசன் 1042 – 1068), அவன் மைந்தர்களான சிங்கணன் (சோமேசுவரன் – II : சாளுக்கியப் பேரரசன் 1068 – 1076), விக்கலன் (விக்ரமாதித்யன் VI: சாளுக்கியப் பேரரசன் 1076 – 1126), ஆகவ மல்லன் தம்பியான ஜெயசிம்மன்.
பின்னணி: முதலாம் ராஜராஜ சோழன் காலத்திலே கர்நாடக – மகாராஷ்ட்டிர மாநிலங்களில் மேலைச் சாளுக்கியப்பேரரசு எழுச்சி பெற்றது. அத்துடன் சோழ – சாளுக்கியப்போர்களும் தொடங்கின. இப்போர்கள் ராஜராஜனின் பேரனும் (முதலாம்) ராஜேந்திரனின் மகனுமான ராஜாதிராஜன் காலத்தில் உச்சநிலை அடைந்தன. இப்போர்கள் பெரும்பாலும் சாளுக்கியப்பேரரசின் நிலப்பகுதிகளில் நிகழ்ந்தன. அதாவது சோழர்கள் முன்னேறித்தாக்குபவர்களாகவும் சாளுக்கியர்கள் தற்காப்புப் போரில் ஈடுபடுபவர்களாகவும் இருந்தனர். சோழர்கள் சிலவேளைகளில் தாக்கியழிப்புப் போரையும் சிலவேளைகளில் நிலக்கைப்பற்றல் போரையும் முன்னெடுத்தனர். இவ்வகையில் கிபி 1008 ஆம் ஆண்டளவில் (முதலாம்) ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில், சாளுக்கியர்களுக்கும் அவர்களுக்கு முன்பு ராஷ்டிர கூடர்களுக்கும் தலைநகரமாக இருந்த மான்யகேடம் (முதலாம்) ராஜேந்திர சோழனால் தாக்கி அழிக்கப்பட்டதோடு அப்போதைய சாளுக்கிய அரசன் சத்யாச்ரயனும் போரில் கொல்லப்பட்டான். இதைத்தொடர்ந்து சாளுக்கியர்கள் தமது தலைநகரைச் சற்று வடக்கே கல்யாணிக்கு மாற்றினார்கள். (முதலாம்) ராஜேந்திரன் அரசனான பின்பு சாளுக்கியர் மீது அடக்கிவைத்திருத்தல் போர்முறையைக் கடைப்பிடித்தான். அவன் மகனான (முதலாம்) ராஜாதிராஜன் இந்தத் தந்திரோபாயத்தைக் கைவிட்டு முழு அழிப்புப் போரை முன்னெடுத்தான். கிபி 1048 இல் சாளுக்கியர்களின் புதிய தலைநகரான கல்யாணி ராஜாதிராஜனால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. சாளுக்கியப்பேரரசன் சோமேசுவரனும் புதல்வர்களும் மஹாராஷ்ட்டிரா மற்றும் மத்தியப்பிரதேசத்தின் குந்தள மலைப்பகுதிகளுக்குப் பின்வாங்கிச் சென்றனர்.
