கவிவிதை

விழிமைந்தனின்  கவிவிதைகள் | தேற்றம் வெளியீடு

அறிமுகம்

‘கவிவிதை’ என்பது தமிழுக்கு ஒப்பீட்டளவில் புதிய வடிவமாகும். ‘பாட்டிடையிட்ட உரைநடை’ என்பது சிலப்பதிகார காலத்திலிலேயே வழக்கிலிருந்தாலும் ‘கவிவிதைகள்’ ஒவ்வொன்றும் உள்ளடக்கத்தில் தன்னிறைவு உடையவை என்றவகையில் வெறுமனே உருவத்தால் மட்டும் வரையறுத்துவிட முடியாதவையாகும். உள்ளடக்கத்தில் சிறுகதைகளையும், உருவத்தில் கவிதை நடையையும் கதைசொல்லற் பாங்கான உரைநடையையும் ஒத்தவை என்பதோடு தமக்குள்ளே முழுக்கவிதை ஒன்றுக்கு அல்லது கதை ஒன்றுக்கு விதையாக அமையக்கூடிய செய்திகளையும் தாங்கியவை கவிவிதைகள். எனவே கதை, கவிதை, விதை ஆகிய சொற்கள் இணைந்து ‘கவிவிதைகள்’ என்றாயின.

இது என்னுடைய பரிசோதனை முயற்சி. யாழ் பல்கலைக்கழக வாழ்நாட் பேராசிரியர் சண்முகதாஸ் ஐயா அவர்கள் இந்நூலை ஆழ்ந்து வாசித்து ஊக்கப்படுத்தியதோடு அருமையானதொரு முகவுரையும் உதவியிருக்கிறார்.  தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் மாலன் நாராயணன் அவர்கள் கனதியானதொரு அணிந்துரையைக் குறுகிய காலத்தில் எழுதி வழங்கியிருக்கிறார்.  அவ்வாறே பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலை முன்னாள் அதிபர் கவிஞர் சோ. பத்மநாதன் அவர்கள் சுவைத்து வாசித்து நயப்புரை  வழங்கியுள்ளார். இவர்களுக்குப் பெரிதும் நன்றியுடையேன். ‘கவிவிதைகள்’ நூலுருப் பெற முன்பு அவுஸ்திரேலியாவில் இருந்து வரும் ‘தமிழ் முரசு’ மின்னிதழில் தொடராக வெளிவந்தன. தமிழ் முரசு ஆசிரியர் குழுவினருக்கும் குறிப்பாக ஸ்தாபக ஆசிரியர் செல்லையா பாஸ்கரன் அவர்களுக்கும் நன்றிகள் பல.

அறிமுகத்தை நீட்டிக்கொண்டு போக நான் விரும்பவில்லை. நூலை வாசித்துப்பாருங்கள். உங்கள் அபிப்பிராயங்களை அறியத்தாருங்கள்.

அன்புடன்,
விழிமைந்தன்

பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களின் முகவுரை

ம. பிரவீணன் ‘விழி மைந்தன்’ என்னும் புனை பெயரில் எழுதிய கவிவிதைகள் என்னும் நூல் ஒரு புதுமையான இலக்கிய ஆக்கமாக அமைகின்றது. “கவியாகவும், கதையாகவும், கவிதைக்கு விதையாகவும் சொல்லக்கூடிய ஒரு பரிசோதனை வடிவம் என்பதால் ‘கவிவிதைகள்’ என்று தலைப்பிட்டுள்ளேன்” என்று தன் நூலின் தலைப்புப்பற்றி ஆசிரியர் விளக்கம் தந்துள்ளார். பிரவீணனுடைய கவிவிதைகளைப் படித்தபோது எனக்கு கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் எழுந்த இறையனார் களவியல் உரையில் ஒரு பகுதி, கமலாம்பாள் சரித்திரத்தில் இராஜமையர் ஓரிடத்திலே கடலோசை பற்றி எழுதிய உரைப்பகுதி, சுப்பிரமணிய பாரதியின் வசனகவிதை ஆகியன நினைவுக்கு வருகின்றன. காலத்தால் முற்பட்ட இறையனார் களவியலுரையில் பின்வரும் உரைப்பகுதியை நோக்குக:

