ஆண்டாளின் திருப்பாவை வரியொன்றில் ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்று இருப்பதை வைத்துக்கொண்டு ஆண்டாளின் காலத்தைக் கணித்திருப்பதாகச் சொல்கிறார்கள். வைரமுத்துவும் தன் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் (ஆமாம், அவர் கட்டுரையில் ‘அந்த’ ஒரு சொல்லைத் தவிர வேறு விஷயங்களும் இருக்கின்றன…. ஹி ஹி ). இதைப்பற்றிக் கடந்த வாரம் முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன் (முன்னைய பதிவுகள் இரண்டும் வானியல் விளக்கப்படமும் காண்க). யோசிக்க யோசிக்க, இந்தக் ‘காலக்கணிப்பு’ ஆர்வக்கோளாறினால் துணியப்பட்ட அவசர முடிவென்றே தோன்றுகிறது. காரணங்கள்:
- வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்றால் வெள்ளி எழுந்தபோது வியாழன் மறைந்தது என்று பொருள். இது நடப்பதற்கு வெள்ளி, வியாழன், பூமி ஆகிய மூன்றும் ஒரு நேர்கோட்டில் வந்திருக்க வேண்டும் என்று (சென்ற பதிவில் ) காட்டியிருக்கிறேன். இது ஒரு அரிதான நிகழ்வு. எனவே இது நடந்த தினங்களை விண்ணியல் ரீதியில் கணிக்க முடியும். ஆண்டாளின் வரிக்கு வேறேதும் அர்த்தம் செய்தால், அரிதான நிகழ்வொன்றுக்கு வர முடியாது.
- இரண்டு கோள்கள் (பூமியுடன்) நேர்கோட்டில் வருவதென்பது, அவ்விரு கோள்களும் சூரியனைச் சுற்றும் காலங்களின் பொது மடங்குகளில் சிறியது (பொ.ம. சி ) காலத்திற்கு ஒரு தடவை நடக்கும் (விளக்கத்திற்கு முற்பதிவுகள் காண்க). உதாரணமாக, கிரகம் X ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் கிரகம் Y நாலு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் சூரியனைச் சுற்றி வருமாயின், அவை 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியுடன் நேர்கோட்டில் வரும். எனவே வியாழனும் வெள்ளியும் பூமியுடன் நேர்கோட்டில் வருவது அவற்றின் சுற்றுக்காலங்களின் பொ.ம. சி க்கு ஒரு தடவையாகும்.
- பிரச்சனை என்னவென்றால், கிரகங்களின் சுற்றுக்காலங்கள் முழு எண்களல்ல. வருடம், மாதம், நாள், மணி, நிமிடம்,செக்கன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இத்தனை வருடமென்பது அண்ணளவே. உதாரணமாக X இன் சுற்றுக்காலம் 5 வருடம் இரண்டு மாதம் (62 மாதம் ) Y இன் சுற்றுக்காலம் நாலு வருடம் மூன்று மாதம் (51 மாதம் ) என்றும் பூமி 12 மாதம் என்றும் எடுத்தால் இவற்றின் பொ.ம. சி 3162 வருடம் ஆகிறது! எனவே 20 வருடங்களுக்கு ஒருமுறை அண்ணளவாக நேர்கோட்டிலும், 3162 வருடங்களுக்கு ஒருமுறை இன்னும் இன்னும் செப்பமான நேர்கோட்டிலும் வருமெனலாம். இன்னும் நாள் கணக்கு, மணிக்கணக்குப்பார்த்தால் இந்நிகழ்வு இன்னும் அரிதாகும்.
- இவற்றில் ஆண்டாள் எந்த நேர்கோட்டைச் சொல்லியிருப்பாள்? அவள் என்ன விண்ணியலாளரா, கருவிகளை வைத்து அளப்பதற்கு? அவள் எதையும் சொல்லியிருக்கலாம். அவளுடையது இறைவனைப்பாடும்போது அகஸ்மாத்தாகச் செய்த அவதானம். செப்பமானதாக இருக்கத்தேவையில்லை.
- இன்னும் சொன்னால் அவள் ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்ற வரியால், வெள்ளி எழுந்த அதே கணத்தில் வியாழன் மறைந்ததையோ, வெள்ளி எழுந்து 10 நிமிஷம் பிறகு மறைந்ததையோ, 10 நிமிஷம் முன்பே மறைந்ததையோ குறித்திருக்கலாம்.
- அவளுக்குத் தெரிந்த ‘ அடிவானம்’ என்பதும் மலைகளாலோ வேறு தடங்கல்களாலோ மறைக்கப்பட்டு இருந்திருக்கலாம். குமரி முனைக்குப்போயிருந்தால் மட்டுமே 180 பாகை வானத்தை அவதானிக்க முடியும். கண்ணனை நினைத்து உருகுபவள் விடிகாலையில் எழுந்து குமரி முனைக்குப்போய் வியாழன் பார்ப்பதாவது…..
- எனவே, அவளுடைய அவதானிப்பு அண்ணளவானது. ‘எவ்வளவு ‘ அண்ணளவு என்பதைப்பொறுத்து அது 100, 50, 10 அல்லது 2 வருடத்திற்கு ஒருமுறை கூட நடந்திருக்கலாம். அதைவைத்து அவளது காலத்தை (திகதி உட்பட!) கணிக்கலாம் என்று தோன்றவில்லை.