ராஜாதிராஜன் சளுக்கர் தலைநகரைக் கைப்பற்றினாலும் அவர்களின் படைவலுவை உடைக்க முடியவில்லை. அவன் படைகளுக்கு வழங்கல் (supply) பிரச்சினைகளும் இருந்திருக்கலாம். மேலும் ராஜாதிராஜனின் தனிப்பட்ட கவனம் தொடர்ச்சியாகக் கல்யாணி மேல் இருந்திருக்க முடியாது. அப்போது ஐம்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்த ராஜாதிராஜனும் அவன் சகோதரர்களும் போர்முனையில் நேரடியாகத் தலைமை வகித்து முன்னணியில் நின்று போர்செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் போர் முடிந்ததும் அவர்கள் தமது தலைநகரத்துக்குத் திரும்பி இருப்பார்கள். இக்காரணங்களைப்பயன்படுத்தி கிபி 1050இல் (முதலாம்) சோமேசுவரன் தனது தலைநகரை மீளக்கைப்பற்றினான். அநேகமாக அதிகமான எதிர்ப்பின்றி இது நடந்திருக்கலாம். அல்லது கல்யாணியை அழித்தபின்னர் சோழர் படைகள் தாமாகவே பின்வாங்கியும் இருக்கலாம். ஆனால், துங்கபத்திராவுக்கும் கிருஷ்ணாவுக்கும் இடைப் பட்ட சாளுக்கிய சாம்ராஜ்யத்தின் தென்பகுதி (ரட்டமண்டலம்) சோழர்களின் இறுக்கமான கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருந்தது. கல்யாணியை மீட்டுக்கொண்ட சோமேஸ்வரன் இந்தப்பகுதியை மீட்பதற்கும் சோழர்களின் படைவலுவை உடைப்பதற்கும் பெரும் படைத்துறைக் கட்டுமானங்களைச் செய்யத் தொடங்கினான். குறிப்பாக, விற்படையை விருத்தி செய்வதில் அவன் கவனம் செலுத்தி இருக்கலாம் எனத் தெரிகிறது.
அவனது தயாரிப்புகள் முடிவடைந்ததும் அவன் கிபி 1054 இல் தெற்கு நோக்கி முன்னேறத் தொடங்கினான். இதையறிந்த ராஜாதிராஜனும் அவன் சகோதரர்களும் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து வடக்கே நெடுந்தூரம் பயணஞ்செய்து வந்து சோழர் படைகளுக்குத் தலைமை ஏற்றார்கள். சோமேஸ்வரனின் படைகளுக்கு முன்னால் சோழர்களின் எல்லைப்பாதுகாப்புப்படைகள் முதலில் சற்றுப் பின்வாங்கி இருக்கும் என்று ஊகிக்கலாம். சோழர்களின் பிரதானப் படையணிகள் துங்கபத்திரைக்கு வடக்கே மால்பிரபா நதிக்கரையில் அமைந்த கொப்பதீர்த்தம் எனுமிடத்தில் சாளுக்கியர் படைகளை வழிமறித்தன. பேரரசன் ராஜாதிராஜனே சோழர் படைகளுக்குத் தலைமை வகித்தான். அவன் சகோதரன் இரண்டாம் ராஜேந்திரன் மேலதிகப்படைகளுடன் பின்னால் விரைந்து வந்துகொண்டிருந்தான்.
கொப்பம் சமர்: சாளுக்கியர்கள் சார்பில் அவர்கள் முடிக்குரிய இளவரசனான ஆகவ மல்லனின் தம்பி ஜெயசிம்மனும், ஆகவமல்லனின் மகன்களான விக்களன், சிங்கணன் ஆகியோரும், சாளுக்கியச் சாமந்த நாயகர்களும் முன்னணியில் படைகளை நடத்தி வந்தனர். ஆகவமல்லனும் அவனது சிற்றரசர்களும் பின்னணியில் இருந்தனர். போரின் ஆரம்பத்தில் சாளுக்கியர்களுக்கே ஏறுமுகம் இருந்தது. சோழர் படைகள் முழுதாக வந்து சேராதது இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். சாளுக்கிய மகாசாமந்தர்கள் அம்புகளைப்பொழிந்தனர். சோழர்களின் பலம்வாய்ந்த யானைப்படையை எட்ட நின்று அம்புகளால் தாக்கி அழிப்பது சளுக்கரின் பிரதான உபாயமாக இருந்திருக்கலாம். தனது போர்யானையில் இருந்து சோழர்படைகளின் முன்னணியில் இருந்து போர்செய்துகொண்டிருந்த சக்கரவர்த்தி ராஜாதிராஜனை அம்புகள் தாக்கவே அவன் யானைமேல் இறந்து வீழ்ந்தான். ‘யானைமேல் துஞ்சிய தேவன்’ என்று பெயர்பெற்றான். சோழர் குலச் சக்கரவர்த்தி ஒருவன் போர்முனையில் இறந்த ஒரேயொரு சந்தர்ப்பம் இதுவேயாகும். அக்காலத்தில் தெற்காசியாவில் மிகவும் வலிமைபொருந்திய சாம்ராஜ்யமாக விளங்கிய சோழ சாம்ராஜ்யாதிபதியின் இறப்பு மிகவும் முக்கியமானதாகும். போர்முனையில் வீரமரணமடைந்த போது ராஜாதிராஜனுக்கு வயது 54.
ராஜாதிராஜனின் இறப்பை அடுத்துச் சோழ சைனியம் பின்வாங்கலாயிற்று. அப்போது பின்னணிப்படைகளோடு முன்னேறி வந்த இரண்டாம் ராஜேந்திரன் சோழர் படைகளை அணிதிரட்டி அவர்களுக்குத் தைரியம் ஊட்டினான். அவன் தலைமையிலே சோழர் படைகள் மறுபடியும் முன்னேறின. இப்போது போர்நிலை சோழர்களுக்குச் சாதகமாகத் திரும்பிற்று. தமையன் இறந்தபிறகும் இப்போது சக்கரவர்த்தியாகிவிட்ட இரண்டாம் ராஜேந்திரன் அஞ்சாமல் தானும் முன்னணியில் நின்றே போரிட்டான். சாளுக்கிய வில்லாளிகள் அவனையும் குறிவைத்தனர். அவனது யானையின் முகத்தையும், அவனது தொடைகளையும், தோள்களையும், அம்புகள் தாக்கின. அவன் யானையிலிருந்த பல வீரர்கள் இறந்து வீழ்ந்தனர். ஆனால், திறமையாலோ, அதிர்ஷ்டத்தாலோ ராஜேந்திரன் தப்பினான். இதற்கிடையில் புதிதாக வந்து சேர்ந்த படையால் சோழர்களின் கை மிகவும் ஓங்கவே சளுக்க சைனியம் பின்வாங்கலாயிற்று.
சளுக்கரின் முடிக்குரிய இளவரசன் ஜெயசிம்மனும், சாளுக்கிய அரச வம்சத்தைச் சேர்ந்த புலிகேசி, தசவர்மன் என்பவர்களும், சிற்றரசர்களான அசோகையன், மாரையன், மொட்டையன், நன்னிநுளம்பன் ஆகியோரும் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர். ஆகவ மல்லன், வன்னியரேவன், துத்தன், குண்டமையன் முதலிய சிற்றசர்களுடன் பின்வாங்கி ஓடினான். அவனது தேவிமாரான சத்தியவ்வை, சங்கப்பை என்போர் சோழ சைனியத்திடம் பிடிபட்டனர். ஏராளமான யானை, குதிரைகளையும் செல்வங்களையும் சோழ சைனியம் கைப்பற்றியது. ராஜேந்திரன் போர்க்களத்திலேயே மகுடாபிஷேகமும் செய்து கொண்டான். “மகுடாபிஷேகம் செய்தபோது வார்க்கப்பட்ட புனித தீர்த்தம் அவன் காயங்களில் இருந்து வழிந்த ரத்தத்தோடு கலந்தது” என்று அவன் மெய்க்கீர்த்தி சொல்கிறது. அரசுக்கு உரிமையுள்ள ராஜவம்சத்தினர் பலர் இருந்தைமையால் தலைமைத்துவத்தைப்பற்றி நிச்சயமற்ற நிலைமை ஏற்படாதிருக்க வேண்டும் என்றே போர்க்களத்தில் மகுடாபிஷேகம் செய்து வைக்கப்பட்டதாகக் கருத இடமுண்டு (முதலாம் ராஜேந்திர சோழனுக்குத் தமிழ் ரத்தமுடைய புதல்வர்கள் ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன் என்ற மூவரானாலும் மேலும் பல புதல்வர்கள் வேற்றுநாட்டு அரசிகள் மூலம் பிறந்திருக்கலாம் என்று கருத இடமுள்ளது).
“ஒருக ளிற்றின்மேல் வருக ளிற்றையொத் துலகு யக்கொளப் பொருது கொப்பையிற்
பொருக ளத்திலே முடிக வித்தவன் புவிக விப்பதோர் குடைக வித்ததும்”
என்று இவன் வீரம் கலிங்கத்துப்பரணியிலே போற்றப்படுகிறது. அவ்வாறே “பற்றலரை வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும் கொப்பத் தொரு களிற்றாற் கொண்டோனும்” என்று ஒட்டக்கூத்தர் இவனை வர்ணிக்கிறார்.
வெற்றியின் பிறகு ராஜேந்திர சோழன் மேலும் முன்னேறிச்சென்று கல்யாணியையும் கொல்லபுரத்தையும் (தற்போதைய மஹாராஷ்ட்டிர மாநிலத்திலுள்ள கோல்ஹாப்பூர் ) கைப்பற்றினான். கொல்லபுரத்தில் தனது ஜயஸ்தம்பத்தை நிறுவினான். வடமேற்றிசையில் சோழர்கள் கைப்பற்றிய ஆகத்தொலைவிலான இடம் இதுவேயாகும். பிறகு ராஜேந்திரன் அநேகமாக கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மீண்டிருப்பான். ஆனால் கொல்லபுரம் வரையிலான பிரதேசங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குச் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.
இடைக்காலம்: கிபி 1057 அளவில் பின்வாங்கிச்சென்ற சாளுக்கியர்கள் மீண்டும் படைகளை சேர்த்துக்கொண்டு தொல்லை கொடுக்கத்தொடங்கியதால், சோழர் படைகள் சற்றுப் பின்வாங்கி மான்யகேடத்தைச் சுற்றி நிலைகொண்டிருக்கலாம்.
முடக்காற்றுச் சமர்: 1059 அளவில் மான்யகேடத்தை நோக்கி முன்னேற முயன்ற ஆகவமல்லன் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்த முடக்காறுப் போர்க்களத்தில் முறியடிக்கப்பட்டுத் துரத்தப்பட்டான். இச்சமரில் சோழர்களுக்கு சோழப்பேரரசன் இரண்டாம் இராஜேந்திரனும், அவன் மகன் முடிக்குரிய இளவரசன் ராஜமகேந்திரன், தம்பி வீரராஜேந்திரன் ஆகியோரும் தலைமை வகித்தனர். இதுவும் பின்வந்த கூடல் சங்கமச் சமரும் (சமர்களும்) ஒன்றே என்று சொல்வாரும் உளர். முடக்காறு என்று சொல்லப்படும் இடம் கூடல் சங்கமத்திற்கு அருகில் இருப்பதனால் இந்தக் குழப்பம் நேர்ந்திருக்கலாம். ஆனால், வீரராஜேந்திரன் மெய்க்கீர்த்தியில்
“எறிந்துகொடுத் தளிய கூடல் சங்கமத்து
ஆகவ மல்லனை அஞ்சு வித்து
………
இரண்டாம் விசையும் குறித்த களத்து
ஆகவ மல்லனை அஞ்சு வித்து”
………
மூன்றாம் விசையும் சோமேஸ்வரன்
கட்டின கண்டிகை அவிழ்ப்பதன் முன்னம்
கம்பிலி சுட்டு கரடிக் கல்லில்
ஜயஸ்தம்பம் நாட்டி…”
எனவும்
“மூன்றாம் விசையினும் ஏன்றெதிர் பொருது
பரிபவம் தீர்வெனக் கருதிப் பொருபுனற்
கூடல் சங்கமத் தாகவ மல்லன்…”
எனவும் வருவதனால், கூடல் சங்கமப்பகுதியில் மூன்று போர்கள் நடந்தன என்பது பெறப்படும். இந்த மூன்று போர்களையும் ஒன்றே என்று பல வரலாற்றாசிரியர்கள் கருதியுள்ளதனால் முன்னுக்குப்பின் முரணான முடிவுகளை எடுத்துள்ளனர்.