சந்தனமும் சண்பகமும் தேமாவும் தீம்பலவும்
ஆசினியும் அசோகும் கோங்கும் வேங்கையும்
குரவமும் விரிந்து, நாகமும் திலகமும் நறவும் நந்தியும்
மாதவியும் மல்லிகையும் மௌவலோடு மணங்கமழ்ந்து,
பாதிரியும் பாவைஞாழலும் பைங்கொன்றையும் பிணியவிழ்ந்து,
பொரிப்புன்கும் புன்னாகமும் முருக்கொடு முகைசிறந்து,
வண்டறைந்து தேனார்ந்து வரிக்குயில்கள் இசைபாட,

இந்த உரை பற்றி பேராசிரியர் வி. செல்வநாயகம் தன்னுடைய தமிழ் உரைநடை வரலாறு நூலில்,

“இவ்வுரைப் பகுதியின்கண் இடையிடையே எதுகை மோனை முதலிய
ஓசைப் பண்புகள் வாய்ந்த சொற்றொடர்கள் வந்துள்ளன. அவற்றைப்
பொருளறிந்து படிக்கும்போது செய்யுளொன்றைப் படிக்கும் நேரத்தில்
எம்மிடத்தில் உண்டாகும் உணர்ச்சி எத்தகையதோ அத்தகையதோர்
உணர்ச்சி எம்மனத்தில் எழுகின்றது.”

பிரவீணனடைய முதலாவது கவிவிதையிலே பின்வரும் வரிகள் இடம்பெறுகின்றன:

“மாற்றம் ஒன்றே மாற்றம் இலாதததாய், எதிலும் எதனாலும் கட்டப் படாததாய,;
எவரின் காலிலும் தேங்கி நிற்காததாய், நெல்லுக்கும் புல்லுக்கும் நீரைத் தருவதாய்,
ஓடும் நதி ஒரு வரலாறு”

இதனைப் படிக்கும்போது ஒரு செய்யுளைப் படிப்பது போலவுள்ளது. அவ்வரிகளை பின்வருமாறு ஐந்து அடிகளாக அமைத்தும் படிக்கலாம்:

“மாற்றம் ஒன்றே மாற்றம் இலாதததாய்
எதிலும் எதனாலும் கட்டப் படாததாய்
எவரின் காலிலும் தேங்கி நிற்காததாய்
நெல்லுக்கும் புல்லுக்கும் நீரைத் தருவதாய்
ஓடும் நதி ஒரு வரலாறு.”

‘கவிவிதை’ என்பதிலே கவிதை இருக்கிறது. கதை இருக்கிறது. விதை இருக்கிறது. கவிதைகளாகவும் கதைகளாகவும் துளிர்க்கக்கூடிய இருபத்தெட்டு எழுத்துவிதைகளை பிரவீணன் இந்த நூலிலே தந்துள்ளார். இறையனார் களவியல் நூலிலே உரையும் பாட்டும் இருக்கின்றன. ஆனால் பிரவீணனுடைய ஆக்கத்திலே கவியும் கதையும் இருக்கின்றன. யாராவது கவி-கதை உள்ளமுடைய ஒருவர் ஆறுதலாக இருந்து பிரவீணனுடைய நூலிலுள்ள ஆக்கங்களைக் கவிகளாகவும் கதைகளாகவும் அல்லது கவிக்கதைகளாகவும் உருவம் கொடுத்து அமைக்க முற்படலாம். இனிமையான மகிழ்வளிக்கக்கூடிய செயற்பாடாக இருக்கும் என நம்புகிறேன்.

பிரவீணனுடைய எடுத்துரைப்பும் காட்சிப்படுத்தலும் சிறப்பாக அமைகின்றன. “மீளா அடிமை” என்னும் கவிவிதையிலே ஒரு தேவதாசிப் பெண்ணை அவர் எப்படிக் காட்சிப்படுத்துகிறார் என்று பாருங்கள்:

சேலைப் பழித்தன, கொலை வேலைப் பழித்தன அவள் கண்கள்.
வானில் நின்றது முழுநிலா அவள் நுதலோ சின்னப் பிறைநிலா!
கன்னங்கள் பொன்னென மின்னின.

தேறலும் கருப்பஞ்சாறும் சேர்த்துப் பிளிற்றின செக்கச் சிவந்த இதழ்கள்.

அவள் புன்னகை கண்டு பொறாமை கொண்டன அவள் அணிந்திருந்த
பொன்னகைகள்!

தங்கநிறத் தாமரை மொட்டுகளின் பாரம் தாங்காமல் சிற்றிடை பரிதவித்தது.

மேகம்போல் கறுத்துப் பளபளத்த கருங்கூந்தல் மின்னல் இடையைக் கடந்தது
கடந்த கூந்தலைத் தொடர்ந்து பார்த்தவர்கள் கண்வழி நெஞ்சில் இடிஇடித்தது!

இரண்டு உவமைகளைப் பயன்படுத்தும் போக்கினை சேலையும் வேலையும் கண்கள் பழித்தன என்பதிலே காண்கிறோம். சின்ன நெற்றிக்கு சின்னப்பிறைநிலா உவமையாகக் கூறப்படுகிறது. அவள் கூந்தலைத் தொடர்ந்து பார்த்தவர்களுக்கு இடி கண்வழியாகச் சென்று நெஞ்சிலே இடிக்கின்றதாம். இது ஒரு புதுவகையான நெஞ்சிடி.

தன்னுடைய கவிவிதைகளூடாக நாம் ஒரு தடவை நின்று நிதானித்து மனம் கொள்ளவேண்டிய பலவற்றை நமக்குப் புலப்படுத்திவிதுகிறார். ‘முச்சந்திநாய்’ என்னும் கவிவிதை அதனுடைய சண்டித்தனத்தை மாத்திரமன்றி அதுவும் முகப்புத்தகத்தில் ஒரு கணக்குத் திறந்துவிடுகிறது. இதனூடாக ஆசிரியர் எதனை உணர்த்துகிறார் என்பதை நாம் நன்றாக விளங்கிக்கொள்ளக்கூடியதாக உள்ளது.

இரண்டு தலைப்புகள் புனைகதைகளுக்கு இடும் வழக்கம் முன்னர் இருந்தது. 1929இல் எழுதப்பட்ட ஒரு நாவலின் தலைப்பு ‘சரஸ்வதி அல்லது காணாமற்போன பெண்மணி’ என்பதாகும். பிரவீணன் 21ஆம் 22ஆம் கவிவிதைகளுக்கு இரண்டு தலைப்புகள் கொடுத்துள்ளார். 21ஆவது ‘நாடும் காடும் அல்லது தாம்பத்தியம்’ எனவும் 22ஆவது ‘முக்கால் பங்கும் முட்டாள் மந்தையும்’ (இன்னுமொரு தலைப்பு: ‘நரியின் தேற்றமும் எரியும் தேசமும்’) எனவும் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பிரவீணனுடைய கவிதை வீச்சினைப் பல இடங்களிலே கண்டுள்ளேன். ஆனால் 21ஆவது கவிவிதை ‘நாடும் காடும் அல்லது தாம்பத்தியம்’ என்பதில் இனிய இயற்கையான காட்டையும், விவசாயத் தொழில் மேலோங்கும் நாட்டையும் முறையே ஆணாகவும் பெண்ணாகவும் உருவகித்து இந்த கவிவிதையை அமைக்கிறார். கவிஞன் இயற்கையைக் காணுவதிலுள்ள அழகும் குதூகலமும் கவிவிதைகளாகின்றன. வகைமாதிரிக்கு அவனாகிய இயற்கையின் வசந்த காலம் கவிஞரின் மனதைக் கொள்ளைகொள்கின்றது. நாமும் அதைக்கண்டு மகிழ,

வசந்த காலம் வந்தபோது மரங்கள் பூத்தன. வனத்தில் வாழும் பறவை யாவும் பாடிக் களித்தன.

அசைந்து செல்லும் ஓடை நீரின் அழகைப் பாரடீ! ஆலங் கிளையில் தேனும் சொட்டும் ஓசை கேளடீ!

குளத்தங்கரையில் காட்டு முல்லை கொட்டிச் சுகந்தம் வீசுது.

இளையகாடு இனிமையன்றோ? எந்தன் காட்டில் வாழ வா!

என்று காட்சிப்படுத்துகிறார். இத்தகைய கவி வீச்சுகளை இந்தத் தொகுதியிலே படித்து மகிழலாம்.

இது ஒரு நல்ல பரிசோதனை முயற்சி. வழக்கமான கவிதைகளைப் படித்தவந்த நமக்கு இது ஒரு புதுமையாக அமைகிறது. இதனை மேம்படுத்தி இன்னும் இனிய புதிய கவிவிதைகளை பிரவீணன் தரவேண்டுமென வாழ்த்தி இச்சிறு முகவுரையை நிறைவு செய்கிறேன்.

