கி. பி. 1012: சோழர்களின் மிகப்பெரும் வெற்றிகளின் போதான உலக அரசியல் புறநிலைகள் – II

 

* இந்தியாவின் வடக்குக்கோடியில் இன்றைய உத்தரப்பிரதேசத்தில் விளங்கிய கன்னோஜின் இளவரசனான ஜெகதிபாலன், இலங்கையின் தெற்குக் கோடியில் இருந்த அம்பாந்தோட்டைக் காடுகளில் வந்து மறைந்து வாழ்ந்ததோடு, சோழர்களை விரட்டச் சிங்கள இளவரசர்களுக்கு உதவினான்!

* கடாரத்தின் கோட்டையைச் சோழர்கள் முற்றுகையிட்ட போது சீனத்து நெருப்பு வீசிகளை (flame – throwers) பாவித்தார்கள்!

இப்படியான செய்திகளை நம்ப முடிகிறதா? இவை வெறுமனே முகப்புத்தகத்தில் பரப்பப்படும் செய்திகளல்ல. வலுவான வரலாற்று ஆதாரங்கள் உள்ள செய்திகள். இவை எப்படிச் சாத்தியமாயின?

இராஜேந்திர சோழன் கங்கை வரையும், பின்னர் ‘கடாரம்’ வரையும் படையெடுத்துச்சென்றது ஏதோ சாம்ராஜ்ய மோகம் காரணமாகவோ, இரத்த வெறி காரணமாகவோ, வீர உணர்ச்சி மேலிட்டோ கண்மூடித்தனமாக மேற்கொண்ட ஒரு படையெடுப்பாக இருக்க முடியாது. அன்றைய இந்திய உபகண்ட மற்றும் உலக வல்லாதிக்க அரசியல் புறநிலைகளை ஆழ யோசித்து அதற்கேற்பத் தமிழர்களின் நீண்ட கால நன்மைகளைக் கருத்தில் கொண்டே இந்தப்படையெடுப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று எண்ண இடமிருக்கிறது. அத்தோடு, இங்கே ராஜேந்திரனோ அல்லது சோழர்களோ தனித்து இயங்கவும் இல்லை. உலக வல்லாதிக்கச் சதுரங்கத்தின் ஒரு முக்கிய நகர்வாகவே கங்கைப்படையெடுப்பு நடந்திருக்க வேண்டும். இது எப்படி என்று அறிந்து கொள்ள, அன்று உபகண்டத்திலும் அதற்கு வெளியிலும் நிலவிய அரசுகளின் கூட்டணிகளைப்பற்றி யோசிக்கலாம்.

– சோழர்களுக்கு சாளுக்கியர்கள் பரம எதிரிகள். சோழநாடும் சாளுக்கிய நாடும் அன்று உபகண்டத்தில் இருந்த மிகப்பலம் வாய்ந்த சாம்ராஜ்யங்கள் என்ற ரீதியிலும், ஒன்றுடன் ஒன்று தரை எல்லையைக்கொண்டிருந்த வகையிலும், ஒன்றை ஒன்று அழிக்க அல்லது பலவீனப்படுத்த விரும்பின.

– சோழர்களுக்குத் தெற்கே இருந்த பாண்டிய, சிங்கள அரச வம்சத்தினருக்கு இக்காலத்தில் நாடில்லை என்றாலும், தங்கள் நிலம் சோழர்களால் ஆக்கிரமிக்கப் பட்டது என்ற வகையில் அவர்கள் சோழர்களிடம் பகை கொண்டிருந்தார்கள்.

– சாளுக்கியர்களுக்கு வடக்கே இருந்தே பரமார வம்சத்தின் போஜ ராஜனும் காலச்சூரிகளின் காங்கேய தேவனும் சாளுக்கியர்களுடன் எல்லைப்போர்களில் ஈடுபட்டிருந்தார்கள். ஆகவே இவர்கள் சோழர்களுக்கு நண்பர்கள். போஜனிடம் இருந்து ராஜராஜருக்கும், ராஜேந்திரருக்கும் தூதுவர்கள் வந்ததாகவும், சாளுக்கியர்களுக்கு எதிரான இவர்களின் தாக்குதல்கள் நேர ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டதாகவும் கருத இடமிருக்கிறது.

– பரமார அரசுக்கும் வடக்கே இருந்த கூர்ஜர – பிரதிகார அரசுக்கு அவர்களுடன் எல்லைத்தகராறு இருந்திருக்கலாம். எனவே இவர்கள் (கூர்ஜர – பிரதிகாரர்) சாளுக்கியர்களுக்கு நண்பர்கள். அதனால் சோழர்களின் எதிரிகள்.

– வடமேற்கே இருந்து படையெடுத்து வந்துகொண்டிருந்த கஜனி முகம்மது எல்லா இந்து அரசர்களுக்கும் எதிரி என்றாலும், அவனோடு போரிட்டுக்கொண்டிருந்த பரமாரர் போன்ற அரசுகளைச் சாளுக்கியர்கள் தமது சாம்ராஜ்ய விஸ்தரிப்பு ஆசையால் பின்புறமிருந்து அதாவது தெற்கிலிருந்து தாக்கிக் கொண்டிருந்தார்கள். எனவே தந்திரோபாய ரீதியில் கஜனி சாளுக்கியர்களுக்கு நட்புநாடாக இருந்தது.

– கம்பூச்சியாவின் கெமர் பேரரசு சைவர்கள் என்ற வகையில் சோழர்களுடன் நட்பாக இருந்தது.

– வட மலாயாவின் தாமிரலிங்க அரசு பௌத்தர்கள் என்ற வகையிலும், கெமருடன் எல்லைத்தகராறு கொண்டிருந்த வகையிலும் கெமர் சாம்ராஜ்யத்துக்கு எதிரிகளாக இருந்தது. எனவே தாமிரலிங்கம் சோழர்களுக்கும் எதிரி.

– ஸ்ரீவிஜயப்பேரரசு பௌத்தர்கள் என்ற வகையில் தாமிரலிங்கத்துடன் நட்பாக இருந்தது. இவ்வகையிலும், வங்காள விரிகுடாவில் இருந்த கடலாதிக்கப் போட்டியாலும் சோழர்களுக்கு எதிராக இருந்தது.

– சீனாவின் சோங் வம்சம் வரியற்ற சுதந்திர வர்த்தக வலயங்களை குவாங்சௌ நகரில் ஏற்படுத்தி இருந்தது. சோங் வம்சத்தின் வெளிநாட்டுக்கொள்கையானது சர்வதேசக் கடல் வர்த்தகத்தை ஊக்குவிப்பதாக இருந்தது. ஸ்ரீவிஜய நாட்டினர் மலாக்கா நீரிணையில் கொண்டிருந்த ஆதிக்கத்தைப் பாவித்து வர்த்தகக்கப்பல்களுக்கு அதிக வரி விதித்து வந்தனர். இதைச் சீனா விரும்பவில்லை. மேலும் ராஜராஜரின் தூதுகோஷ்டி ஒன்று 1014ஆம் ஆண்டளவில் சீனாவை அடைந்திருந்தது. எனவே சீனா ஒரு குறிப்பிட்ட அளவு சோழர் பக்கம் இருந்தது.

இவற்றையெல்லாம் வைத்துப்பார்க்கும் போது, கங்கைப்படையெடுப்பு இடம்பெற்ற காலத்தில், தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் இரண்டு கூட்டணிகள் இருந்திருப்பது தெரிகிறது.

1 – சோழர் (இராஜேந்திரன்), பரமாரர் (போஜன்), காலச்சூரி (காங்கேய தேவன்), கெமர் (சூரிய வர்மன் ) கூட்டணி. இது சீன சோங் வம்சத்தின் மறைமுக ஆதரவையும் பெற்றிருந்தது.

2 – சாளுக்கியர் (ஜெயசிம்மன்), கூர்ஜர – பிரதிகாரர் ( ராஜபாலன் ), தாம்ரலிங்கர், ஸ்ரீவிஜயம் (சங்கிராம விஜயோத்துங்க வர்மன் ) கூட்டணி. கஜனியும் செயற்பாட்டளவில் இவர்களுக்கு உதவி செய்தது. நாடற்ற சிங்கள, பாண்டிய மன்னர்களும் இவர்கள் பக்கம்.

இந்த அரசியல் கள நிலையைப் புரிந்து கொண்டால் நான் தொடக்கத்தில் குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் அவ்வளவு விசித்திரமாகத் தோன்றா. எதிரிக்கு எதிரி நண்பன், எதிரிக்கு எதிரிக்கு எதிரி எதிரி, எதிரிக்கு எதிரிக்கு எதிரிக்கு எதிரி நண்பன் என்ற சங்கிலித் தொடரின் விளைவுகள்தான் இவை.

கிபி 1012 இல் பதவிக்கு வந்த ராஜேந்திரன் கிபி 2018 இல் வேங்கியில் (ஆந்திரப் பிரதேசம்) தலையிட்டு, தனது மருமகனான ராஜராஜ நரேந்திரனின் சிம்மாசன உரிமையை நிலைநாட்டினான். சாளுக்கிய இரத்தம் உடைய இளவரசன் விஜயாதித்தனை அரசனாக்கச் சாளுக்கிய அரசு செய்த முயற்சியைத் தோற்கடித்தான். அதேநேரம் நேரடியாகவும் சாளுக்கிய நாட்டைத் தெற்கிலிருந்து தாக்கி, முயங்கியில் (மஸ்கி, கர்நாடகா) ஜெயசிம்மனைத் தோற்கடித்து முதுகு காட்ட வைத்தான். அதற்கப்புறம் ராஜேந்திரனுக்குத் தந்திரோபாய ரீதியில் இரண்டு தெரிவுகள் இருந்தன.

– தனது முழு படை பலத்தையும் பிரயோகித்துப் பிரதான எதிரிகளான சாளுக்கியரைத் தாக்கி, சாளுக்கிய நாட்டை முழுதாக ஆக்கிரமிப்பது.

– சாளுக்கிய நாட்டைத் தவிர்த்து, வடகிழக்காகப் படையெடுத்துச்சென்று, வங்காளம் வரை கைப்பற்றுவதன் மூலம் வங்காள விரிகுடாவில் கடலாதிக்கத்தை உறுதிப்படுத்துவது. பிறகு முடிந்தபோது ஸ்ரீவிஜயத்தையும் கைப்பற்றி, இந்து சமுத்திரத்தில் அசைக்க முடியாத கடலாதிக்கத்தைப் பூரணப்படுத்துவது.

நிலவழித் தந்திரோபாய ரீதியில் சிந்திப்பவர்களும், முற்கோபம் மற்றும் கவுரவம் என்பவற்றின் அடிப்படையில் முடிவெடுப்பவர்களுமான அக்கால அரசர்கள் பலரும் முதலாவது தெரிவையே விரும்பியிருப்பார்கள். ஆனால், அத் தெரிவின் மூலம் இரு தரப்புக்கும் பெரும் சேதம் ஏற்படுத்தக்கூடியதும் நெடுங்காலம் இழுபடக்கூடியதுமான போர் மூண்டிருக்கும். அன்றைய உபகண்டத்தின் மிகப் பலமான இரு அரசுகள் சோழநாடும் சாளுக்கிய நாடும். எனவே, முழு சாளுக்கிய நாட்டையும் ஆக்கிரமிக்கச் சோழர்கள் தமது பலம் முழுவதையும் செலவழிப்பதோடு பெரும் சேதத்தையும் எதிர் நோக்க வேண்டியிருக்கும். அத்தோடு, இது சாத்தியப்பட்டாலும் வடமேற்கே இருந்து படையெடுத்து வந்து கொண்டிருந்த மிகப்பலம் வாய்ந்த கஜனி முகம்மதுவை நெருங்குவது புத்திசாலித்தனமாக இருக்காது. இவையெல்லாவற்றையும் விட மேலாக, தரைவழி ஆதிக்கத்தை விடவும் கடலாதிக்கத்தை நிறுவுவதும் பாதுகாப்பதும் அதன்மூலம் வணிக ஆதிக்கத்தை நிறுவுவதுமே உலக வல்லரசொன்றை அமைக்கும் வழிகள் என்பதை ராஜேந்திரன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆகவே பின்வந்த ஆங்கிலேயர்கள் செய்ததை, இன்று சீனர்கள் செய்ய முயல்வதை, அதாவது கடலாதிக்கம், கடல்வழி வணிக ஆதிக்கத்தின்மூலம் உலக வல்லரசாக ஓங்குவதை, ராஜேந்திரன் 11ம் நூற்றாண்டிலேயே முயன்றிருக்கிறான்.

மேலும், வட மேற்கே படையெடுத்துச் சென்றால் சாளுக்கியர்களின் எதிரிகளான பரமாரர், காலச்சூரிகள் போன்றவர்களின் படைவலுவைப் பாவிக்க முடியாது. சாளுக்கியர்களின் இதயபூமி தாக்கப்பட்டால் அவர்களின் படை முழுவதும் தெற்கே திரும்பிச் சோழர்களை எதிர்க்கும். ஆகவே இழப்புகள் சோழருக்கே ஏற்படும். அப்படித் தாக்காவிட்டால் சாளுக்கியர்கள் சோழர்களின் நண்பர்களுடன் வடக்கே சண்டையிடுவார்கள். இது ராஜேந்திரன் இழப்புகளைக் குறைக்கும்.

இவையெல்லாவற்றையும் யோசித்தே, ராஜேந்திரன் தனது கங்கைப்படையெடுப்புக்கான பாதையை வட கிழக்காக நிர்ணயித்திருக்க வேண்டும். ஆனால் இதிலே ஆபத்தும் இருந்தது. தோற்றோடிய சாளுக்கியர்கள், சோழர் படைகள் வடக்கே சென்றதும் மீள வந்து வேங்கியைக்கைப்பற்றி, சோழர் படைகளையும் பின்னால் இருந்து தாக்கலாம் என்பதுதான் அந்த அபாயம். எனவே இராஜேந்திரன் இன்னுமொரு பெரும் படையுடன் கோதாவரி வரை வந்து, வேங்கியில் நிலை கொண்டிருக்க, அரையன் ராஜராஜன் வேங்கியில் ஏற்கனவே இருந்த சோழர் பெரும்படையுடன் வடக்கே செல்வது என்று திட்டம் வகுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் படி அரையன் ராஜராஜன் முதலில் சாளுக்கிய நாட்டின் கிழக்கு எல்லையில் அமைந்த பாதுகாப்புக்கோட்டைகளையும், சாளுக்கியருக்குச் சிற்றரசாக இருந்த மாசுணி நாட்டையும் தாக்குவது; பஞ்சப்பள்ளி, மதுர மண்டலம், நாமணைக்கோணம் போன்ற இடங்களைக்கைப்பற்றி மாசுணி தேசத்தைப் (தெலங்கானா ) பிடிப்பது. சக்கரக் கோட்டத்தைக் (பாஸ்டார், சத்தீஸ்கர்) கைப்பற்றுவது; பிறகு வட கிழக்காக ஒட்ட நாட்டுக்குள் (ஒடியா) படையெடுத்துச் சென்று அதன் தலைநகரான யயாதி நகரைக் (ஜாஜ்பூர்) கைப்பற்றுவது. பிறகு தண்டபுத்தியைக் (கோரக்பூர் பிரதேசம்) கைப்பற்றுவது, பிறகு மகிபாலன், ரணசூரன் ஆகியவர்களை முறியடித்து தக்ஷிண லாடம் (ஜார்கண்ட்), உத்தர லாடம் (மேற்கு வங்கம்) ஆகியவற்றைப் பிடிப்பது, இறுதியாக வங்காள தேசத்தை (கிழக்கு வங்கம் அல்லது தற்போதைய பங்களாதேஷ் ) பிடித்து விக்கிரமபுரி ( டாக்காவிற்கு அருகிலுள்ள முன்ஷிகஞ்) வரையில் கைப்பற்றுவது; இதன்மூலம் (தற்போதைய) அம்பாந்தோட்டையில் இருந்து டாக்கா வரை வங்காள விரிகுடாவின் மேற்குக்கரையிலுள்ள துறைமுகங்களில் சோழர் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது: இவ்வாறு முடிவெடுத்திருக்க வேண்டும். இதுவே அரையன் ராஜராஜனின் பாதையாக அமைந்தது. இப்பாதையில் சோழர்களுக்குப் பெரும் சேதத்தை விளைவிக்கக்கூடிய வலிமையான அரசர்கள் அச்சமயம் இருக்கவில்லை என்பதும் சோழர்களுக்குத் தெரிந்திருந்தது.

இந்தப் பாதையானது, முதலாம் ராஜேந்திரன் மெய்க்கீர்த்தியில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது:

“பீடியல் இரட்ட பாடி ஏழரை
இலக்கமும் நவநிதிகுலப்பெரு மலைகளும்
விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமும்
முதிர்பட வல்லை மதுர மண்டலமும்
காமிடை வளைய நாமணைக் கோணமும்

வெஞ்சிலை வீரர் பஞ்சப் பள்ளியும்
பாசுடைப் பழன மாசுணித் தேசமும்
அயர்வில்வண் கீர்த்தி யாதிநக ரவையில்
சந்திரன் தொல்குலத் திந்திர ரதனை
விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப்

பலதனத் தொடுநிறை குலதனக் குவையும்
கிட்டருஞ் செறிமிளை யொட்ட விக்ஷயமும்
பூசுரர் சேர்நல் கோசல நாடும்
தன்ம பாலனை வெம்முனை யழித்து
வண்டமர் சோலை தண்ட புத்தியும்

இரண சூரனை முறணுறத் தாக்கித்
திக்கணைக் கீர்த்தி தக்கண லாடமும்
கோவிந்த சந்தன் மாவிழிந் தோடத்
தங்காத சாரல் வங்காள தேசமும்
தொடுகடல் சங்கு கொட்டன்மகி பாலனை

வெஞ்சமர் வளாகத்து அஞ்சுவித் தருளி
ஒன்திறல் யானையும் பெண்டிர்பண் டாரமும்
நித்தில நெடுங்கடல் உத்தர லாடமும்
வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்…”

எனவே சோழர்களின் கங்கைப்படையெடுப்பானது ஆழமான தந்திரோபாயம் மற்றும் தயார்ப்படுத்தலுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று கருத இடமிருக்கிறது.

படம் 1: அரையன் ராஜராஜனின் பாதை அதாவது முதலாம் வடதிசைச் சோழ சைனியத்தின் பாதை (சிவப்பு). இரண்டாம் வடதிசைச் சோழ சைனியத்தின் பாதை (ஊதா ). Route of Arayan Rajarajan (Red).

கொசுறுத் தகவல்:

“பிறகு ராஜா சுரன் சீனத்தை வெற்றிகொள்ளத் தீர்மானித்தார். இதற்காக அவரிடம் சிற்றரசர்களாயிருந்த ராஜாக்களும், படைவீரர்களும் திரண்டனர். இவ்வாறாகத் திரண்ட 1002 இலட்சம் போர்வீரர்கள் கொண்ட மாபெரும் படையுடன், ராஜா சுரன் சீனத்தின்மேல் படையெடுத்துச் சென்றார். அவரது படைகள் சென்ற பாதையில், காடுகள் திறந்த சமவெளிகளாயின. நிலம் அதிர்ந்தது; மலைகள் நகர்ந்தன; குன்றுகள் சம நிலம் ஆயின; பாறைகள் துண்டுதுண்டாகிப் பறந்தன. பெரிய ஆறுகள் வற்றிச் சேறாயின. இரண்டு மாதங்களுக்கு அவர்கள் தரிக்காது முன்னேறினர். அவர்களின் கவசங்களின் ஒளியினால் மிக இருண்ட இரவிலும் நிலவு வெளிச்சம் உண்டானது. அவரின் போர்வீரர்களும் தளபதிகளும் செய்த ஓசையினாலும், யானை குதிரைகள் போட்ட கூச்சலினாலும், இடி முழக்கத்தின் ஒலி கூட மழுங்கடிக்கப்பட்டது. ராஜா சுரன் தான் கடந்த ஒவ்வொரு நாட்டையும் வென்று தன் ஆணைக்கு உட்படுத்தினார். இவ்வாறாக அவர் கங்கை நகரத்தை அடைந்தார். “

ராஜேந்திர சோழனின் கங்கைப் படையெடுப்பைப்பற்றி “செஜாரா மலாயு” என்ற மலேசிய ராஜவம்ச சரித்திரத்தில் செய்யப்பட்டுள்ள வர்ணனை.

இப்பதிவின் மூன்றாம் பாகத்தைக் காண இங்கே அழுத்துக.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *