கலிங்க மாகனும் யாழ்ப்பாணமும் – II

கலிங்க மாகனைப் பற்றி மேலும் கிண்டியபோது பல சுவையான விபரங்கள் கிடைத்தன. அவற்றில் சில:

– கலிங்க நாட்டைப் பன்னிரண்டாம், பதின்மூன்றாம், பதினாலாம் நூற்றாண்டுகளில் ஆட்சிசெய்தவர்கள் ‘சோழகங்க’ வம்சத்தினர். கங்க வம்சம், சோழ வம்சம் என்பவற்றின் தோன்றல்கள் என்பதால் இந்தப்பெயர். பெயருக்கேற்றபடி இவர்கள் சோழ வம்சத்தினருடன் பெண் கொடுத்துப் பெண் வாங்கியிருந்தனர். கலிங்கத்துப்பரணியில் வில்லனாய் அமையும் அனந்தவர்மன் கூட வீர ராஜேந்திரரின் பேரன் தான்! இவனைத்தான் முதலாம் குலோத்துங்கன் (இவனும் தந்தை வழியில் ஆந்திரன், தாய்வழியால் சோழ சிம்மாசனம் ஏறியவன் ) தோற்கடித்தான். எனவே கலிங்கத்துப்பரணி எழக்காரணம் இரு பேரரசுகளுக்கிடையிலான போர் என்பதை விட வெறும் தாயாதிச் சண்டை எனலாம். (சாண்டில்யன் கடல்புறா எழுதியபோது இதை உணர்ந்திருக்கவில்லை போலும் )

– கலிங்க மாகன் இந்த ‘சோழகங்க’ வம்சத்தைச் சேர்ந்தவன் என்று விக்கிப்பீடியா குறிப்பிடுகிறது. இதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லாதபோதும், பல புதிர்களை இந்தப் பதில் விடுவிக்கும். கலிங்கமாகன் மூன்றாம் குலோத்துங்கனுடைய உறவினனாகவும் பாதித் தமிழனாகவும் இருந்தால், அவன் சோழப்பேரரசின் ஊடாகப் படையுடன் சென்று இலங்கையில் இறங்குவதும், யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசை நிறுவுவதும், அவன் கலிங்கனாக இருந்தாலும் அவன் படையில் தமிழர்கள் இருப்பதும் சாத்தியம். பொலன்னறுவையில் ஆண்ட பாண்டிய மன்னனை அவன் கண்களைப்பிடுங்கிக் கொன்றதும் (பாண்டிய / சோழப்பகையினால் ) சாத்தியம்.

– சோழப்பேரரசின் காலத்தில் தென்னாடு முஸ்லிம்களை இன்னும் சந்தித்திருக்கவில்லை என்றாலும் வடநாட்டில் அவர்களது ஆதிக்கம் தொடங்கிவிட்டது. மாகனின் காலத்திற்கு முன்பே கலிங்கர்கள் முஸ்லீம் படைகளுடன் போரில் ஈடுபட்டிருக்கின்றனர். மாகனின் மூர்க்கமான இந்து அடிப்படைவாதம், இதற்கு ஒரு எதிர்விளைவாக இருந்திருக்கலாம். பொதுவாகவே இந்தியாவில் இந்து மற்றும் முஸ்லீம் அடிப்படைவாதங்கள் ஒன்றை ஒன்று வலுப்படுத்தி வந்துள்ளது வரலாறு கூறும் உண்மை.

– மகா பராக்கிரம பாகு பாண்டியநாட்டு உள்நாட்டுப்போரில் தலையிட்டதும் மூன்றாம் குலோத்துங்க சோழனால் அவனது தண்டநாயகர்கள் தோற்கடிக்கப்பட்டதும் தெரிந்த விஷயங்கள். இப்படி அவன் தலையிடுவதற்கு ஒரு காரணம் பாண்டிய நாட்டுடன் அவன் வம்சத்தினர் கொண்டிருந்த மணவினைத் தொடர்பு. அவன் காலத்தின் பின் இத்தொடர்புகள் மேலும் பலம்பெற்றன. எனவே பராக்கிரம பாண்டியன் (பெயரொற்றுமை கவனிக்க) பாண்டியநாட்டில் இருந்து வந்தபோது அவனது ‘படையெடுப்புக்கு’ பொலநறுவையில் ஓரளவு ஆதரவு இருந்திருக்கலாம். எனவே பாண்டியநாட்டில் சோழர் ஆதிக்கம் இருந்த நிலையிலும் பாண்டியர்கள் பொலநறுவை மேல் படையெடுத்தல் சாத்தியமாயிற்று. இது உண்மையில் படையெடுப்பல்ல. ஆதரவுடன் நடந்த பின்வாங்கல். எனவேதான் சூளவம்சமும் அவன்மேல் நற்சொற்களைப் பாவிக்கிறது.

– மாகனுக்குச் சில வருடங்கள் முன் ‘அனிகங்கன்’ என்ற ‘சோழத் தளபதி’ ஒருவன் பொலன்னறுவை மேல் படையெடுத்து வந்ததாக சூளவம்சம் கூறுகிறது. இவன் சோழன் என்று சூளவம்சம் கூறினாலும் பெயரில் ‘கங்கன்’ இருப்பதால் இவனும் சோழகங்க வம்சத்தவனாக இருக்கலாம். எனவே மாகனும் அதே வம்சமாக இருக்கலாம்.

– மேலும், சோழகங்க வம்சத்தவன் ஒருவன் திருகோணமலை கோணேசர் கோயிலுக்கு மானியங்கள் 1233ம் ஆண்டில் அளித்ததாக சோழகங்க வம்சம் பற்றிய விக்கிப்பீடியா கூறுகிறது (ஆதாரங்கள் இல்லை). இது உண்மையாயின் இது மாகனாகவே இருக்க வேண்டும். மாகனின் படையெடுப்பு நடந்தது 1215 இல். அவன் 21 வருடங்கள் ஆண்டதாகச் சூளவம்சம் கூறுகிறது. எனவே கணக்கு சரிவருகிறது.

– முதலாம் பராக்கிரம பாகுவின் பின்னர் பொலநறுவையில் பதினாறு மன்னர்கள் ஆண்டதாக சூளவம்சம் கூறுகிறது. இந்தப்பதினாறு மன்னர்கள் காலத்திலும், மூன்றாம் குலோத்துங்கன் என்ற ஒரு மன்னனே சோழப்பேரரசை ஆண்டிருக்கிறான்! அவ்வளவு ஸ்திரமற்ற நிலைமை மாகனின் படையெடுப்பின் முன்னர் பொலநறுவையில் இருந்திருக்கிறது.

இந்த கற்றறிந்த ஊகங்கள் (educated guesses) எல்லாம் உண்மையாயின், யாழ்ப்பாண அரச வம்சம், சோழ / கலிங்க வம்சமாதல் வேண்டும். அவ்வாறாயின் விடைக்கொடியும் ‘ சேதுகாவலர்’ பட்டமும் ஏன் ? ‘ஆரியச்’ சக்கரவர்த்தி பட்டம் ஏன்? ‘பிராமண க்ஷத்திரியர்’ என்பது ஏன்? மர்மங்கள் தொடர்கின்றன.

இப்பதிவின் மூன்றாம் பாகத்தைக் காண இங்கே அழுத்துக.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *