இன்றைக்கோ நாளைக்கோ என்று ஊசல் ஆடுகிற
நண்பனது கால் மாட்டில் நான் அமர்ந்து கொண்டிருந்தேன்
‘என்ன வருத்தம்’ என்று எவருக்கும் சொல்லவில்லை
நண்பன்; ‘மெல்பேணில்’ உள்ளோர் நாலுவிதமாய்க் கதைத்தார்
ஊரில் இவன்பெரிய உடையார் பரம்பரைதான்.
போருக்கு அஞ்சிப் புலம்பெயர்ந்து வந்தவன் தான்.
போகம் உலகிலுள்ளதெல்லாம் அனுபவித்தோன்
சாகும் தறுவாயிற் கிடந்தது புலம்புகிறான்
‘சா, எந்தன் கண்ணுக்குச் சமீபத்தில் தெரிகிறது.
பாவி நான் வாழ்ந்த வாழ்வின் பயன் என்ன?
தாய்நாட்டைக்காக்கத் தம்மைக் கொடுத்தவர்கள்
மாய்கின்ற வீரக் களத்தில் மடியேனோ?
மோகம் ஒழித்து முனிவர் வழிசென்று
யோகத்திருந்து என் உயிர்விடுக்க மாட்டேனோ?
எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் முயற்சியிலே
தவறி விழுந்து பனிக்காற்றில் உறையேனோ?
விண்கலத்தில் வான வெளிக்குக் கிளம்புகையில்
மண்ணில் அது வெடிக்க மரணம் என்னை அணுகாதோ?
தீப்பட்டெரியும் ஒரு வீட்டில், குழந்தை ஒன்றைக்
காப்பாற்றப் போய், இக்கடையேன் இறக்கேனோ?
புலம்பெயர்ந்தோர் ‘காம்ப்’ ஒன்றில் மருத்துவனாய் நான் வாழ்ந்து
நுளம்பு கடித்ததனால் நோய் வந்து சாகேனோ?
உடலை, உயிர்பிரிந்த பின்னும், ஒருவருமே
தொடவும் மனமின்றித், தூக்கி எறிவாரே!
நினைவு தவறி நான் நெடுந்தொலைவு போகையிலும்
மனைவி குடும்பத்தார் மனதில் என்னை வைவாரே!’
கண்கள் சிவந்து கலங்கப் புலம்பியவன்
எண்ணி நெடுமூச்செறிந்தான் எதை எதையோ!
“நண்பா,எனக்குச் சொல். நான் யார்க்கும் சொல்லவில்லை.
என்ன வருத்தம் உனக்கு” என்றேன் . “எயிட்ஸ்” என்றான்!
(‘கலப்பை’ இதழில் வெளியானது)