“சிரித்த முகம் எனமலர்ந்து செழித்த செடி நடுவே
சிறுமகனும் விளையாடித் திரிந்திடும் அவ்வேளை
விரித்தபடம் எடுத்து அரவொன்று அடுத்தொருகை பற்றி
விளங்கு மணிக் கடகமென வளைந்து கிடந்ததுவே!”
–கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை–
‘புத்தரும் மகனை இழந்த தாயும்’
பாலப் பருவம் – மழலை சொலும்
கோலப் பருவம் – கழிய
வாலைப் பருவம் – அவ்வயதின்
காலக் கருவம் – உடையவன்.
வாலைக் குமரி – வனமயிலின்
கோலத் தெழிலி – மாண்புமிகும்
சீலத் தழகி – சிறந்தவெதிர்
காலக் கனவில் – வளர்பவள்.
பாடம் பயில் கூடம் தனை இவர்கள்
நாடும் பல நேரம் அதன் எதிரில்
ஆடும் மணி பாடும் இசையோடு
கூடும் குளிர் களி வாகனம் ஒன்று.
அப்பா அவர் வெளிநாட்டினில் அதனால்
எப்போதுமே மிகவும் பணம் உடையான்
‘ஸப்பா’ என வெயில் சுட்டிட நொந்து
டப்பாவினில் ஒரு ஐஸ் கிரீம் தின்றான்.
மாதப்பணம் “மணி” சேருக்குத் தந்து
மீதப் பணம் ஒரு நூறினை உடையாள்
ஏதம் எது வரும் ஈங்கிதில் என்று
சீதக் களி சில ‘கப்’ புகள் மென்றாள்.
அந்நாளினிற் சுவை கண்டவர் அவர்கள்
எந்நாளிலும் இது தின்றிட ஏங்கி
முன்னால் வரும் வானின் மிசை சென்றார்.
பின்னால் வரும் விளைவெண்ணிட மாட்டார்.
வானும் ஒரு நாளில் வரல் நிற்க
ஈனம் மிக உடலின் மிசை உற்றார்
“ஏனிப்படி” என நோண்டிய பொழுதே
தேனொத்ததில் விஷம் சேர்ந்திடல் கற்றார்.
“பொடி” சேர்த்ததோர் களியின் சுவை கண்டோர்
கொடிகாமமும் பொலிகண்டியும் சென்று
விடிவற்றதோர் இருளைத்தரும் ஊசி
அடிபட்டுமே சில பெற்றனர்; இட்டார்.
நாள்கள் கழிய – அவ்வூரின்
ஆள்கள் கண்டார் – அவ்விளைஞன்
தோள்கள் மெலிதல் – அவள் தோலில்
நாளம் தெரிய – நலிவுறல்.
பாடம் படியார் – தம் பள்ளிக்
கூடம் நினையார் – நண்பருடன்
ஆடல் கருதார் – போதையைத்
தேடல் மட்டும் – செய்தனர்.
அரைமூடிய வெறியேறிய கண்கள்
உரையாடலில் தெளிவு, முறை இன்மை.
தரைமீதினில் நிலையாது தள்ளாடும்
இருகாலுடன் திரிவார் இவர் ஆனார்.
உருவாக்கிடும் அறிவாலயம் விட்டுத்
திரிவார் இவர் தெரு வீதியில் ஆனார்.
இருளாக்கிடும் விஷ ஊசியை ஏற்ற
வருவாய் பெறும் வழியே நிதம் எண்ணி.
பாழ்பட்டதோர் ‘பனி’ ஊசியை இட்டுத்
தாழ்வுற்றவன் தருமம் தனை விட்டு
வாள்வெட்டினில் வரும் காசென நம்பி
ஆள்வெட்டினன் அருள் கொஞ்சமும் இன்றி.
ஊசிப் ‘பனி’ மிகவேறிய பிச்சி
யாசித்துமே காசைப்பெற முடியாள்
_ சித் தொழில் செயும் வேதனை சொல்லக்
கூசித்தது தமிழ் கொஞ்சிய செந்நா!
இருவர் அல்ல – இளமைப்
பருவர் பலபேர் – இதுபோல்
வருதல் கண்டோம் – இளமொட்டுகள்
கருகல் கண்டோம் – எம்மிடையே.
அழுதல் மட்டும் – செய்திந்த
அழுகல் நிறுத்தல் – கடினம்.
விழுதல் தடுப்போம் – வீழ்ந்தவரும்
எழுதல் செய்ய – உழைப்போம்!