புலம்பெயர் நாடுகளில் தமிழ்க் கல்வி: தேவைப்படுவது ஆழம் அல்ல, அகலம்! Teaching Tamil to diaspora children: Emphasis on breadth, not depth, is needed!

இன்று தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழும் நிலையில், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இரண்டாம், மூன்றாம் தலைமுறைத் தமிழர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பிப்பது என்பது பெரும் சவாலாக இருக்கிறது. புலம்பெயர் சிறார்களுக்குத் தமிழ் என்பது இரண்டாவது மொழியாகவும் சிலவேளை (சில ஐரோப்பிய நாடுகளில்) மூன்றாவது மொழியாகவும் இருக்கிறது. சாதாரண வாழ்க்கைச் சூழலில் தமிழ் மொழியைப் பேசிப் பயிலக் கூடிய சூழல் பெரும்பாலான புலம்பெயர் சிறார்களுக்கு இல்லை. தமிழ்மொழியின் தொன்மை, எழுத்தமைதி, இலக்கணத்தின் அகலமும் விரிவும் ஆகியவை காரணமாக இரண்டாவது மொழியாகக் கற்பதற்கு இலகுவானதொரு மொழியன்று எம் மொழி. எனவே புலம்பெயர் நாடுகளில் தமிழைக் கற்பிப்பதற்கும் இரண்டாவது, மூன்றாவது தலைமுறைப் பிள்ளைகளிடம் தமிழைக் கொண்டுசெல்வதற்கும், அதற்கும் மேலாகத் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டாரிடம் எமது மொழியைக் கொண்டுசெல்வதற்கும் சரியான, சாத்தியமான வழிமுறைகள் என்ன என்று யோசிக்க வேண்டியுள்ளது.

இப்படியான நிலையில், புலம்பெயர் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிப்பதற்கு எங்களுக்கும் கற்பதற்கு அவர்களுக்கும் இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட நேரத்தில் அவர்களுக்கு நாங்கள் எதைக் கற்பிக்கிறோம், எப்படிக் கற்பிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். தமிழ் இலக்கியங்கள், இதிகாசங்கள், காவியங்களின் சுவை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. தமிழ் நீதிநூல்கள் உலகத்துக்கே வழிகாட்ட வல்லவை. தமிழ்க் கவிதைகளின் இனிமை சொல்லுந்தரமன்று. “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்றான் பாரதி. இருந்தாலும், தமிழ் மொழியையின் ஆழத்தையும் செழுமையையும் புலம்பெயர் தமிழ்க் குழந்தைகளுக்குக் கொண்டுசெல்வது எமது முதன்மையான நோக்கமா, இல்லை தமிழ் மொழி பேசும் சிறார்களின் எண்ணிக்கையை முடிந்தவரை காப்பாற்றுவதன்மூலம் தமிழை வாழ வைப்பது நோக்கமா என்பது மிகச் சங்கடமான, ஆனால் இனிமேலும் தவிர்க்க முடியாத ஒரு கேள்வி.

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மேலைநாடுகளில் இயங்கும் தமிழ்ப் பள்ளிகள் தமிழ்மொழிக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் செய்திருக்கும் சேவையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. பதவிச் சண்டைகள், கருத்து மோதல்கள், தன்முனைப்பின் வெளிப்பாடுகள் இவற்றையெல்லாம் தாண்டி (அநேகமாக) எதுவித வேதனமும் இன்றித் தமது நேரத்தைத் தமிழ்ச் சிறார்களின் கல்விக்காக ஒதுக்கிச் செயற்பட்டு வரும் தன்னார்வ ஆசிரியர்கள் மற்றும் ஏனைய தொண்டர்களின் சேவையையும் யாரும் பாராட்டாமல் விட முடியாது. ஆகவே இங்கு முன்வைக்கப்படுவது எந்தவொரு வகையிலும் தமிழ்ப்பாடசாலைகள் மீதான, அல்லது அவற்றின் அதிபர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் மீதான விமர்சனம் அல்ல. அவர்களின் பங்குபணியை மதிக்க வேண்டியதும் போற்றவேண்டியதும் அவசியம். அதேவேளை தமிழ்ப் பாடசாலைகளின் பங்களிப்பைக் காலத்துக்குக் காலம் மீளாய்வு செய்து செழுமைப்படுத்தி முன்கொண்டு செல்வதும் அவசியம். எனவே புலம்பெயர் நாடுகளில் தமிழ்க் கல்வியின் செல்நெறி மற்றும் அதன் எதிர்காலம் பற்றிச் சிந்திக்க வேண்டிய நேர்மையான தேவையின் அடிப்படையிலேயே இந்தக் கருத்துக்களை முன்வைக்கிறேன்.

இரண்டாவது மொழியாகத் தமிழைக் கற்கும் மாணவர்களிடம் எழுத்துத் தமிழை முன்னிலைப் படுத்துவது பல மாணவர்களைத் தமிழ்மொழிக் கல்வியில் இருந்தே விலக்கி விடுகிறது என்பது கசப்பான ஆனால் யதார்த்தமான உண்மை. அதுவும் “தமிழை நாம் ஏன் கற்கவேண்டும்” என்ற தெளிவு வரக்கூடிய வயதைச் சிறார்கள் அடைவதற்கு முன், எழுத்துத் தமிழை அவர்கள் விரும்பிக் கற்கச் செய்வதென்பது மிக்க கடினமாகவே இருக்கும். தமது (சாதாரணப்) பாடசாலைகளில் நன்கு பயிற்றப்பட்ட ஆசிரியர்களிடம் நவீன கல்விக் கொள்கைகளில் அடிப்படையில் கற்கும் பிள்ளைகள் வலிந்து திணிக்கும் கல்வி முறையை ஒப்புக் கொள்ளுவதில்லை. விரும்பிக் கற்கும் பாடம் மட்டுமே மனதில் நிற்கும் என்பது கல்வியியலாளர் ஒப்புக்கொண்ட உண்மை. நிச்சயமாக என்னுடைய சொந்த அனுபவமும் அதுதான். 

ஒரு விடயம் கவனிக்க வேண்டும். ஹோமோ சேப்பியன்கள் மொழி என்ற ஒன்றை அதன் மிக அடிப்படை வடிவத்தில் பேசத்தொடங்கி சுமார் 100, 000 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. ஆனால் எழுத்து மொழி என்ற ஒன்று உருவாகியது பாரசீகம், சுமேரியா, எகிப்து முதலிய இடங்களில் சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே. அவை திருத்தமான வரிவடிவங்கள் ஆனது இன்னும் பிற்காலத்தில். ஆகவே, மொழி ஒன்று உயிருடன் வாழ்வதற்கு வரிவடிவம் என்று ஒன்று அவசியமில்லை. தற்போதும்கூட உலகில் பேசப்படும் சுமார் ஏழாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகளில் சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகளுக்கு வரிவடிவம் கிடையாது. மாறாக, எழுத்து வடிவம் மட்டுமின்றிச் சிறந்த இலக்கியங்களும் உடைய சமஸ்கிருதம், பழைய கிரேக்கம், அண்மைக்காலம்வரை எபிரேயம் (ஹீப்ரு) முதலிய மொழிகளை யாரும் பேசுவதில்லை என்பதால் அவை இறந்த மொழிகள் ஆயின. ஆகவே, ஒரு மொழி வாழவேண்டுமென்றால் அந்த மொழியைப் பேசுவோர் இருக்கவேண்டும். எழுதுவது என்பது இரண்டாம் பட்சம்.

அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை இங்கே சுமார் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது. உண்மையான எண்ணிக்கை இதைவிடச் சற்று அதிகமாகவே இருக்கலாம். இவர்களில் பாதிப்பேர் வீட்டில் தமிழ்மொழியைப் பேசுகின்றனர் என்று சனத்தொகைக் கணக்கெடுப்பு சொல்கிறது. எழுபதுகளிலும் அதற்கு முன்பும் குடியேறிய தமிழர்களின் வம்சாவழிகள், பிஜி, மொரீஷியஸ், தென்னாபிரிக்கா முதலிய நாடுகளில் இருந்து வந்த தமிழர்கள், மேலும் பல காரணங்களால் தமிழ் அடையாளத்தைத் தொலைத்து விட்டவர்கள் இவர்களையெல்லாம் கணக்கிட்டால் தமிழர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை நெருங்கலாம். பெரும்பாலான குடும்பங்கள் இளம் குடும்பங்கள் என்பதால் சுமார் 40, 000 குடும்பங்கள் வாழ்வதாகவும், பாடசாலை செல்லும் வயதிலான தமிழ் சிறார்களின் எண்ணிக்கை 20,000 இற்கு மேல் என்றும் மதிப்பிடலாம். ஆனால், சிட்னி, மெல்போர்ன் முதலிய நகரங்களில் இருக்கும் ஆகப்பெரிய தமிழ்ப் பாடசாலைகளிலும் மாணவர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டுவதில்லை. மொத்தமாக தமிழ்க் கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் சிறார்களின் எண்ணிக்கை 5000 தைத் தாண்ட முடியாது (நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா ஆகிய இரண்டு முக்கிய மாநிலங்களில் பாடசாலைகளில் தமிழ் கற்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை நாலாயிரத்தைத் தாண்டாது என்று தெரிகிறது) . அதாவது, தமிழ்ச் சிறார்களில் கால்வாசிக்கும் குறைவானவர்களே ஒரு தமிழ்ப் பாடசாலையில் தமிழ் கற்கின்றனர். இவர்களிலும் பலர் ஒழுங்காகப் பாடசாலை செல்வதில்லை. (இந்த மதிப்பீடுகள் பற்றி வாதப் பிரதிவாதங்கள் இருக்கலாம். ஆனால், பெருமளவிலான இனவாரித் தமிழ்ச் சிறார்கள் தமிழ்ப் பாடசாலைகளில் கற்பதில்லை என்ற முடிவில் விவாதங்கள் இருக்காது என்றே நினைக்கிறேன்).

இதைவிட முக்கியமான கேள்வி, இப்படிக் கற்கும் 5000 சிறார்களில் எத்தனை பேர் கட்டிளம்பருவத்திற்கு வரும்போது தமிழைப் பேசுகிறார்கள் என்பது. பெரும்பாலான தமிழ்ப் பாடசாலைகளில் கீழ்நிலை வகுப்புகளில் தமிழ் கற்கத் தொடங்கும் மாணவர்களில் பாதிப் பேர் கூட உயர்தரத்தைப் பூர்த்தி செய்வதில்லை என்பதை வகுப்புகளின் மாணவர் எண்ணிக்கை மூலமும் ஆசிரியர், பெற்றோர் அனுபவம் மூலமும் உய்த்துணரலாம். ஐயாயிரம் மாணவர்கள் தமிழ் கற்பின் ஒரு வகுப்பில் சராசரியாக நானூறு பேர் கற்கிறார்கள். ஆனால், யதார்த்தத்தில், கீழ் வகுப்புகளில் வகுப்புக்கு அறுநூறு பேருக்கு மேல் கற்கும் அதேவேளை உயர் வகுப்பில் வகுப்புக்கு இருநூறு பேர் கூட இருக்க மாட்டார்கள் என்று துணியலாம். நியூ சவுத் வேல்ஸிலும் விக்டோரியாவிலும் ஒவ்வொரு வருடத்திலும் தமிழைப் பாடமாக எடுக்கும் மாணவர்கள் தலா ஐம்பதுக்கு உள்ளேயே என்று தெரிகிறது (அதாவது, மொத்தமாக நூறு பேரை விடக் குறைவு). மற்றவர்கள் எல்லாம் இடைவழியில் நின்று விடுகிறார்கள். உயர்தர வகுப்பில் தமிழைப் பாடமாக எடுத்துப் பூர்த்தி செய்யும் மாணவர்களில் கூடப் பலர் அதற்குப்பின் தமிழைப் பேசிப் பயிலாமையால் தொடர்ந்து வரும் வருடங்களில் தமிழைப் பெருமளவு மறந்து விடுகின்றனர். ஆகவே பிறப்பால் தமிழராகப் பிறக்கும் குழந்தைகளில் மிகச் சிறு பகுதியினர் மட்டுமே வளர்ந்தோராக வரும்போது இரண்டாவது மொழியாகவேனும் தமிழைப் பேசக்கூடிய அறிவுடையோராக இருக்கின்றனர். இது இரண்டாவது தலைமுறைப் பிள்ளைகளின் நிலை. மூன்றாவது தலைமுறை இப்போது வந்துகொண்டிருக்கிறது. அதில் தமிழ் பேசுவோரின் விகிதாசாரம் இன்னும் குறையுமென்பது வெளிப்படை. இந்த யதார்த்தத்திற்கு ஒரு சில முரண்-உதாரணங்கள் (counter examples) சொல்லுவதால் பயனொன்றுமில்லை. அவை முரண்-உதாரணங்கள் மட்டுமே.

இது அவுஸ்திரேலியாவின் நிலை. ஐரோப்பா, கனடா, இங்கிலாந்து மற்றும் பிற தேசங்களின் நிலைகுறித்து எனக்கு நேர்முகமாகத் தெரியாது எனினும், பலரிடம் கேட்டு அறிந்துள்ளேன். பெரும்பாலான நாடுகளில் தமிழ் கற்பித்தலில் இப்படியான சவால்கள் உள்ளனவென்பதில் சந்தேகமில்லை. ஒரு நாட்டில் இருக்கும் தமிழர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அந்நாடுகளில் தமிழ்ப் பாடசாலைக்கு வருவோர் எண்ணிக்கையும் அமையும். ஆனால் வருவோரை விட வராதவர் அதிகம், வரத்தொடங்குபவர்களில் உயர்வகுப்பு வரை செல்வோரை விட இடையில் நிற்பவர் அதிகம் என்பது அநேகமாக எல்லா நாடுகளிலும் நிதர்சனமான உண்மை.இவ்வாறான நிலையில், புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழிக் கல்வியின் நோக்கம் எதுவாக இருக்கவேண்டும் என்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

அருஞ்சுவைத் தமிழின் இனிமை அதன் ஆழத்தை அறிந்தவர்களை மயக்கவல்லது. ஆனால், எமது பிரதான நோக்கம் தமிழ்மொழியின் ஆழத்தை மாணவரிடம் கொண்டுசெல்வதா என்பது யோசிக்க வேண்டியது. தாயகத்தில்கூடப் பெரும்பாலான தமிழர்கள் தமிழின் ஆழம் அறியாமலே வாழ்ந்து மடிகின்றனர். புலம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரை முடிந்த அளவு அதிகமான பிள்ளைகள் தமிழைப் பேச வைப்பதே பிரதான நோக்கமாக இருக்கவேண்டும். எழுத்து மொழி என்பதுகூட இரண்டாம் பட்சமே. தமிழில் ஆர்வமும் ஓரளவு புலமையும் பெற்ற சில மாணவர்களுக்கு மேலதிகமாக ஆழக் கற்பித்தல் செய்வது பொருந்தும். ஆனால் பொதுவாகப் பார்க்கும்போது ஆழத்தை விட அகலமே பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். முடிந்தளவு இளையோருக்குத் தமிழைக் கொண்டுசெல்ல வேண்டும். அவர்கள் வேறு நாடு செல்லும்போது தமது உறவினர், நண்பர்களுடன் தமிழில் பேசக்கூடிய ஆற்றலைக் கொடுக்க வேண்டும். இதுவே முதன்மையான தேவை. ஆகவே சிறார்கள் தமிழை விரும்பிக் கற்கும் வகையில், ஆடல்கள், பாடல்கள், நாடகம், சித்திரம், கதைசொல்லல், விளையாட்டு என்பவற்றை முக்கியப்படுத்தி, மாணவர்களுக்குத் தமிழ் கற்றல் என்பது ஒரு மகிழ்வான விளையாட்டுப் போன்ற எண்ணக்கரு உருவாகுமாறு கற்பித்தல் காலத்தின் தேவையாகின்றது.

இவ்வடிப்படையில் கவனிக்க வேண்டிய விடயங்கள்:

1) கிரகித்தல், பேசுதல் ஆகியவற்றுக்கு வாசித்தல், எழுதுதல் ஆகியவற்றை விட மிக அதிக முக்கியத்துவம் வழங்குதல்.

2) பண்டிதத் தமிழைக் கற்பிப்பதை விட நாளாந்தம் பிரயோகிக்கக்கூடிய, தொடர்பாடக்கூடிய தமிழ் மொழியை அதிக எண்ணிக்கையிலான சிறார்களுக்குக் கற்பிப்பதற்கு முக்கியத்துவம் வழங்குதல்.

3) யூடியூப், கணனி விளையாட்டுக்கள், சினிமா, முதலிய இக்காலச் சிறார்கள் விரும்பும் ஊடகங்கள் மூலம் தமிழைக் கற்பிப்பதற்கு அதிக முக்கியத் துவம் வழங்குதல்.

4) தமிழ் என்பது புலம்பெயர் சிறார்களுக்கு இரண்டாவது மொழி என்பதைக் கொள்கையளவில் ஏற்றுக்கொள்வது மாத்திரமல்லாமல் பாடத்திட்டங்கள் யாவும் இரண்டாவது மொழிக் கற்பித்தலுக்கு அமைவாக இருப்பதை ஊர்ஜிதம் செய்தல்.

5) “தமிழைக் கற்பது ஒரு சந்தோஷமான அனுபவம்” என்ற எண்ணம் சிறார்கள் மத்தியில் வேரூன்றும் படி, வாராந்தம் தமிழ் வகுப்பை அவர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கும்படி, விளையாட்டுக்கள், நாடகம், பாடல், நடனம், முதலியவற்றின்மூலம் தமிழ்க் கல்வியை மேம்படுத்த உதவுதல்.

6) “ஓரளவு தமிழ் தெரிந்த எவரும் தமிழ்ப் பாடசாலையில் கற்பிக்கலாம்” என்று இல்லாமல் ஆசிரியர்களின் ஆசிரிய வாண்மை பற்றிக் கவனம் செலுத்துவதுடன், தற்கால ஆசிரியத்துவத்திற்கு ஒத்துவராத எண்ணக்கருக்களை வைத்திருப்பவர்கள் (உதாரணமாக “அடியாத மாடு படியாது” என்பதுபோன்ற எண்ணப்பாடுகளை உடையவர்கள்) ஆசிரியர்களாக நியமிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்தல்.

7) இரண்டாவது தலைமுறை இளையோரையும் தமிழை இரண்டாவது மொழியாகப் பேசும் புலம்பெயர்ந்தோரையும் ஆசிரியர்களாக உள்வாங்குதல். இவர்கள் தமது மாணவர்களை அதிகளவில் புரிந்து கொள்வார்கள். 

8 ) உலகின் எல்லாப் பகுதிகளிலும் (அதாவது மேற்கு நாடுகள், கிழக்கு நாடுகள் உட்பட) பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞான அடிப்படையிலான கற்பித்தல் முறைகள் இருக்கின்றன என்பதையும், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இக் கல்விக் கொள்கைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளல். அதாவது “எங்கள் காலத்தில் இப்படித் தான் படித்தோம்” என்ற மாதிரியான வாதங்களுக்கு இனி இடமில்லை என்பதைப் புரிந்து கொள்ளுதல்.

9) பாடசாலைப் பருவம் தாண்டிய தமிழ் இளையோருக்கு தமிழைப் பேசிப் பழகும் சந்தர்ப்பங்கள் இருப்பதை உறுதி செய்வதுடன், பேச்சு மொழியின் அடிப்படையிலான வகுப்புகள் மற்றும் செயற்பாடுகளை முடிந்தவரை நடாத்துதல்.

10) தமிழ்க்கல்வி என்பதைத் தமிழர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல், தமிழர் அல்லாதோர் மத்தியில் எமது மொழியின் தொன்மையையும் தொடர்ச்சியையும் தெரியப்படுத்தி இரண்டாம் மொழியாகத் தமிழ் கற்கும் தமிழர் அல்லாதோர் தொகையை அதிகரித்தல்.

சுருக்கமாகச் சொன்னால், புலம்பெயர் நாடுகளில் தமிழைக் கற்பித்தல் என்பது தமிழின் ஆழத்தில் மூழ்கி முத்தெடுக்கும் செயற்பாடாக இல்லாமல் ஒரு தொடர்பாடல் மொழியாகத் தமிழ் மொழியின் பாவனையை அகலப்படுத்தும் செயற்பாடாக இனிவரும் காலங்களில் அமைவது காலத்தின் தேவை.தமிழ் மொழியின் பெருமை அதன் தொன்மையை விட, அதன் தொடர்ச்சியிலேயே அதிகமாகத் தங்கியுள்ளது. “ஆரியம் போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா நின் சீரிளமைத் திறம் வியந்து” என்று அதன் பெருமையைப் பேசுவார் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை. அத்தகு தமிழ் புலம்பெயர் நாடுகளில் தொடர்ந்து வாழ்வதோடு வளரவும் வேண்டுமாயின், புலம் பெயர் நாடுகளில் தமிழ் கற்பித்தல் பற்றிய ஆழ்ந்தகன்ற மீளாய்வும், குறிப்பிடத்தக்க திசைமாற்றமும் அவசியம் என்றே தோன்றுகிறது. இதுபற்றி மேலும் ஆரோக்கியமான விவாதங்கள் இடம்பெற வேண்டும்.

(சில நாள்களின் முன் சிட்னியில் இடம்பெற்ற தமிழ்ப் போட்டியொன்றின் முடிவில் நடுவர்களாக வந்த சிலருடன் இவ்விடயம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். நாமெல்லோரும் இவ்விடயத்தில் ஒத்துணர்வு உடையவர்களாக இருந்தோம், இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களுக்கு நான் முழுமையாகப் பொறுப்பேற்றுக்கொள்ளும் அதே வேளை, குறித்த நாளன்று இது பற்றி ஒத்துணர்வுடன் கலந்துரையாடல் செய்த மருத்துவர். நளாயினி சுகிர்தன் Nalayini Sugirthan, கலாநிதி கௌசல்யா மயில்வாகனம், திரு. நிமால் நிர்மலேந்திரன் ஆகியோரைக் குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன்).

ஆசிரியர்: விழிமைந்தன்

2 கருத்துக்கள்

  1. மிகவும் அருமையான ஆழமான கட்டுரை. கட்டுரையாளருடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். இதனை சாத்தியப்படுத்துவதற்கு பாடசாலைகளில் பேச்சுத்தமிழை அடிப்படையாக கொண்ட வகுப்புகளை ஆரம்பிக்க பெற்றோர் அழுத்தம் கொடுக்க வேண்டும். நன்றி

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *