‘கல் தோன்றி, மண் தோன்றாக்’ கதை

சமீபத்தில், தமிழ் மொழி மற்றும் சைவ சமயத்தின் பெருமைகள் பற்றி முக நூல், மற்றும் இணையத் தளங்களில் பல பதிவுகள் உலா வருகின்றன. புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் எங்களுடைய பள்ளிக் குழந்தைகளுக்கு, தமிழின் பெருமைகள் பல சொல்லிக் கொடுக்கப் படுகின்றன. முக்கியமாக, வார இறுதிகளில் நடை பெறும் தமிழ்ப் பள்ளிகளில் இந்தக் கைங்கரியம் நடை பெறுகிறது. தமிழ் வளர்த்த புலவர்கள், சான்றோர்கள், பேச்சாளர்களின் பெயரால் பல மாநாடுகள் நடை பெறுகின்றன. இவற்றில் தமிழ் இளையோர் பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர்; கட்டுரைகள் வாசிக்கின்றனர். அறிஞர்கள் உரையாற்றுவதைக் கேட்கின்றனர்.

இவை எல்லாம் மிக முக்கியமான, மிகத் தேவையான விடயங்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இந்தச் செயற்பாடுகளால் தமிழ் இளையோர்களது அறிவும் தமது பாரம்பரியத்தில் அவர்கள் கொண்டிருக்கக் கூடிய பெருமையும் வளர்கின்றன என்பதிலும் சந்தேகமில்லை. இந்த நியாயமான பெருமையும் ஈடுபாடும் உண்மையான, நம்பத் தகுந்த, விஞ்ஞான பூர்வமான தரவுகளில் இருந்து வந்திருக்க வேண்டும். தர்க்க ரீதியாக நிறுவத் தக்கனவாயும் நடு நிலையான அறிவாளர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியனவாயும் இருக்க வேண்டும். இன்றைக்கு நடக்கின்ற சில பேச்சுகளையும், இணையத்தில் பகிரப் படும் பல தகவல்களையும் பார்க்கிற போது, உண்மையில் இந்த வழியை நாம் பின்பற்றுகிறோமா என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.

தமிழ் மொழி பற்றியும் தமிழர்கள் பற்றியும் பெருமைப் பட்டுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது. சந்தேகமேயில்லை. அறம் பொருள் இன்பம் என்கின்ற மூன்று பால்களில் வாழ்க்கையின் ஒவ்வொரு முகத்தையும் ஊடுருவிப் பார்க்கிற திருக்குறளைத் தந்த மொழி தமிழ். அரசியல், பொருளாதாரம், படை வகுப்பு, கல்வி, செல்வம், நட்பு, வாய்மை, குடும்ப வாழ்க்கை, காதல் இன்பம் என்று எத்தனையோ விடயங்களைப் பற்றி மிக நுணுக்கமான அவதானிப்புகளைத் திருக்குறள் தருகிறது. திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறள்களும் அதிஷ்ட வசமாக எமக்குக் கிடைத்திருப்பதால் திருக்குறளின் இருப்பைப் பற்றிச் சந்தேகப் பட ஏதுமில்லை. இதே போல், தொல்காப்பியத்தை எடுத்துக் கொண்டால், ஒரு மொழியின் இலக்கண மரபுகளைத் தெளிவாக அறுதியிட்டுக் கூறும் அத்தைகைய நூல் பல மொழிகளில் இன்றளவுமே இல்லை. தமிழ் மொழியில் அத்தைகைய நூல் ஒன்று வெகு காலத்திற்கு முன்பே இருந்ததென்பது (தொல்காப்பியத்தின் சரியான காலம் எதுவாக இருந்தாலும், அது ஒரு தொன்மையான நூல் என்பதில் யாரும் சந்தேகப் பட முடியாது) வியக்க வைக்கிற விடயம். இது மாதிரி, தமிழர்கள் பெருமைப் பட்டுக் கொள்வதற்குச் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விடயங்கள் பல இருக்கின்றன – அவற்றை விரிப்பது இங்கு எனது நோக்கமில்லை. இவையெல்லாம் இருக்கும் போது, அறிவுக்குப் பொருந்தாத, அல்லது இலகுவில் நம்ப முடியாத பல கதைகளைத் தமிழின் / தமிழரின் பெருமைகள் என்ற பெயரில் இளைய உள்ளங்களில் புகுத்துகிற நடவடிக்கைகள் சங்கடப் பட வைக்கின்றன.

நல்ல உதாரணம், சமீப காலமாக இணையத்தில் உலாவி வருகின்ற குமரிக் கண்டம் / லெமூரியா பற்றிய தகவல்கள். இந்தக் குமரிக் கண்டம் ‘புராணத்தில்’ பல ‘வடிவங்கள்’ இருந்தாலும் உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம். இன்றைக்குப் பல ஆயிரம் (சில பேர் பல லட்சம், கோடி என்றும் சொல்வர்) ஆண்டுகளுக்கு முன்னே இலங்கையையும், மடகாஸ்கரையும், அவுஸ்திரேலியாவையும் தொடுக்கின்ற முக்கோண வடிவக் கண்டம் ஒன்று இருந்தது. அது தான் குமரிக் கண்டம். அதிலே தமிழரின் பேரரசொன்று நிலை பெற்றிருந்தது. இது ‘பனி யுகம்’ காரணமாகக் கடல் மட்டம் குறைந்திருந்த போது இருந்த கண்டமாகும். பனி யுகத்தின் முடிவிலே கடல் மட்டம் அதிகரித்த போது இக்கண்டம் கடலில் மூழ்கி விட்டது. இருந்தாலும் இந்து சமுத்திரத்தின் அடியிலே இக்கண்டம் இன்றும் இருக்கிறது. இக்கண்டம் இருந்ததாகக் கூறப் படும் இடத்திலே இன்றும் கடல் நீர் மட்டம் குறைவாகும். பல கட்டட இடி பாடுகளையும், இன்னும் பல தொல்லியல் சான்றுகளையும் அராய்ச்சியாளர் இந்தக் கண்டம் இருந்த இடத்தில் (தற்போது இந்து சமுத்திரம்) கண்டு பிடித்துள்ளனர். இந்த குமரிக்கண்டம் இருந்த காலத்தில் இந்தியாவும் இலங்கையும் நிலத்தால் இணைந்திருந்தன. பல மேற்கத்தைய விஞ்ஞானிகள் இந்தக் குமரிக் கண்டத்தின் இருப்பை ஒத்துக் கொள்வதோடு, அதை ‘லெமூரியா’ என்று அழைக்கின்றனர். இது தான் கதை.

இதில் உண்மைகள் எவை, கற்பனைகள் எவை என்பதை மேலோட்டமாகக் கொஞ்சம் பார்க்கலாம். பூமியில் பனி யுகங்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன என்பதும், இறுதிப் பனி யுகம் கிட்டத் தட்டப் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு முடிவுற்றது என்பதும் விஞ்ஞான பூர்வமான உண்மைகளே! பனி யுகம் ஒன்று நிலவும்போது கடல் நீர் மட்டம் குறைந்திருக்கும் என்பதும், பனி யுகங்கள் முடியும் போது கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் என்பதும் வெளிப்படை உண்மைகள். இறுதிப் பனி யுகத்தின் போது இந்தியாவும் இலங்கையும் நிலத்தால் தொடர்புற்றிருந்தன என்பதும், இந்த நிலத் தொடர் சமீப காலம் வரை இருந்து வந்தது என்பதும் உண்மை தான். ஆகவே, கடந்த பத்தாயிரம் வருடங்களுக்குள் இந்தியா – இலங்கையைச் சுற்றி இருந்த நிலப் பரப்புகள் பல கடலில் மூழ்கிப் போயின என்பது விஞ்ஞான பூர்வமான உண்மையேயாகும். அதே போல, பூமியின் வரலாற்றில் கண்டங்கள் நகருதல் காலத்திற்குக் காலம் இடம் பெற்று வந்திருக்கிறது என்பதும் விஞ்ஞான பூர்வமான உண்மையேயாகும். எனவே, தமிழ் நாகரீகம் சிறந்தோங்கி வளர்ந்த கண்டம் ஒன்று இந்தியாவிற்குத் தெற்கே இருந்து கடலில் மூழ்கிப் போயிற்றென்று சொல்லப் படும் கதை, மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு உண்மையாக இருக்குமென்றே தோன்றுகிறது.

எங்கே உதைக்கிறது என்றால், இந்தக் கடல் நீர் மட்ட உயர்ச்சி எந்த அளவுகளுக்குச் சாத்தியம் என்று யோசிக்கிற போது தான். சாதாரணமாக, பனி யுகங்களின் போது கடல் நீர் மட்டம் சில நூறு மீட்டர்கள் வரை குறைவாயிருக்கும். இருபதாயிரம் வருடங்களுக்கு முன்பு கடைசிப் பனி யுகத்தின் உச்சத்தில் கடல் மட்டம் நூற்றிருபது மீட்டர்கள் இன்றிருந்ததை விடக் குறைவாயிருந்தது என்று விஞ்ஞானம் சொல்கிறது. அப்படி இருக்கும் போது தற்போது ‘கண்ட மேடை’ (continental shelf) என்று சொல்லக் கூடிய பிரதேசங்கள் கடலுக்கு வெளியே இருப்பது சாத்தியம். ஆகவே இந்தியா – இலங்கையைச் சுற்றிச் சில கிலோ மீட்டர்கள் வரை கடல் பின்வாங்கி இருந்திருக்கும். இந்து சமுத்திரத்தின் அடிப் பிரதேசம் இந்தப் பனி யுகத்தின் போது வெளியே தெரிந்திருப்பது சாத்தியமில்லை. அது பல ஆயிரம் மீட்டர் ஆழமானது – உலகின் மிக ஆழமான கடல் பிரதேசங்களில் ஒன்று. அந்த இடத்தில் தற்போது கண்ட மேடை எதுவும் காணப் பட வில்லை. கிட்டத் தட்ட உலகில் கடல் நீரே இல்லாமல் போகும் அளவுக்குக் குளிர் இருந்திருந்தால் அன்றி, வெறுமனே குளிர் கால நிலையின் மூலம் அந்த இடத்தில் கண்டம் ஒன்று மேலெழுவது / மேற்தெரிவது சாத்தியம் இல்லை.

எனவே, குமரிக் கண்டம் என்று சொல்லப் படும் பெரும் கண்டம் ஒன்று இருந்திருந்தால் அது அந்த இடத்திலிருந்து நகர்ந்து போயிருக்க வேண்டும். கண்டங்கள் நகர்வது பூமியின் சரித்திரத்தில் நிகழ்ந்திருக்கிறது என்றாலும் அது மிகவும் மெதுவாக, பல மில்லியன் வருடக் கால அளவுகளிலேயே நடக்கிறது. உதாரணமாக, இந்தியத் துணைக் கண்டம் வடக்கு நோக்கி நகர்ந்து இமய மலையை உருவாக்கியது சுமார் நாற்பத்தைந்து மில்லியன் வருடங்களுக்கு முன் நிகழ்ந்திருக்கிறது. இதைக் கேட்டு விட்டுத் தான் குமரிக் கண்ட வாதிகள் “அப்படி இந்தியா வடக்கே நகர்ந்த போது அதனோடு சேர்ந்திருந்த நிலப் பரப்புக் கடலில் மூழ்கி இருக்கலாம்” என்கின்றனர். அப்படியே நடந்திருந்தாலும், பூமியில் மனித குலம் (H. sapiens) தோன்றியது வெறும் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே (சில விஞ்ஞானிகள் 2-3 லட்ஷம் ஆண்டு வரை போகின்றனர்) . கட்டடக் கலை முதலிய நாகரிகத்தின் அடையாளங்களுடன் எந்த இனமும் சில பத்தாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்திருக்க முடியாது. கண்டங்கள் நகர்வது என்பது சில மணித்தியாலங்களில் நடக்கும் செயற்பாடு என்று வைத்துக் கொண்டால் மனித இனம் தோன்றி வளர்ந்ததென்பது ஒப்பீட்டளவில் சில நிமிடங்களில் அல்லது செக்கன்களில் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டு கால அட்டவணைகளுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. இதுபோல, உண்மையான மேலைத் தேய விஞ்ஞானிகள் யாரும் குமரிக் கண்ட / லெமூரியாக் கொள்கையை ஒத்துக் கொள்ளவும் இல்லை. லெமூரியாக் கோட்பாட்டைத் தூக்கிப் பிடித்தவர்களில் மேலை நாட்டவர்கள் இருந்தாலும் அவர்களுக்கும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. விரிவஞ்சி, அவர்களின் பின்புலத்தைப் பற்றிய ஆராய்ச்சியை ஆர்வமுள்ள வாசகர்கள் கையில் விட்டு விடுகிறேன்.

ஆகவே,தற்போதுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் குமரி என ஒரு பெருங்கண்டம் இந்தியாவையும் ஆபிரிக்காவையும் அவுஸ்திரேலியாவையும் இணைத்து இருந்ததென்றும் அதிலே தமிழர் நாகரிகம் தழைத்து ஓங்கியதென்றும் கூறப் பார்ப்பது விஞ்ஞான முகமூடி போட்டு உலாவுகிற வெறும் கற்பனைதான் என்றுதான் படுகிறது.

குமரிக் கண்டம் பற்றிய புனை கதைகளை ஏற்கனவே பல தமிழ் ஆர்வலர்கள் ஆதாரங்களுடன் போட்டு உடைத்திருக்கிறார்கள். என்னை விட மிக அதிக நேரம் செலவு செய்து, தகுந்த ஆதாரங்களுடன் விரிவாக ஆராய்ந்து இந்தக் கதையிலுள்ள உண்மை பொய்மைகளை விளக்கியிருக்கிறார்கள். உதாரணமாக சு. கி. ஜெயகரன் அவர்கள் காலச் சுவடு இதழில் எழுதியிருக்கும் கட்டுரையைப் பார்க்கலாம். தமிழ் எழுத்தாளர், அல்லது இலக்கிய கர்த்தா என்று நிச்சயமாகச் சொல்லத் தக்கவரும் மேலைத் தேசக் கல்வியால் மூளைச் சலவை செய்யப் பட்ட விஞ்ஞானி என்று நிச்சயமாகச் சொல்ல முடியாதவருமான ஜெயமோகன் அவர்கள் கூட நடுநிலையோடு இதைப் பற்றி எழுதியிருக்கிறார். ஒரே ஒரு தரம் இணையத்தில் தேடுகை செய்தால் இந்தக் கட்டுரைகள் எல்லாம் கிடைக்கும். எனவே கண்மூடித் தனமாகக் குமரிக் கண்டக் கோஷத்தில் இறங்குவதன் முன்பு கொஞ்சமாவது மெய்ப் பொருள் தேடுதல் நன்று அல்லவா?

குமரிக் கண்ட வாதத்துடன் தொடர்பு பட்ட, அடிக்கடி நாக்குகளிலே புரண்டெழும் இன்னுமொரு கோஷம் – “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” என்று எம்மைச் சொல்லிக் கொள்ளுவது. இப்படிச் சொல்லுவதிலே தவறு ஒன்றும் இல்லை – நான் கூடப் பல மேடைகளிலே தமிழின், தமிழரின் பெருமையையும் பழமையையும் பேசும்போது இப்படிக் கூறியிருக்கிறேன். ஆனால், நாங்களெல்லாம் பேசும் போது இதை அப்படியே உண்மை என்று கருதிக் கூறவில்லை. தமிழ்க் கவிமரபில் மிகைப் படுத்திக் கூறலும் இல்லாததொன்றை உருவாக்கிக் கூறலும் புதிதல்ல. “இல்பொருள் உவமை” என்று அணியிலக்கணத்தில் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். உதாரணமாக “வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம்” என்று கம்பராமாயணத்தில் அனுமன் சொன்னதால் இலங்கையில் சந்திரனைத் தொடும் கட்டடங்கள் இருந்தன என்று பொருளா? அப்படியில்லை – கம்பன் கூட அப்படி நம்பி அதைச் சொல்லவுமில்லை. “மிக உயரமான கட்டடங்கள்” என்பதைத்தான் கம்பன் கவித்துவத்துடன் அப்படிச் சொன்னான். கம்பன் காலத்தில் தமிழ் ஆராய்ந்த புலவர்களுக்கு அது புரிந்திருந்தது. இது வெறும் உவமை – ரசிப்பதோடு விட்டு விடு; அப்படியே எடுக்காதே.

ஆனால் இன்றைக்குக் கிளம்பியிருக்கிற தமிழார்வ ‘ஆராய்ச்சியாளர்கள்” இப்படிக் கவிதைகளிலே, செய்யுள்களிலே வருகின்ற விடயங்களை அப்படியே நம்பும்படி எங்கள் இளையோருக்குச் சொல்லிக் கொடுப்பதாகப் படுகிறது. இந்தப் பூமி தோன்றி எவ்வளவு காலம்? விஞ்ஞானப் படி கிட்டத் தட்ட அறுநூறு கோடி வருடங்கள். நெருப்புக் கோளமாக இருந்த பூமி குளிர்ந்த போது பாறைகள் தோன்றியிருக்கும். எனவே பாறைகளின் வயது கிட்டத் தட்ட முன்னூறு – நானூறு கோடி வருடங்கள் எனலாம். பாறைகளில் இருந்து மண் தோன்றுவதற்கு நீர் அரிப்பும் காற்றும் காரணங்கள். ஆகவே கடல்கள் உருவாகிச் சற்றுப் பின், அல்லது முதல் சிறு வகைத் தாவரங்கள் தோன்றிய காலத்தில், முதல் மண்ணும் உருவாக்கி இருக்கும் என வாதிடலாம். எப்படியும் ஆகக் குறைந்தது இன்றைக்கு அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்னேயாவது முதல் மண் உருவாகியிருக்க வேண்டும். இது ஒரு வகையான குத்து மதிப்புத் தான். இந்தக் குத்து மதிப்பின் படி பார்த்தால் இன்றைக்கு முன்னூறு முதல் அறுபது கோடி வருடங்களுக்கு முன்பு, ‘கல் தோன்றி ஆனால் மண் தோன்ற முன்பு’, தமிழ்ச் சாதி தோன்றியிருக்க வேண்டும்.

தமிழரை விடுவோம். உலகில் முதன் முதலில் மனிதன் தோன்றியது எப்போது? விஞ்ஞான ஆராய்ச்சியின் படி, முதலாவது மனிதன், ஹோமோ இரேக்டசு முதலியோர் கூட, அதிகமாக மிக அதிகமாகப் போனாலும் பத்து லட்சம் ஆண்டுகளுக்கு உள்ளேயே தோன்றியிருக்க வேண்டும் என்று ஐயம் திரிபற நிறுவப் பட்டிருக்கிறது. ஹோமோ சேப்பியன் சேப்பியன் என்ற நவீன மனிதனின் ‘வயது’ வெறும் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு உள்ளேயே! அவுஸ்திரேலியா முதலிய இடங்களில் வாழும் ஆதிக் குடிகள் சுமார் அறுபதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்ததாக அறிந்திருக்கிறார்கள். உலகின் முதற் குடிகளைத் “தமிழர்” என்று வரையறுத்தாலும் (மொழியே பேசாத ஒரு மக்களைப்
பிற்காலத்திய மொழி ஒன்றின் பெயரால் வரையறுப்பது அபத்தம் என்பதைச் சற்று மறந்து விடுவோம்) தமிழரின் வரலாறு ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு உட்பட்டது – பல நூறு கோடி அல்ல! கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலே தமிழன் கிடக்கட்டும் – மனிதன் கிடக்கட்டும் – குரங்கு கிடக்கட்டும் – டைனோசர்கள் கூடப் பூமியிலே தோன்றவில்லை. பெரிய மரங்கள் கூடத் தோன்றவில்லை. கடலுக்குள்ளே சில நுண்ணுயிர்களும் சிறு தாவரங்களும் மட்டுமே தோன்றியிருக்க முடியும்.

கல்லையும் மண்ணையும் விட்டு விட்டு வாளுக்கு வருவோம். வாள் என்பது உலோகத்தால் – குறிப்பாக இரும்பால் – செய்யப் படுவது. உலகில்
மனிதன் முதலில் தோன்றிய போது உலோகங்களை உருக்கவோ பயன் படுத்தவோ அறிந்திருக்கவில்லை. உலோகப் பாவனை என்பது மிகப் பின் வந்தது. ‘இரும்பு யுகம்’ என்பது இன்றைக்குக் கிட்டத் தட்ட மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு தான் தொடங்கியிருக்கிறது. உலகிலுள்ள எந்த இனமும் அக்காலத்தில் தான் வாளை எடுத்திருக்க முடியும். முன்னூறு கோடி (3,000,000,000) வருடங்கள் எங்கே? மூவாயிரம் (3,000) வருடங்கள் எங்கே? இரண்டும் சேர்த்து முடிச்சுப் போடப் படுகிற போது, அதை ‘அறிவியல்’ என்றும் ‘ஆதார பூர்வமான உண்மை” என்றும் சொல்லுகிற போது , கற்றவர்கள் முகம் சுழிப்பது தவிர்க்க முடியாதது. குத்துமதிப்பாகப் பார்த்தால், மேற் குறிப்பிட்ட ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து வாளொடு….’ கவிதை, ஒரு மில்லியன் மடங்கு (1,000,000) உண்மையை ஊதிப் பெரித்தாக்கி இருக்கிறது (முதன் முதலில் ஒரு கவிதையின் zoom factor ஐ அளந்தவர் என்ற பெருமை எனக்குக் கிடைக்கட்டும்… ஹி ஹி). ஆனால் அது கவிஞனின் தப்பில்லை. அவன் வாக்கை அப்படியே அறிவியலாக மாற்றுபவர்களைத் தான் நோக வேண்டும்.

இப்படி ஆர்வக் கோளாறிலே (பெரும் பாலும் நல்ல நோக்கத்துடன்) பரப்பப்படுகிற இன்னுமொரு செய்தியைப் பார்ப்போம். இது உண்மையாக இருக்கச் சந்தர்ப்பங்கள் குமரிக் கண்டத்தை விடக் கொஞ்சம் அதிகம் – இருந்தாலும் ஆய்வுக்கு நின்று பிடிக்காததாகவே இருக்கிறது. இராஜேந்திர சோழனின் சேனையிலே இருபது இலட்சம் வீரர்கள் இருந்தார்களாம். இப்படிச் சொல்லுகிற ஒரு குறிப்பு இன்றைக்கு முகப் புத்தகத்திலே மிக வேகமாகப் பரவி வருகிறது. இராஜேந்திர சோழனின் இராணுவ, அரசியல், கட்டடக் கலை மற்றும் நிர்வாகச் சாதனைகள் மிகவும் வியக்கத் தகவை. இதில் ஐயம் இல்லை. இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் தமிழ் நாட்டிலிருந்து கங்கை வரையிலும், கடாரம் வரையிலும் படை எடுத்துச் சென்றது நம்ப முடியாமல் இருந்தாலும், உண்மையில் நடந்தது தான். ஏனெனில் இதற்கு இராஜேந்திரனின் கல் வெட்டுகள் மட்டுமல்ல, வங்க நாடு முதலிய பல நாடுகளின் அரச பரம்பரைக் குறிப்புகளும் கல்வெட்டுகளும் பிற ஆதாரங்களும் சான்றாக இருகின்றன. ஆனால் அவன் படையில் இருபது இலட்சம் வீரர்கள் இருந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆதாரம் ஒரு பக்கம் இருக்க, இது சாத்தியமா என்று யோசித்துப் பார்க்க வேண்டாமா? இந்தியத் துணைக் கண்டமானது ஒரு வளம் மிகுந்த கண்டமாக இருந்த போதிலும் இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் இந்திய சனத் தொகை 70 – 80 மில்லியன் எனவே ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள். இதில் மொத்தமாகத் தமிழர்களின் தொகை மிக அதிக பட்சம் 7 – 8 மில்லியன்களுக்கு மேல் இருந்திருக்க முடியாது (இன்றைய இந்திய சனத் தொகையில் கிட்டத் தட்டப் பதினாறில் ஒரு நபர் தமிழர். கேரளத்தைச் சேர்த்துக் கொண்டால் இந்த விகிதம் சற்று அதிகரிக்கும் என்றாலும், இன்றைய பாகிஸ்தான் வங்காளம் முதலிய பிரதேசங்களின் சனத் தொகை பண்டைய இந்தியாவின் சனத் தொகையில் சேர்ந்திருக்கலாம் என்பதையும் நோக்க வேண்டும்). எனவே (அகண்ட) சோழ நாட்டுச் சனத் தொகையே மிக அதிக பட்சமாக 4 மிலியன் வரை தான் இருந்திருக்க முடியும். இவர்களில் உடல் வலிவுள்ள ஆண் மக்கள் ஒரு மில்லியனுக்கு மேல் இருந்திருக்க முடியாது. அந்த நாளில் போர்க் காலங்களில் உடல் வலிவுள்ள ஆண்களையெல்லாம் படையிலே சேர்த்துக் கொள்ளுவது வழக்கமாக இருந்தது என்பது உண்மையே. இருந்தாலும் ராஜேந்திரன் செய்திருக்கும் கட்டடக் கலை, நீர்ப்பாசனம், அரசியல் சாதனைகளைப் பார்க்கும் போது அவன் வெறுமனே போர் வெறி பிடித்த, நாட்டிலுள்ள ஆண்களையெல்லாம் படையிலே சேர்த்துப் பலியிடக் கூடிய அரசனாக இருக்கவில்லை என்பது வெளிப் படை. சிற்பிகள், தச்சர்கள்,கம்மாளர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், அந்தணர்கள் முதலியோரில் பெரும்பாலனவர்கள் போருக்குப் போயிருக்க முடியாது. பாண்டிய பல்லவ நாடுகளில் மட்டுமன்றி கன்னடம் முதலிய தேசங்களிலும் இருந்து இராசேந்திரன் படையில் வீரர்கள் சேர்ந்து கொண்டார்கள் என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் இருக்கின்றன. இருந்தாலும் இராசேந்திரன் வெற்றி கொண்ட இந்தத் தேசங்களில் இருந்து அவன் படையில் ஆண் மக்கள் சேர்ந்து கொள்ளுவதென்பது விதி விலக்காக நடந்திருக்க முடியுமேயன்றி விதியாக நடந்திருக்க முடியாது. எனவே கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது சோழர் படையானது சுமார் ஐந்து லட்சம் பேரளவு வலிமையுடையதாக இருந்திருப்பதே யதார்த்தம். இலங்கையில் நிலை கொண்டிருந்த கொண்டிருந்த சோழர் படையானது அதன் உச்ச வலிமையிலே சுமார் ஒரு லட்சம் பேரளவு வலிமை உடையதாக இருந்ததாக மகா வம்சம் கூறுகிறது. இது ஐந்து லட்சம் என்ற மொத்தக் கணக்குடன் பொருந்துவதாகவே படுகிறது. உண்மையில் இராசேந்திரன் படை எவ்வளவு பெரியது என்பது இங்கே கேள்வி அல்ல. “இருபது லட்சம்” என்று ஒருவர் சொல்லுகிற போது அதை நம்புவதற்கு முன்னால் மேல் குறிப்பிட்டது போல அறிவைச் செலுத்தி ஆராய்ந்து பார்க்கிறோமா என்பதே முக்கியம். பெரும்பாலானவர்கள் செய்வதாகத் தெரியவில்லை. எனவே “மெய்ப் பொருள் காண்பது” என்பதிலே கோட்டை விட்டு விடுகிறோம்.

பொதுவாக, தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் சமீபத்தைய விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்களை எள்ளி நகையாடும் பாங்கு சமீப காலமாக (முக்கியமாக இணையத்தில்) அதிகரித்து வருகிறது. புதிதாக என்னத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள், அதன் தொழில் நுட்பத் தார்ப்பரியங்கள் எவை, அதைக் கண்டு பிடிப்பதற்கு என்னென்ன விடயங்களைப் பற்றிய முன்னறிவு இருந்திருக்க வேண்டும், இதையெல்லாம் புரிந்து கொள்ளாமலேயே அல்லது புரிந்து கொள்ள முயலாமலேயே “உது எங்களுக்கு முந்தியே தெரியும்” என்று முகப் புத்தகத்தில் எழுதி விடுகிற ஒரு பாணி மேம்படுகிறது. இப்படிக் கூறுபவர்களுக்குப் பொதுவாக (விதிவிலக்குகள் உண்டு) தமிழ் அறிவு இருக்கிற அளவு விஞ்ஞான அறிவு இருப்பதில்லை என்பது ஒரு புறம் இருக்க, தமக்கு எது தெரியும், எது தெரியாது, எதைப் பற்றியெல்லாம் தாங்கள் கருத்துக் கூறப் பொருத்தமானவர்கள் என்பவற்றைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப் படுவதாகவும் தெரியவில்லை. “எங்களுடைய முன்னோர்கள் எப்போதோ சொன்னதைத் தான் இப்போது மேலைத்தேய விஞ்ஞானிகள் புதிதாகக் கண்டு பிடிக்கிறார்கள்” என்று மிகச் சுலபமாக முடிவு கட்டி விடும் இவர்கள் தங்கள் கருத்துக்களை மறுத்து உரைப்பவர்களைத் தமிழின விரோதிகளாகவே காண்கின்றனர்.

நிச்சயமாக, தமிழ் இனம் தனது பங்கிற்கு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் விஞ்ஞானிகளையும் தொழில் நுட்ப விந்தைகளையும் காலத்திற்குக் காலம் அளித்தே வந்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சி. வீ. ராமன், சுப்பிரமணியம் சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் போன்ற நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் தமிழர்கள். பெரிய விஞ்ஞானியாக மட்டுமன்றி அருமையான மனிதராகவும் வாழ்ந்து மறைந்த அப்துல் கலாம் ஐயா அவர்களும் தமிழர் தான். இன்றைய நாளில் மட்டுமன்றிப் பண்டை நாளிலிருந்தே பல அரிய தொழில்நுட்பக் கண்டு பிடிப்புகள் தமிழரிடம் இருந்து வந்திருக்கின்றன. ‘கணைக் கால்’ என்ற பெயரில் சேரனிடம் இருந்ததாகச் சொல்லப் படும் இயந்திரங்கள் உண்மையில் ஒரே நேரத்தில் பல அம்புகளை ஏவக் கூடிய பொறி விற்கள் என்பது புலப் படுகிறது. மரக் கலம் ஓட்டும் கலையில் சோழர்கள் பல சாதனைகள் படைத்ததை யாரும் மறுக்க முடியாது. ‘கட்டு மரம்’ என்ற சொல் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்குப் போயிருக்கிறது என்பதும் நம்பத் தகுந்ததே. ஆனால் இதையெல்லாம் சொன்னவுடன், “நம்மிடம் அந்தக் காலத்தில் விமானங்களும் இருந்தன; ஏவுகணைகள் இருந்தன; அணு ஆயுதங்கள் இருந்தன” என்று ஆர்வலர்கள் கிளம்பி விடுகின்றனர். பொறி விற்கள் பற்றி இலக்கியங்களில் சொல்லி இருப்பதை நம்பலாம். ஏனென்றால் அந்தக் காலத்தில் உருக்கு இருந்தது. விற்கள் இருந்தன. சக்கரத்துடன் ஓடக் கூடிய வாகனங்கள் இருந்தன. எனவே பொறி வில்களைத் தயாரிப்பதென்பது கொஞ்சம் உழைப்பு, மூளை, மூலதனம் இவற்றுடன் சாத்தியமாகக் கூடியதொன்று. மறுவளமாக, எரிபொருட் பாவனையோ, சிக்கலான கலப்பு உலோகங்களோ கண்டு பிடிக்கப் படாமல் விமானம் சாத்தியமா? விமானம் ஓட்டுமளவு வலுவுடைய இயந்திரங்கள் இருந்திருப்பின் தரைப் போக்குவரத்திற்கும் அந்தத் தொழில்நுட்பத்தைப் பாவிக்காமல் யானை குதிரையை நம்பியதேன்? இது ஒரு வெறும் உதாரணம் தான். ஒரு இனம் என்ற அளவில் விஞ்ஞான தொழில் நுட்பத் துறைக்கு நாம் எங்கள் பங்களிப்பைச் செய்தே இருக்கிறோம். எல்லாவற்றையும் நாங்கள் தான் கண்டு பிடித்தோம் என்று சொல்வது பொருத்தமில்லை; பெருமையும் இல்லை.

குமரிக் கண்டம் உண்மையிலேயே இருந்திருந்தால், அதைக் கற்றறிந்த நடுநிலையான விஞ்ஞானிகள் ஆதாரத்துடன் நிறுவுவார்களாக இருந்தால், என்னை விடச் சந்தோஷப் படுபவர்கள் யாரும் இருக்க முடியாது. அதேபோல, தமிழின் தொன்மை பற்றியோ, தமிழ் அரசர்களது பெருமைகள் பற்றியோ, தமிழர்களது விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள் பற்றியோ, ஆதாரத்துடன் நிறுவப்படும் விடயங்கள் பற்றியும் நான் மிகுந்த பெருமை அடைவேன். ஆனால், தான்தோன்றித் தனமாகப் பழம் பெருமை பேசுவது தமிழர்களுக்கு உயர்வாகாது. எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. தமிழர்களின் உண்மையான பொக்கிஷங்களில் தலையாயதான திருக்குறள் சொன்னது இது.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *