தேற்றம்
மெய்ப்பொருள் காண்
தேற்றம் அமைப்பு, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் இயங்கி வரும் ஒரு பல்துறைத் தேடல் குழுமமாகும். இதன் செயற்பாட்டு மொழியும் தொடர்பாடல் மொழியும் தமிழாகும். இவ்வமைப்பு 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிறுவப்பட்டு 2018 இன் முற்பகுதியில் தனது செயற்பாடுகளைத் தொடங்கியது. தமிழ்ச் சமுதாயத்தில் நிலவும் பரவலான மூட நம்பிக்கைகளையும், தவறான புரிதல்களையும், அறிவியலுக்கு முரணான போக்குகளையும் களைந்து, செப்பமான தகவல் பரிமாற்றத்தையும், தர்க்கரீதியான, அறிவியலுக்குப் பொருந்தக்கூடிய விவாதங்களையும், தெளிவான, காத்திரமான சிந்தனைப்பாங்கையும் ஊக்குவிப்பது இவ்வமைப்பின் நோக்கமாகும். “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று சொன்ன வள்ளுவன் வாக்கே உண்மையான தமிழ்ச் சிந்தனை மரபின் அடையாளம் என்று நம்பும் இவ்வமைப்பு, “மெய்ப்பொருள் காண்” என்பதைத் தனது மகுட வாக்கியமாக வைத்திருக்கிறது.
தோற்றுவாய்
இன்றைய நவீன அவசர உலகத்திலே, செய்திகளையும் தகவல்களையும் நின்று நிலைத்து ஆராய்ந்து அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிசெய்வதற்கு யாருக்கும் நேரமில்லை. இதனால், பலவகையான பொய்த் தகவல்களும் திருத்தமற்ற தகவல்களும் வதந்திகளும் இணையத்திலும், முகப்புத்தகம் முதலிய சமூக ஊடகங்களிலும் உலாவருகின்றன. அவற்றின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க வேண்டிய இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களும் கூட, செய்தி சேகரிப்புக்கு நிருபர்களை விட இணையத்தை அதிகம் நம்புவதால், கிளிப்பிள்ளை போல இந்த நம்பகமற்ற தகவல்களைத் திருப்பிப் பரப்புகின்றன. சரியான ஆதாரங்களைக் கூறாது “நன்றி: இணையம்” என்று ஒருவரியில் சொல்லி விட்டுப்போகிற தன்மையும் மேலோங்குகிறது: ஏதோ, இணையத்தில் வந்தாலே சரியாகத்தான் இருக்கும் என்பது போல. இந்த வழியிலே பரப்பப்படுகிற பொய்த்தகவல்கள் மற்றும் போலி அறிவுகளுக்குச் சில உதாரணங்கள் சுகாதாரம் மற்றும் நோயியல் தொடர்பான தான்தோன்றித் தனமான பொய்த்தகவல்கள் (இந்தக்காயை சாப்பிட்டால் புற்றுநோயிலிருந்து தடிமன் வரை எல்லாம் மாறிவிடும்), குமரிக்கண்ட மாயை, கோயில்கள் மற்றும் சமயம் தொடர்பான பொய்த்தகவல்கள் (இந்தக்கோயிலின் நிழல் நிலத்தில் விழுவதில்லை என்று நாசா கண்டுபிடித்திருக்கிறது!), கள்ளச்சாமியார்கள் புகழ் பாடல், தகவல் தொழில்நுட்பம் தொடர்பிலான பொய்த்தகவல்கள் இத்தியாதி. இதனால், உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகமானது மூடநம்பிக்கைகள், பொய் புரட்டுகள், அரைகுறை விளக்கம் என்பன சேர்ந்த சேற்றுக்குழியில் விழுந்து கொண்டிருக்கிறது.
ஒளியை ஏற்படுத்தித்தான் இருளை அகற்ற முடியும். அதுவும், எந்த ஒளியும் இல்லாத இடத்தில் சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றுவதே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த எண்ணத்தோடு சிட்னியில் சில தமிழ் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து ஏற்படுத்திய தேடல் குழுமம் தான் தேற்றம்.
பெயர்க்காரணம்
கணிதம் முதலிய துறைகளில், “தேற்றம்” என்ற சொல்லுக்கு “மிகுந்த ஆராய்ச்சியின் பின் சந்தேகத்திற்கு அப்பால் நிறுவப்பட்ட முடிவு” என்று பொருள். ஆங்கிலத்திலே theorem என்பார்கள். தமிழிலே தேற்றம் என்பதற்கு “துன்பங்களில் இருந்து விடுபட்டு ஆறுதல் அடைதல்: தேறுதல்” என்றும் பொருளுண்டு. ஆகவே, எமது சமூகத்தின் துன்பங்களுக்கு அறிவியலைப்பரப்புவதன் மூலம் விடிவு காண முற்படும் குழுமத்துக்கு “தேற்றம் அமைப்பு” என்று பெயரிட்டோம்.
சார்புகளும் எதிர்நிலைகளும்
தேற்றம் அமைப்பானது பொய்த்தகவல்களின் பரம்பலுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் எதிரானதே அன்றி எந்தச் சமயத்துக்கோ, இனக் குழுமத்துக்கோ, சமூகத்திற்கோ எதிரானதல்ல. தேற்றம் அமைப்பின் அங்கத்தவர்களில் பெரும்பாலோர் தனிப்பட்ட ரீதியில் சமய நம்பிக்கை உடையவர்களே என்பதோடு ஒன்றுக்கு மேற்பட்ட சமய நம்பிக்கைகளை உடையவர்கள் தேற்றம் அமைப்பின் உறுப்பினராக உள்ளனர். அதேபோல் தமிழ் ஆர்வலர்கள் பலர் தேற்றம் அமைப்பின் உறுப்பினர்கள். ஆனால், இந்து சமயம் அல்லது வேறொரு பிரதான சமயத்தில் உண்மையில் இல்லாத கருத்துக்களும் மூடநம்பிக்கைகளும் அந்தச் சமயத்தின் பெயரால் பரப்பப்படும் போது, அல்லது அறிவியலும் சமய நம்பிக்கைகளும் தேவையற்ற விதத்தில் கலக்கப்படும் போது, அல்லது தமிழ் மொழி மற்றும் தமிழ்ச் சமுதாயம், வரலாறு பற்றி அர்த்தமற்ற பொய்யுரைகள் புகழுரைகள் பரப்பப்படும் போது, உண்மை நிலையைத் தெளிவு படுத்துவதில் தேற்றம் அமைப்பு ஆர்வமுடையது. “பொய்யறிவில் இருந்து என்றும் நன்மை விளையாது” என்பது தேற்றத்தின் நிலைப்பாடாகும். எனவேதான் “மெய்ப்பொருள் காண்” என்பது தேற்றம் அமைப்பின் மகுட வாக்கியம் ஆகும்.
நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள்
தேற்றம் அமைப்பின் எதிர்காலத் திட்டங்கள் பலவாயினும் தற்போதைக்குப் பயிலரங்குகள் (workshops), கருத்தரங்குகள், துறைசார் நிபுணர் உரைகள், மற்றும் மாணவர் நிகழ்ச்சிகள் மூலம் தமிழ்ப் பொதுமக்கள் மத்தியில் அறிவியலைப் பரப்புவது அதன் குறுகிய காலத் திட்டமாகும். இவ்வாறான நிகழ்வுகள் மருத்துவம், உயிரியல், கணனி விஞ்ஞானம், எந்திரவியல், பௌதீகம், இரசாயனம், வானியல், கணிதம், தமிழர் வரலாறு, மொழியியல், உளநலம் முதலிய அறிவியலின் எல்லாத்துறைகள் சார்ந்தும் அமையும்.
தேற்றத்தின் முதலாவது பொதுமக்களுக்கான நிகழ்ச்சியாக “சிசுக்கள், குழந்தைகள், சிறுவர்களின் சுகாதாரப் பிரச்சினைகளும் தீர்வுகளும்: ஒரு வழிகாட்டல் செயலமர்வு” எனும் நிகழ்வு தூங்காபியில் பெப்ருவரி மாதம் நடைபெற்றது. மகப்பேற்று மருத்துவ நிபுணர் அன்பழகன், பொது மருத்துவ நிபுணர் தவசீலன், பொதுமருத்துவ நிபுணர் சிவகௌரி சிவகுமார் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர். தொடர்ந்து கலந்துரையாடலும், தேநீர் விருந்தும் இடம்பெற்றது.
நிகழ்விலிருந்து சில நிழற்படங்கள்