இப்போதெல்லாம் ஆண்டாளைப்பற்றி முகப்புத்தகத்தில் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். காரணம் ஒரு கவிஞரான ஆண்டாளைப்பற்றி இன்னுமொரு கவிஞர் தப்பாகச் சொல்லிவிட்டாராம். அவர் என்ன சொன்னார், சொன்னதின் அர்த்தம் என்ன, அது சரியா தப்பா என்ற ஆராய்ச்சிக்கு நான் போகவில்லை. அது ஒரு தனிநபர் பற்றி இன்னுமொரு தனிநபரின் அபிப்பிராயம் அவ்வளவுதான். விஞ்ஞானம் மற்றும் தமிழில் ஆர்வமுள்ளோருக்கு ஆண்டாளைப்பற்றி இன்னுமொரு சுவையான ஆராய்ச்சி இருக்கிறது.
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
இது திருப்பாவை. இதில் ‘வெள்ளி எழுந்து வியாழன் உறங்குவது’ என்பது வானத்தில் மிகவும் அரிதான நிகழ்ச்சியென்றும், அதன்மூலம் ஆண்டாள் இந்தப்பாடலைப் பாடிய நாளைக்கூடக் கணித்து விடலாமென்றும் சுஜாதா அவர்கள் ‘ஏன், எதற்கு, எப்படி’ நூலில் குறிப்பிட்டிருந்தார். அவர் சொன்ன நாள் எனக்கு நினைவில் இல்லை. இணையத்தில் எழுதும் வேறு சிலர் அந்த நாளை, டிசெம்பர் 9, 447 கி. பி என்று குறிக்கிறார்கள். இது உண்மையா? ‘வெள்ளி எழுந்து வியாழன் உறங்குவது’ என்றால் என்ன? வெள்ளி முளைக்கும்போது (விடிகாலையில்) வியாழன் மறைவதா? அல்லது வானில் வெள்ளி இருக்கும்போது வியாழன் இல்லாமல் இருப்பதா? இது உண்மையிலேயே அவ்வளவு அரிதான நிகழ்வா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.