எனவே, 1059 அளவில் நடந்ததை ‘முதலாம் கூடல் சங்கமப்போர்’ என்று கூறலாம். முடக்கற்றுப்போரில் தண்டநாயகன் வலதேவன், இருகையன் முதலிய சிற்றசர்களுடன் ஆகவமல்லனும் முறியடிக்கப்பட்டுத் துரத்தப் பட்டனர்.
கிபி 1063 அளவில் பேரரசன் இரண்டாம் ராஜேந்திரனும் அவனது மகனும் பட்டத்து இளவரசனுமான ராஜமகேந்திரனும் அடுத்தடுத்து இறந்தனர். வெங்கி அரசன் ராஜராஜ நரேந்திரனும் கிட்டத்தட்ட இதே காலத்தில் இறந்தான். ராஜராஜ நரேந்திரன் 42 வருடங்கள் அரசாண்டபின் இறந்ததால் அவன் பெரும்பாலும் வயோதிகத்தினால் இறந்திருக்கலாம். ஆனால், இரண்டாம் ராஜேந்திரனும், அவன் மகன் ராஜமகேந்திரனும் இறந்ததற்கான காரணங்கள் மர்மமாகவுள்ளன. அவர்கள் போர்க்களத்தில் இறந்ததாகச் சோழ வம்ச மூலங்களோ, அல்லது அவர்களைக் கொன்றதாகச் சாளுக்கிய மூலங்களோ கூறவில்லை. இவர்களின் இறப்பு மர்மம் பற்றி இன்னொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன். ஆனால், அதே காலத்தில், சோழர் கட்டுப்பாட்டில் இருந்த கங்கபாடியில் (துங்கபத்திரா கங்கைக்குத் தெற்கே இருந்த தென் கர்நாடகம் அல்லது மைசூர்) சோழர்களுக்கு எதிராகக் கலகங்கள் தோன்றின. எனவே இந்தக்கலகங்களில் இவர்கள் இறந்திருக்கக்கூடும் என்பது ஒரு சாத்தியப்பாடு.
அடுத்து அரசனான வீர ராஜேந்திரன் கங்கபாடிக்குச் சென்று கலகத்தை அடக்கியதோடு (அல்லது அவன் கங்கபாடியில் இருந்தபோதே அவன் சகோதரன் ராஜேந்திரன் இறந்திருக்கலாம்) கலகத்திற்குத் துணைசெய்த சாளுக்கிய சாமந்தர்களைத் துங்கபத்திரைக்கு அப்பால் துரத்தினான். இதேவேளை மான்யகேடம் பகுதியைக் கைப்பற்றச் சாளுக்கிய இளவரசன் விக்கலன் செய்த முயற்சியும் வீரராஜேந்திரனால் முறியடிக்கப்பட்டது.
கூடல் சங்கமச் சமர்: இதை இரண்டாம் கூடல் சங்கமச் சமர் என்றும் கூறலாம். ஆனால், பொதுவாக வரலாற்றாசிரியர்கள் இச்சமரையே கூடல் சங்கமச் சமர் என்று அழைக்கின்றனர். இது 1064 ஆம் ஆண்டளவில் நடந்தது. சோழர்களுக்கு வீரராஜேந்திரனும் சளுக்கர்களுக்கு ஆகவ மல்லனும் தலைமை வகித்தனர்.
1064 இல் சாளுக்கியர்கள் தாம் இழந்த பிரதேசங்களை மீளக்கைப்பற்றிக் கொள்ளவும் தமது பேரரசின் கீர்த்தியை நிலைநிறுத்தவும் பாரிய இருமுனைத் தாக்குதல் ஒன்றை முன்னெடுத்தனர். ராஜராஜ நரேந்திரனின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தைப்பயன்படுத்தி வெங்கியைத் தாக்கினான் விக்கலன். அவன் ஒரு குறுகிய காலத்திற்குச் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த ஏழாம் விஜயாதித்தனை வெங்கி சிம்மாசனத்தில் அமர்த்தியிருக்க இடமிருக்கிறது. ஆனால், ராஜராஜ நரேந்திரனின் மகனான அநபாயன் சோழர் படைகளின் உதவியோடு அவனை முறியடித்துத் துரத்தினான்.
அதேவேளை, கல்யாணியில் இருந்து மறுபடியும் தெற்குநோக்கி முன்னேறிய சாளுக்கியரின் பிரதான சைனியத்தைக் கூடல் சங்கமத்தில் சோழப்படைகள் எதிர்கொண்டன. ‘கூடல் சங்கமம்’ என்பது துங்கபத்திராவும் கிருஷ்ணா நதியும் சங்கமிக்கும் இடமென்றே வரலாற்றாசிரியர்கள் கருதி வந்தனர். ஆனால், இந்தச்சமர் இவ்வளவு தூரம் தெற்கே இடம்பெற்றிருப்பது சாத்தியமில்லை. எனவே, கிருஷ்ணா நதியும், அதன் பிரதான கிளைநதியான பஞ்சகங்கையும் சந்திக்கும் இடமே கூடல் சங்கமமாக இருத்தல் வேண்டும். இவ்விடம், முந்தைய போர்கள் நடந்த கொப்பம், முடக்காறு ஆகியவற்றுக்கு அண்மையில் உள்ளது.
இப்போரில் சாளுக்கிய சைனியம் தோற்றோடியது. சாளுக்கிய மாதண்டநாயகன் சாமுண்டராயன் கொல்லப்பட்டான். அவன் மகளும் சாளுக்கியச் சிற்றரசனாகிய இருகையன் மனைவியுமான நாகலை என்பவளைச் சோழர்கள் கைப்பற்றி அவள் மூக்கை அரிந்தனர். இந்தக் கொடுஞ்செயலுக்கான காரணம் தெரியவில்லை.
கிருஷ்ணா நதிச் சமர்: இச்சமரும் கூடல் சங்கமத்திற்கு அருகில் நிகழ்ந்ததால் இதை மூன்றாம் கூடல் சங்கமச் சமர் என்றும் கூறலாம். இது கிபி 1066 அளவில் நடந்தது. இச்சமரை, சோழர் முன்னேற்றத்தைத் தடுப்பதற்குச் சாளுக்கியர் செய்த இறுதிப் பெரும் முயற்சி எனலாம். இச்சமரிலும் ஆகவ மல்லனின் மகன்களான விக்கலன், சிங்கணன் என்போரும் சாமந்தர்களும் படைகளை நடத்தி வர, சற்றே வயதானவனாக இருந்திருக்கக்கூடிய ஆகவ மல்லனும் அவன் சிற்றரசர்களும் பின்னணியில் இருந்தனர். ஆனால், 56 வயதான வீரராஜேந்திரன் தன் தமையன்மார்களைப் போல முன்னணியில் நின்றே போரிட்டான். “வடகடல் போலப் பரந்திருந்த சாளுக்கிய சைனியத்தை தனது ஒற்றை யானையாகிய மத்தினாலே வீரராஜேந்திரன் கலக்கினான்” என்று அவனது மெய்க்கீர்த்தி கூறுகிறது. போரில் கேசவன், கேத்தரையன், மாரையன், போத்தரையன், நிரேச்சையன் முதலிய சளுக்க சாமந்தர்கள் கொல்லப்பட்டனர். சிங்கணன் தனது யானையும் கொடியும் இழந்து தப்பியோடினான். மதுவணன் எனும் சளுக்கச் சிற்றரசன், விக்கலன் ஆகியோரோடு ஆகவமல்லனும் ஓடி ஒழிந்தான். சாளுக்கியர்களின் பல செல்வங்களைச் சோழர்கள் கைப்பற்றினர். கூடல் சங்கமத்தில் நடந்த இப்போரில் சாளுக்கிய சைனியம் ஏறக்குறைய முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
ஆகவமல்லன் இறப்பு: இதனையடுத்து, கல்யாணபுரத்தை மறுபடியும் கைப்பற்றி அதற்கு வடக்கே இருந்த கரந்தை (கரஞ்சி) நகரம்வரை சோழப்படை முன்னேறியது. மறுபடியும் கல்யாணி பறிபோனதை அடுத்து ஆகவமல்லன் தற்கொலை செய்துகொண்டான். இவன் தற்கொலை செய்துகொண்டதைச் சோழர், சாளுக்கியர் ஆகிய இருதரப்பு வரலாற்று மூலங்களும் உறுதிசெய்கின்றனவாயினும், அது உடனடியாக மேற்சொன்ன போருக்குப்பிறகு நடந்ததா, அல்லது சில மாதங்கள் பிறகு நடந்ததா என்பது தெரிவில்லை. சோழர்களின் மெய்க்கீர்த்திகள், ஆகவமல்லன் சோழரை மறுபடியும் போருக்கு அழைத்ததாகவும், கரஞ்சி நதிக்கரையில் போருக்கு இடம் குறிக்கப்பட்டதாகவும், ஆகவமல்லன் போருக்கு வரப்பயந்து நதியில் வீழ்ந்து உயிர்விட்டதாகவும் கூறுகின்றன. சாளுக்கிய ஏடுகளோ, இக்காலப்பகுதியில் தீராத நோய் ஒன்றால் பீடிக்கப்பட்ட ஆகவமல்லன் ஆற்றில் யோக நிஷ்டை நிலையில் மூழ்கி மூச்சடக்கி (பரமயோகம் செய்து) தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுகின்றன. இது அவ்வளவு நம்புதற்குரியதல்ல என்பது வெளிப்படை. கல்யாணிக்கு வடகிழக்கே பாயும் மஞ்சீரா நதியில் ஆகவமல்லன் மூழ்கி உயிர்விட்டதாக நம்பப்படுகிறது. இதையடுத்துக் கல்யாணி, கரந்தை நகர்கள் சோழர்படைகளால் அடியோடு நாசமாக்கப்பட்டன.
கூடல் சங்கமப்போர்கள், மற்றும் ஆகவமல்லனின் மரணத்தோடு சாளுக்கியர்களின் போர்செய்யும் வலு உடைக்கப்பட்டது. இவ்வாறாக ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன் ஆகியோரின் சாளுக்கியர்களைப் பணியச்செய்யும் கனவை, விரதத்தை, வீரராஜேந்திரன் நிறைவேற்றி வைத்தான். கர்நாடகம் மாநிலம் முழுமையையும் மகாராஷ்ட்டிராவின் சில பகுதிகளையும் சோழர்கள் கைப்பற்றினர். வடக்கே கன்யாகுப்ஜம் / அயோத்தி வரை அவர்களுடைய செல்வாக்கு இருந்திருக்கலாம் எனத்தெரிகிறது.
( ஆகவமல்லனின் மரணத்தை அடுத்து அவனது பிள்ளைகள் சிங்கணன், விக்கலன் ஆகியோர் சாளுக்கிய அரியணைக்குப் போட்டி இட்டதோடு, விக்கலன் வீரராஜேந்திரனின் உதவியையும் கோரினான். ஆதலால் இதற்குப்பிறகு வந்த சோழ / சாளுக்கியப்போர்களை இரண்டு அரசுகளுக்கிடையிலான போர்களாகக் கூற முடியாது. அவை குடும்பச் சண்டைகளே. துரதிஷ்டவசமாக சோழர் மத்தியிலும் இக்காலத்தில் குடும்பச்சண்டைகளும் மர்மமான இறப்புகளும் ஏற்பட்டன. இதனால் சோழ – சாளுக்கியப் பகை தடம்மாறி எங்கெங்கோ சென்றது. அதனை வேறொரு பதிவில் பார்ப்போம்).