பரீட்சை முடிந்தது கொண்டாட்டம்.
பாடசாலைக்கோ திண்டாட்டம்.
ஜெய பேரிகை கொட்டடா கொட்டடா! – பின்னர்
ஊரிலே தென்னையை வெட்டடா!
சோதனை செய்து முடித்தோம் – அதைத்
துரிதமாய்க் கொண்டாடத் துடித்தோம்
வேதனை மற்றோர்க்குச் செய்வதே எங்களின்
வீரம் என்று மையை அடித்தோம்
அடிதடி செய்து சிரித்தோம் – தெருவில்
ஆளையாள் ஓடிப் பிடித்தோம்.
குடிகாரனும் சொல்லக் கூசிடும் சொற்களைக்
குறுக்கும் மறுக்கும் எழுதி வைத்தோம்.
வகுப்பறை தன்னை உடைத்தோம் – பசு
மாட்டினை நன்றாய்ப் புடைத்தோம்.
சகிக்கவொண்ணா நாற்றம் வீசும் பொருட்களைச்
சாமியின் முன்பு படைத்தோம்.
கதிரையைத் தூக்கினோம் கட்டி – டீச்சர்
கைப்பையைப் பாழ் செய்தோம் வெட்டி.
குதிரையாய் ஓடிய கோணேசனை நாங்கள்
கும்பிட்டோம் கோயிலும் கட்டி.
ஆசானின் வாகனச் சில்லை – நாங்கள்
ஆணியால் குத்தினோம், தொல்லை
கூசாமல் பெண்களில் கூடப் படித்தோர்க்குக்
கொடுத்தோமே, மீறினோம் எல்லை.
பின்னலைப் பின்னின்று இழுத்தோம் – அவள்
பின்னே திரும்பில் பழித்தோம்.
வன்னத்திலே உயர் வெள்ளை உடைகளில்
வாரியே மையைத் தெளித்தோம்.
வாத்தியார் சைக்கிளின் சீட்டை – நாங்கள்
வன்மத்தில் ஆக்கினோம் ஓட்டை.
“பார்த்தியா டோய்’ என்று கத்தியே வீதியில்
பாடிக் கடந்தோம் அதிபர் வீட்டை.
சோதனை செய்தவர் நாங்கள் – அதில்,
சொறி, நாங்கள் பெயில் தானே, போங்கள்.
வேதனை மற்றோர்க்கு விளைப்பதல்லால், ஏதும்
சாதனை செய்யாதோர் நாங்கள்.