நேற்றுக் ‘காவியத்தலைவன்’ படத்தில் ஒரு காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன் (கீழே). அதில் திருப்புகழில் உள்ள ஆழ்ந்த அர்த்தங்களை விளக்கும் சிவதாஸ் சுவாமிகள் என்ற நாடக வித்தகர் (சங்கரதாஸ் சுவாமிகள் என்ற நிஜ வித்தகரின் தழுவல்?) , “நுனிப்புல் மேயாதீர்கள்” என்று தன் சீடர்களைப் பேசுவார். இது, சின்ன வயதில் என் பாட்டனார் சிவத்திரு. சிவசுப்பிரமணியம் ஐயா அவர்கள் எனக்குச் சொன்ன ஆழமான விளக்கங்களை நினைவூட்டியது. உதாரணம்: “அதல சேடனாராட”என்ற பாடல். இந்த ஒரு பாடலை வைத்தே எத்தனையோ மணிநேரம் கதை கதையாகச் சொல்லியிருக்கிறார். சில உதாரணங்கள்:
அ )
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
கருத லார்கள் மாசேனை …… பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
கனக வேத கோடூதி …… அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
உவண மூர்தி மாமாயன் …… மருகோனே
இந்த வரிகளுக்கு கௌமாரம் தளத்தில் சொல்லியிருக்கின்ற விளக்கம்: கதாயுதத்தை தன் தோளினின்று
அகற்றாத வீமன், எதிர்த்துச் செலுத்திய அம்பு மழையில், பெரும் பகைவர்களின் (கெளரவர்கள்), பெரிய சேனை பொடிபட (உதவியவரும்), கதறிச் சென்ற பசுக்கள் மீண்டுவரக் (குழலை ஊதியவரும்), அர்ச்சுனன் ஏறிய தேரின் பாகனாயிருந்து, தங்க மயமானதும், வேத ஒலியைத் தரும் சங்கை ஊதியவரும், அலை வீசும் பாற்கடல் மீதிலே, (பாம்பணையில்) பள்ளி கொண்டவரும், (வாமனாவதாரத்தில்) உலகத்தை அளந்து மூடிய பாதத்தாரும், கருடனை வாகனமாகக் கொண்டவரும், ஆன மாமாயன் திருமாலின் மருமகனே!
இலங்கைச் சமயபாடப் புத்தகங்களிலும் கிட்டத்தட்ட இதையொட்டிய விளக்கம் தான். இந்த விளக்கம் இடறுகிறது.
1) பாரதப்போரை வென்ற பாண்டவர்களில் பிரதானமானவன் அருச்சுனன். கண்ணன் அவனுக்குத்தான் தேரோட்டினான். அருச்சுனனின் ஆயுதமே வில். அப்படியே வீமன் உதவியிருந்தாலும் அவனது பிரதான ஆயுதம் கதை. அப்படி இருக்கும் போது ‘வீமனின் அம்பு மழையால்’ கவுரவர்கள் தோற்பதற்குக் கண்ணன் உதவியதாகச் சொல்வது ரொம்ப இடறுகிறதே?
2) அப்படியே சொல்லியிருந்தாலும், ‘கதைவிடாத தோள்வீமன்’ என்று வீமன் கதையின் முக்கியத்தைச் சொல்லி விட்டு, உடனேயே அப்படிப்பட்ட வீமன் வில்வித்தையால் வென்றான் என்பது இன்னும் இடறுகிறதே?
3) பசுக்களைப்பற்றிச் சொல்லியவர் குழலைப்பற்றிச் சொல்லவில்லை. அதை உரையில் வலிந்து புகுத்திப் பொருள் கூறுவது இன்னும் இடறுகிறதே?
வெறும் சந்தம், ஓசை நயத்திற்காக இப்படிப் பாடி விட்டாரா அருணகிரியார்? இல்லவே இல்லை. ஆழ்ந்திருக்கும் பொருள் வேறு.
பாரத யுத்தத்தில் துரோணரைப் பாண்டவர்கள் வஞ்சகமாகக் கொல்கிறார்கள். இதை அறிந்த அவரது மகன் அசுவத்தாமன் பெரும் கோபம் அடைந்து நாராயணக் கணையை ஏவி விடுகிறான். நாராயணக் கணை அணு ஆயுதம் போன்றது. அந்த ஒரு அம்பில் இருந்து பத்து, நூறு, ஆயிரம் அம்புகள் தோன்றும். ஆயுத தாரிகளை மட்டும் அது தாக்கும்.
அசுவத்தாமன் நாராயணக் கணையை ஏவியதை அறிந்த கண்ணன், மிக விரைவாகப் பாண்டவர்கள் எல்லோரிடமும் சென்று அந்த அஸ்திரத்தின் தன்மையை உணர்த்தி, தமது ஆயுதங்களைக் கீழே போடச்செய்து விடுகிறார். வீமனை மட்டும் அவ்வாறு கூறவில்லை. வீமன் தன் தோளில் தாங்கிய பெருங்கதையைக் கீழே போடும் இயல்பில்லாதவன் என்று நினைத்தாரோ என்னவோ? நாராயணக் கணை வீமன்மேல் செல்கிறது. வீமன் “தன் பெரிய தேரை அலட்சியமாகச் செலுத்திக்கொண்டே அம்புகளைப் பொழிந்து நாராயணக்கணையில் தோன்றிய கணைகளை எல்லாம் அறுத்துத் தள்ளி” (நான் படித்த வில்லிபாரத வசனம்) விடுகிறான். நாராயணக்கணை நாணம் அடைந்து போய்விடுகிறது.
இது பாரதக்கதை. கண்ணனின் இந்தச்சமயோசிதச் செயலை மனதில் கொண்டே அருணகிரி “கதைவிடாத தோள்வீமன் எதிர்கொள் வாளியால் ” என்கிறார். “கதைவிடாத தோள்வீமன்” என்று சொன்னது, அந்த நெருக்கடியான கட்டத்திலும் தன் பெருங்கதையைக் கீழே போட விரும்பாதவன் என்று. “எதிர்கொள் வாளி” என்றது எதிர்த்துச் செலுத்திய அம்புகள் மட்டுமல்ல, அவன் எதிர்கொண்ட நாராயணக் கணையுமாகும். ( எனவே “எதிர்கொள்” என்பதற்கு அர்த்தம் “எதிர்கொண்ட” என்பதுதான். ‘செலுத்திய’ என்ற சொல்லை மேற்கண்ட உரைகாரர் வலிந்து ‘செலுத்தியிருக்கிறார்’ ஹாஹா 🙂 🙂 ) அப்படி அவன் செய்யும்படி கிருஷ்ணன் ஆலோசனை சொன்னதால் இறுதியில் கௌரவ சேனை பொடியாகி வெற்றி கிடைத்தது. “நாராயணக் கணை ஏவப்பட்ட போது, பாண்டவர் தரப்பில் எல்லோரையும் ஆயுதங்களைக் கீழே போடச்செய்து, கதாயுதத்தைக் கைவிடும் இயல்பில்லாதவனாகிய வீமனை மட்டும் அவ்வம்பை எதிர்கொள்ளச் செய்து, அதன்மூலம் பாண்டவர் தரப்பில் தேவையற்ற உயிர்ச்சேதத்தைத் தவிர்த்து, இறுதியில் வெற்றியைக்கொடுத்த திருமால்” என்பது திருப்புகழின் பொருள்.
அருணகிரி வீண்சொல் விளம்புபவர் அல்லர். அவர் ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தம் உண்டு.