பேராசிரியர் இலக்கிய கலாநிதி அ. சண்முகதாஸ்
தகைசார் வாழ்நாட் பேராசிரியர் (தமிழ்)
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

 

கவிஞர் சோ. பத்மநாதன் (சோ. ப) அவர்கள் வழங்கிய நயப்புரை

விழிமைந்தனுடைய கவிவிதை ஒரு சிறுகதைத் தொகுப்பா? நாவலா? நன்னெறிக் கதைத் திரட்டா? சமூகத்தின்மீது வைக்கப்படும் அங்கதமா? நீதிக் கதைத் தொகுதியா? அரசியல் விமர்சனமா? தத்துவ விசாரமா? உள்ளடக்கத்தால் இப்படிப்பட்ட சிந்தனைகளைக் கிளர்த்தும் கவிவிதையின் வடிவத்தை எந்த வகையில் அடக்கலாம்? கவிதையா? உரைப்பாவா? உரைநடையா? அல்லது இவை யாவும் இடையிடும் புது வடிவமா?

ஓர் ஊரில், ஒரே தெருவில் எதிர் எதிராக இருந்த வீடுகளில் வாழ்ந்தவர்கள் அந்நண்பர்கள். எதிர் எதிர் வீடுகள் என்பது சரியல்ல. ஒன்று மாளிகை; மற்றது குடிசை. இருவரும் ஒரே பள்ளியில் – ஒரே வகுப்பில் – படித்தவர்கள். பள்ளிக்கூட வாசலில் கடலை விற்கும் ஆச்சியிடம் ஒரு சுருள் வாங்கி அடித்துப் பிடித்துக் கொறித்தவர்கள்.

ஒருவன் பல்கலைக் கழகம் போனான். சில புள்ளிகள் போதாமையால் மற்றவன் பின்தங்கி விட்டான். பல்கலைக் கழகம் போனவன் ஒரு டாக்டரை மணந்தான். மற்றவன் வறுமைப் பட்ட அத்தை பெண்ணைக் கட்டிக் கொண்டான்.

குடிசையில் பிறந்த குழந்தை அப்பன் புரண்ட அதே தெருப் புழுதியில் புரண்டது. குரும்பட்டியையும் குண்டுமணியையும் வைத்து விளையாடியது. தம்பலப் பூச்சியையும் மின்மினியையும் கார்த்திகைப் பூவையும் பார்த்துக் கைகொட்டி மகிழ்ந்தது. மாளிகையில் பிறந்த குழந்தை புட்டிப் பாலோடு பாதாம் பருப்பும் சொக்கலேற்றும் சுவைத்தது. வைன் பண்ணி இயக்கும் விளையாட்டுப் பொருள்களை வைத்து விளையாடியது. வேலைக்காரி ஊட்டிய உணவை வேறு வழியின்றி உண்டது. பஞ்சணை மெத்தையில் உறங்கியது.

செல்லக் குழந்தைக்குப் பொம்மைகளோடு விளையாடி அலுத்துப் போய்விட்டது. அப்பா அம்மாப் பொம்மை வேண்டுமென்று அடம் பிடிக்கிறது . “தன்னைத் தோளில் காவும் அப்பாப் பொம்மை. நிலா க் காட்டிச் சோறூட்டித் தாலாட்டும் அம்மாப் பொம்மை” என்று கேட்கிறது.

வீதியின் நடுவில் நின்றபடி இரண்டு வீட்டையும் மாறிமாறிப் பார்த்த நாய்க்குட்டி யோசித்ததாம், ‘இந்தப் பக்கம் போவோமா, அந்தப் பக்கம் போவோமா?’

***

கல்லூரிக் காலம் நிறைவுறும் கட்டத்தில் ‘சோஷல் ‘நடக்கிறது. கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள் அது. இக்காலம் மீட்டும் வராதா என்று ஏங்கும் இளசுகள். ‘கிடைப்பதெல்லாம் இழப்பதற்கும் இணைவதெல்லாம் பிரிவதற்கும், கட்டுவதெல்லாம் உடைவதற்கும் என்றால் வாழ்வே வெறும் நினைவும் கனவும் தானா?’ சிந்தனை வயப்பட்டு நிற்கிறான் ஒரு மாணவன். அவன் காலடியில் பச்சையும் சிவப்பும் மஞ்சளும் ஊதாவும் வெள்ளையும் நீலமுமாய் சொரிந்து கிடக்கும் காசித்தும்பை. நிமிர்ந்து பார்க்கிறான். கல்லூரி கட் டப்பட்ட காலத்து வேப்பமரம் !’ இந்த வேப்ப மரம் போலக் கல்லுரித் தாயைப் பிரியாது வாழ முடிந்தால்…’ இளைஞன் நெஞ்சில் ஏக்கம் ! “என்னைப் பார்த்துப் பொறாமைப் படுகிறாயா மகனே? நான் காலடியில் நிற்கும் காசித்தும்பைகளைப் பார்த்துப் பொறாமைப் படுகிறேன். ஒவ்வொரு கணமும் புதுப் புது வண்ணக் கோலம் கொள்கின்றன அவை. காற்று வீசும் போதெல்லாம் இதழ் சொரிகின்றன. ஒவ்வொரு மழைத் துளிக்கும் மகிழ்கின்றன. ஒவ்வொரு சூரிய உதயத்திலும் விகசிக்கின்றன. இவ்வாழ்வு இன்னொருமுறை வராது என்பதை உணர்ந்து கொண்ட படியால், ஒவ்வொரு விநாடியையும் அனுபவிக்கின்றன. நீ மானுடன். உன் சோகம் கூட அர்த்தமுள்ளதாய் இருக்கிறது. ஆனால் நான்? காலம் என்பது எனக்குச் சுமையாகிவிட்டது. பழுத்து உதிராமல் தொங்கும் என் இலைகளின் சுமை அதிகரிக்கிறது !” அத்துடன் அமையாமல் — ‘மரணம் என்பது இறைவன் தந்த வரம். ஒரு முடிவு. ஒரு முழுமை. முடிவுகளை ஏற்றுக்கொள்!’ என்று தத்துவம் பேசுகிறது வேம்பு.

***

அடிமை என்ற கதை புரட்சிகரமானது. எஜமானின் வயலை உழவும் மாடுகளை மேய்க்கவும் பல்லக்கைச் சுமக்கவும் விதிக்கப் பட்டிருந்தது அவனுக்கு.

அவன் மகன் மாற்றத்துக்குப் பிறந்தான். கிராமத்துப் பாடசாலையில் கல்வி கற்றான். அரசாங்கத்தில் சிற்றூழியன் ஆனான். மெல்ல மெல்ல முன்னேறினான். அடிமையின் பேரன் உயர் கல்வி கற்றான். வெளி நாடு ஒன்றில் வேலை பார்த்தான். பாரீஸுக்கும் டோக்கியோவுக்கும் பறந்தான். கருத்தரங்குகளில் கலந்துகொண்டான். பதவி உயர்வுகள் பெற்றான். ஆனால் மனைவி மக்களோடு இருந்து ஆற அமரப் பேசி மகிழ நேரமின்றி அலைந்தான். புத்தனுக்கு வந்ததுபோல் அவனுக்கும் ஒருநாள் ஞானம் வந்தது .”என் பாட்டன் நிலப்பிரபுவுக்கு அடிமை. நான் யாருக்கு அடிமை?” அடிமை விலங்கை ஒடிக்க ஒருவன் புரட்சி செய்வதே இக்கதையின் தொனிப்பொருள். ஆனால் விடுதலை பெற்றவன் புத்தடிமை ஆகும் முரண்நகை கதையை அடுத்த தளத்திற்கு நகர்த்தி அற்புதம் செய்கிறது.

***

தேசத்துரோகம் என்ற கவிவிதை இரண்டாம் உலகப் போரின் சில கள முனைச் செய்திகளை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டது. போர் என்ற பூதம் வழியில் எதிர்ப் படுவனவற்றை எல்லாம் துவம்சம் செய்துகொண்டு வருகின்றது. ”விட்டுக் கொடுக்காதீர்கள். எதிர்த்து நில்லுங்கள்” என்பது இந்தப் பக்கத்துத் தளபதியின் கட்டளை. ஆனால் போதிய துப்பாக்கிகள் இல்லை. முன்னேறினால் நெருப்பைப் பொழியும் எதிரியின் யந்திரத் துப்பாக்கிகள். பின்வாங்கினால் முதுகில் சுடும் தளபதிகள். இவற்றுக்கிடையில் — செத்த பிணத்தோடு பிணமாய்க்கிடந்து உயிர் தப்பியது மட்டுமின்றி எதிரியின் யந்திரத் துப்பாக்கியோடும் முகாமுக்குத் திரும்புகிறான் செர்க்கெய். பாராட்டும் பரிசும் பொழிகிறார் மன்னர். பல களங்களில் சாதனை புரிந்த செர்க்கேய், ஈற்றில் முதுகில் சுடப்பட்டு ”வீரச்சா” அடைகிறான். அரச மரியாதைகளோடு அவன் உடல் புதைக்கப்படுகிறது. நினைவுக்கல் நடப்படுகிறது.

இக்கவிதை போரின் கொடுமையைச் சொல்வதை விட, மனிதன் சக மனிதனுக்கு இழைக்கும் கொடூரத்தைச் சொல்லி அதிர்ச்சி தருகிறது.

***

வித்தியாசமான – யதார்த்தமான கவிவிதை அகதி. யுத்தம் துரத்தச் சொந்தக் கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்து செல்வபுரத்துக்கு வந்தவன் சேந்தன். முகாமில் தஞ்சமடைய அவன் பெற்றோரின் மத்தியதர வர்க்கக் கெளரவம் இடம் தரவில்லை. ஒரு இரண்டறை வாடகை வீட்டில் குடியேறுகிறார்கள். எதிரே ஒரு செல்வந்தர் வீடு. அங்கு சேந்தனை ஒத்த வயதினனான வாசன். அவர்கள் பார்வையில் சேந்தன் வீடு அகதிகள் வீடு.

சேந்தன் நன்றாகப் படித்து முன்னேறினான். பொறியியலாளன் ஆனான். மேனாட்டில் – ஒரு கம்பனியில் வேலை. வாசனுக்குப் படிப்பு வரவில்லை. தந்தை ஒரு முகவரைச் சரணடைந்து வெளிநாட்டுக்கு அனுப்பினார். தாய் நாட்டில் சித்திரவதைக்கு உள்ளானதாக முறையிட்டு வாழ்வுதவி பெற்றான். கடை ஒன்றில் சம்பளத்துக்கு நின்று படிப்படியாக கடை முதலாளி ஆனான். வரி ஏய்ப்புச் செய்து வளம் சேர்த்தான். சொந்த ஊரில் ஒரு மாளிகை கட்டினான். சேந்தனால் சொந்த ஊர் திரும்ப முடியாதே! செல்வபுரத்தில் ஒரு சிறிய காணி வாங்கித் தன் தங்கைகளுக்காகச் சிறிய வீடொன்று கட்டினான். வாசனுடைய சித்தப்பா கேட்கிறார் ”வாசன் உந்த அகதிகள் வீட்டுப் பெடியனும் நீ இருக்கிற நாட்டிலைதானே இருக்கிறான், சின்ன வீடாய்க் கட்டி இருக்கிறான். ஏன் ,அவனுக்கு உழைப்புப் போதாதோ ?” —  ”அவர் சின்ன வேலைதான் பார்க்கிறார். நான் கன பிஸ்னெசுகள் செய்யிறன். என்னாலை அதிக முதலீடு செய்ய முடிகிறது!” என்ற வாசனின் பதில் காதில் விழவே சேந்தன் சிரித்துக் கொள்கிறான்.

அகதிகளில் தான் எத்தனை ரகம்! போலிக் கெளரவம், வீம்பு என்று குப்பை மேட்டைக் கோபுரமாக்கும் மனிதர்கள்!

***

‘அன்பின் நிறம்’ தாழ்த்தப்பட்ட ஒரு ஏழைப் பெண்ணுடைய கதை .நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பு கோலோச்சிய காலம் அது. சொந்தக் காணியோ வீடோ இல்லை. ஊருக்குப் பெரிய மனிதரை அண்டி, அவருடைய வீட்டுத் தொழும்பு செய்து காலம் கழித்தாள் அவள். மிக இளம் வயதில் பெற்றோர் அவளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். சிறிது கால வாழ்வில் கணவனையும் அவனுக்குப் பிறந்த பிள்ளையையும் இழந்து தனிமரமானாள். அவள் ஊழியம் செய்த ஊர்ப்பெரியவர் வீட்டுக் குழந்தை மேல் கொள்ளை அன்பு அவளுக்கு.

காலம் உருண்டது. தாழ்த்தப்பட்ட அம் முதியவளின் இனத்தவர்கள் விழிப்படையத்தொடங்கினர். தமக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தட்டிக் கேட்கத் தொடங்கினர். உயர்வு – தாழ்வு பேணும் சமூக ஒழுங்கை அனுசரித்தே பழகிப்போன அந்தக்கிழவி, மாற்றங்களால் எந்த விதத்திலும் பாதிக்கப் படாமல் சீவித்து வந்தாள். ஊர்ப்பெரியவரின் மகன் டொக்டராகி அமெரிக்காவில் வாழ்ந்தான். அமெரிக்கப் பெண்ணான லிசாவை மணந்தான். பத்து வருட மண வாழ்க்கை. அவள் டொக்டரை விட்டு வேறொருவனுடன் ஓடிவிட் டாள். டொக்டர் சொந்த ஊரை – காணிபூமியைப் – பார்க்க நாடு திரும்புகிறார். வெங்காய விதைப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு புளிய மர நிழலில் இருந்த கிழவிக்கு நடவு செய்யும் பெண்கள் டாக்டரைக் காட்டுகின்றனர். டாக்டரும் நிழல் தேடி, புளிய மரத்தடிக்கு வருகிறார். உண்மையில் அவருக்குச் சின்னியை ஞாபகம் இல்லை. சம்பிரதாயத்திற்கு ” எப்பிடி சுகமா இருக்கிறியளா? ” என்று கேட்கிறார். ”தங்களைக் காணுவன் எண்டு நினைக்கேல்லை. இண்டைக்குக் கண்டிட்டன். இனி நான் செத்தாலும் பரவாயில்லை ! ”என்கிறாள் கிழவி”. “டாக் டர் அழுது விட்டார்” என்று கதையை முடிக்கிறார் விழிமைந்தன்.

”சாதி பற்றிய கதைகள் எழுதினோம். சன்னதம் கொண்டு கவிதைகள் பாடினோம். நீதியான உலகைப் படைத்தலால் நித்திரை வராதென்று முழங்கினோம். சாதி போகவேன் இத்தனை தாமதம்?” என்பது முப்பது ஆண்டுக்கு முன் ஒரு கவியரங்கில் நான் கேட்ட கேள்வி. சாதி நலிவடைந்துள்ளதே தவிர இன்றும் வாழ்கிறது. சாதி பற்றி, கலாபூர்வமாக எழுதப்பட்டஅற்புதமான கதை ”அன்பின் நிறம் ”.

***

நல்லாசிரியன் யார்? என்ற கேள்விக்கு ஒரு அறிஞர் விடை அளித்தார். ”எவரைச் சந்தித்த பிறகு நீ முன்போல் இல்லாது புதிய மனிதனாகி விடுகிறாயோ அவன்தான் நல்லாசிரியன்!” இதை நினைக்கும்தோறும் பகவான் ராமகிருஷ்ணர் என் மனக்கண்ணில் தோன்றுவார். விழிமைந்தன் அப்படி ஒரு ஆசானை எமக்கு அறிமுகம் செய்கிறார். போரில் தாய் தந்தையரை இழந்த பல பிள்ளைகள் அந்த ஆரம்பப் பாடசாலையில் – அவரிடம் – படித்தனர். அவர்களைப் பரிவாக நடத்தினார். அதிரப் பேசார்.  தடி எடுக்க மாட்டார்.

அவர் கற்பித்தலே வித்தியாசமானது. வகுப்பறையில் இருக்க மாட்டார். வயலை, வானை, மலையைக் காட்டிப் பிள்ளைகளுடைய கற்பனையைத் தூண்டுவார். உண்மைக் கதைகள் சொல்லுவார். ஒரு யந்திரத் துப்பாக்கியோடு தன்னந்தனியனாய் நின்று, எதிரிப் படையை விரட்டிஅடித்து, தாய் நாட்டைக் காத்த ஒரு வீரனுடைய கதையும் அவற்றில் ஒன்று.

”குழந்தைகளே, இந்த ஸ்டெப்பி வெளி இன்று அமைதியாய் இருக்கிறது. எத்தனையோ வீரர்கள் குருதி சிந்தி, இந்த நிலத்தைக் காப்பாற்றி உங்களுக்குத் தந்திருக்கிறார்கள். இந்த மண்ணை நேசியுங்கள்’ ‘என்று கதையை முடிக்கிறார் ஆசிரியர். அடுத்த நாள் ஆசிரியர் நோயுற்று மருத்துவமனையில் இருப்பதாகச் செய்தி வருகிறது. பிள்ளைகள் ஆசானைப் பார்க்கச் செல்கின்றனர். அவர் நிலைமை கவலைக்கிடம். ”ஏன் இவ்வளவு மோசமான நோய் வந்தது ?” என்று கேட்டமாணவனுக்குப் பாடசாலை அதிபர் பதில் சொல்கிறார். ”குழந்தைகளே, உங்கள் ஆசிரியர் வீராதி வீரர். மாபெரும் தேச பக்தர். பல போர்க்களங்கள் கண்டவர். தன்னந்தனியனாக நின்று எதிரிகளை விரட்டி அடித்தவர். எதிரிகளின் துப்பாக்கிச் சன்னங்கள் அவர் முள்ளந்தண்டின் அருகே புதைந்துள்ளன. ஷெல் சிதறல்கள் அவர் நுரையீரலைத் தாக்கி உள்ளன. உயிர்வாழ அவருக்கு ஐந்து வருடம் மட்டுமே உள்ளது என்றார்கள் மருத்துவர்கள். அந்த ஐந்து வருட காலத்தையும் அவர் உங்களுக்கே அர்ப்பணித்தார்!”. அடுத்த நாள் ஆசிரியரின் உயிர் பிரிகிறது.

இவ்வளவு நாளும் ஆறாத உட்காயங்களுடன் வலியைத் தாங்கிக்கொண்டு, தங்களோடு மென்மையாக, அன்பாகப் பழகிய அம்மகாத்மாவை நினைந்து குழந்தைகள் மட்டுமல்ல, ஊரே கண்ணீர் பெருக்குகிறது.

உக்ரேனியப் பிள்ளைகளுக்காக, தம் வாழ்நாளை அர்ப்பணித்த வஸிலி சுகம்லின்ஸ்கி என்ற ஆசிரியருக்கு இக்கதையை அர்ப்பணித்துள்ளார் விழிமைந்தன்.

***

இவை போன்ற பல கதைகள் இக்கவிவிதைத் தொகுதியில் உள்ளன. “நரியின் தேற்றமும் எரியும் தேசமும்” என ஜியோர்ஜ் ஓவெல் பாணியில் ஓர் அரசியல் அங்கதம். ”முச்சந்தி நாய்” என்பது முகநூலை நையாண்டி செய்கிறது.

விழிமைந்தனுடைய பிரயோகங்களில் திருமுறைகள் கமழும், பாரதியும் மகாகவியும் உலா வருவர், நவநவமான உருவகங்கள் வரும். டைனோசர் தொடக்கம் தேவதாசி முறை பற்றிய ஆய்வுகள் தூவப்பட்டிருக்கும். இக்கவிவிதை தமிழுக்கு வளம் சேர்க்கும். 

சோ.பத்மநாதன்
“ஏரகம்”
பொற்பதி
கொக்குவில்
இலங்கை.

 

கவிவிதைகள் – பொருளடக்கம்

  1. பாறையும் நதியும்
  2. இவளா, அவளா?
  3. இக்கரையும் அக்கரையும்
  4. அம்மன் சிலை
  5. வலியும் எலியும் 
  6. வயலும் காற்றும் 
  7. உண்ணீர்
  8. நம்பிக்கை 
  9. காலம் 
  10. காரிருள் எது?
  11. பாலைவனப் பயணி 
  12. அடிமை 
  13. தேசத்(தின்) துரோகம் 
  14. நாயிற் கடையாய்க் கிடந்து…….
  15. ஆசான் 
  16. காலங்கள்
  17. சதுரங்கம்
  18. அகதி
  19. சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்
  20. அன்பின் நிறம்
  21. நாடும் காடும் அல்லது தாம்பத்தியம்
  22. முக்கால் பங்கும் முட்டாள் மந்தையும் (இன்னுமொரு தலைப்பு:  நரியின் தேற்றமும் எரியும் தேசமும்)
  23. முச்சந்தி நாய் 
  24. பெறுமதி
  25. மீளா அடிமை
  26. முகப்புத்தகமும் முகங்களும்
  27. ஆண்மை
  28. யமஹா

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *