மாப்பாண முதலியார்

ங்ககாலத்தில் பாணர் என்றால் பாடுபவர்கள். அவர்களுள் சிறந்தவருக்கு மாப்பாணர் என்ற பெயர் உண்டு. இவர்கள் நிலவுடமையாளர்கள் அல்ல. மாறாக, அரசர்கள், பிரபுக்களுக்கு முன்னால் சென்று யாழ் வாசித்துப் பாடி, அவர்களின் ஆதரவில் வாழ்பவர்கள்.

“முதலியார்” என்றால் தமிழகத்தின் வடதிசை வேளாளர் அல்லது தொண்டைமண்டல வேளாளர்களுக்குரிய பட்டம். இவர்கள் நிலவுடைமையாளர்கள். அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்தவர்கள். தமிழக அரச குடும்பங்களில் திருமண உறவு கொண்டவர்கள். கன்னடச் சிற்றரசர்களைக்கூட சோழர்கள் “முதலி” என்று அழைத்திருக்கிறார்கள். பிற்காலத்தில் யாழ்ப்பாண அரச குடும்பத்திலும் பட்டமற்ற அரசனின் சகோதரர்கள் “முதலி” என்று அழைக்கப்பட்டனர்.

“மாப்பாண முதலியார்” என்றால் இவ்விரண்டையும் கலப்பதாக இருக்கிறது. இப்படியொரு பட்டம் எவ்வாறு ஏற்பட்டது? இங்கேதான் யாழ்ப்பாணத்தின் வரலாறு முக்கியம் பெறுகிறது. 

பன்னிரண்டாம் நூற்றாண்டிலே, தொண்டைமண்டலத்திலே, கண் தெரியாத வேளாளன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் வீரராகவன். அவன் கவிதை புனைவதில் சிறந்து விளங்கினான். கண் தெரியாததாலோ என்னவோ பாடுவதிலும் யாழ் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றான். விவசாயம் செய்வதற்கு அவனது பார்வையற்ற நிலை இடையூறாக இருந்தது. “அந்தகக்கவி வீரராகவ முதலியார்” என்று அவனை மக்கள் அழைத்தனர்.

இந்த வீரராகவ முதலி ஒருநாள் வீட்டை விட்டு வெளியேறிப் போய் விட்டான். சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலையில் மனைவி இவனது குருட்டுத்தன்மையைக் குறிப்பிட்டு ஏச, அதைத் தாங்க முடியாமல் வெளியேறினான் என்று கர்ண பரம்பரைக் கதை கூறும். அது உண்மையோ என்னவோ தெரியாது. ஆனால் வீரராகவ முதலி மரக்கலம் ஒன்றைப் பிடித்துக்கொண்டு, எப்படியோ இலங்கைத் தீவின் வடக்குப் பகுதிக்கு வந்துவிட்டான். அங்கு அரசாண்ட அரசனைப் பாடிப் பரிசு பெற்று, தன் வறுமையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று தான். அவனது மரக்கலம் ஆழ்கடலுக்குச் செல்லாமல் தமிழகத்தின் கரையோரமாகவே வந்து பாக்கு நீரிணையைக் கடந்து, கரையோரத்தில் இருந்த அரசனின் தலைநகரை அடைந்தது.

வட இலங்கையில் அப்போது ஆட்சி செய்தவன் வாலசிங்கன். இவன், (அநேகமாக) சோழ இளவரசி மாருதப் புரவீக வல்லியின் மகன். வடமராட்சிப் ( வடமர் + ஆட்சி) பகுதியின் வல்லிபுர நகரத்தில் (இந்நகரம் சிங்கைநகர் என்றும் அழைக்கப்பட்டது – பொங்கொலி நீர்ச் சிங்கைநகர் என்று இலக்கியம் பேசும்) இருந்து அரசாண்டவன். தாயைப்போல விகார முகம் கொண்டவன். படையெடுப்பு அபாயங்களை அந்த நேரத்தில் எதிர்நோக்கியிருந்தான். அதனால், தன் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களில் அதிகமான தமிழரைக் குடியிருத்த வேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருந்திருக்கும். அவனது உடல் நிலையும் அப்போது மிகவும் நன்றாக இருக்கவில்லை.

வீரராகவ முதலி இவன் முன்னால் பரிசு பெறுவதற்காகப் பாட வந்தான். அரசன் ஒரு திரையைப்போட்டு, அதன் பின்னால் அமர்ந்திருந்தான். அநேகமாக, அவனுக்கு இருந்த விகார முகத்தினால், அவன் கொலு மண்டபத்தில் அவ்வாறு செய்வது வழக்கமாக இருந்திருக்கலாம். அக்காலத்தில் ஐரோப்பிய நாடுகளிலும், விகாரமாக்கும் நோய்கள் பெற்றிருந்த அரசர்கள் (உதாரணமாக, ஜெருசலேமில் சமகாலத்தில் ஆண்ட பால்டுவின் அரசர்) முகமூடி அல்லது திரை போட்டுக்கொண்டு இருப்பது வழக்கம். அரசன் திரைக்குப் பின்னால் இருந்ததை வீரராகவ முதலி செவிப்புலன் மற்றும் உள்ளுணர்வால் ஊகித்துக்கொண்டான். ஆனால் அதன் காரணத்தை அவன் புரிந்து கொள்ளவில்லை. தான் குருடன் என்பதால், தன் முகத்தில் விழிப்பது அபசகுனம் என்று எண்ணி அரசன் அப்படி அமர்ந்திருப்பதாக நினைத்தான். இது அவன் மனத்தைப் புண்படுத்தியது.

“நரைகோட்டு இளங்கன்று நல்வள நாடு நயந்தளிப்பான்

விரைகோட்டு தார்ப்புயன் வெற்பு ஈழ மன்னன் என விரும்பிக் 

கரையோட்டமாக மரக்கலம் போட்டு உன்னைக் காண வந்தால், 

திரை போட்டிருந்தனையே! வால சிங்க சிரோன்மணியே!”

என்று பாடினான்.

யாழ் வாசித்துப் பாடிய வீரராகவனின் பாடலும், பாட்டின் பொருளும் அரசனை உருக்கிவிட்டன. அரசியலையும் அவன் மறக்கவில்லை. எனவே யாழ்க் குடாநாட்டில் தான் இருந்த வடமராட்சி தவிர்ந்த மற்றப் பகுதி ஒன்றை, அதாவது தற்போதைய வலிகாமப் பகுதியை, வீரராகவனுக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டான். அக்காலத்தில் அப்பகுதி மணற்றி என்று அழைக்கப்பட்டது. அநேகமாக வீரராகவ முதலிக்கு “மாப்பாணன்” என்ற கௌரவத்தையும் வால சிங்கன் வழங்கியிருக்கலாம். யாழ் வாசித்துப் பாடுகிற பாணனாகிய வீரராகவன் ஆண்ட இடம் “யாழ்ப் பாணம்” என்று வழங்கப் படுவதாயிற்று. முன்பு வழங்கிய “மணற்றி” என்ற பெயரும் இருந்தது. யாழ்ப்பாடி மறுபடி தொண்டைநாடு சென்று, தனது இனசனத்தினரை அழைத்து வந்து மணற்றியிலே குடியேற்றினான். அநேகமாக, அவனது குடும்பத்தினர் “மாப்பாண வம்சம்” என்று தம்மை அழைத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனாலும் அவர்கள் தொண்டை மண்டல முதலியார் வம்சத்தினர். எனவே மாப்பாண முதலியார்கள்.

வால சிங்கனுக்குச் சந்ததி இருந்ததாகத் தெரியவில்லை. அவனது ஆட்சிக் காலத்தின் இறுதியில் அல்லது அதன்பிறகு முதலாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பிடித்துக்கொண்டான். இக்காலத்தில் “அங்கிருந்த தமிழ்க்குடிகள் பலர் மீண்டும் தமிழகம் சென்றுவிட்டார்கள்” என்று யாழ்ப்பாண வைபவ மாலை கூறும். மணற்றியும் மொழிபெயர்க்கப்பட்டு “வெலிகம” (மணல்க் கிராமம்) என வழங்கப் படுவதாயிற்று.

சில தலைமுறைகளில் சோழப் பேரரசனின் மருமகனும் சோழகங்க வம்சத்தினனுமான கலிங்கமாகன் மறுபடி இலங்கைத் தீவின்மீது படையெடுத்து வந்தான். காரைநகரில் வந்திறங்கிய அவன் முதலில் வல்லி புரத்துக்குச் சென்று அதனை மீட்டுக் கொண்டான். பிறகு அனுராதபுரம், பொலநறுவை ஆகியவற்றைக் கைப்பற்றி, பொலநறுவையில் அரசாண்டான். இதற்குப்பின் “வெலிகம” என்று அழைக்கப்பட்ட மணற்றிப் பிரதேசம் “வலிகாமம்” ஆயிற்று. பழைய “மணற்றி” என்ற பெயர் மறந்துபோக, பராக்கிரமபாகு வழங்கிய பெயரையே சற்றே திரித்து வழங்கினார்கள் போலுள்ளது. (இவ்வாறே சுன்னாகம், மல்லாகம், சுதுமலை போன்றனவும் பராக்கிரமபாகுவின் வீரர்கள் வழங்கிப், பின் தமிழிலே திரிந்த பெயர்கள் ஆகலாம்).

இவனது காலத்தில் (circa 1215 – 1250) தமிழகத்தில் குறிப்பாக தொண்டை மண்டலத்தில் இருந்து பல தமிழர்கள் வட இலங்கைக்குக் கொண்டுவந்து குடியேற்றப் பட்டனர். இவர்களுள் யார் யார் எந்தெந்த ஊரில் குடியேறினார்கள் என்ற விபரத்தை யாழ்ப்பாண வைபவ மாலை விபரமாகக் கூறுகிறது. இவற்றுள், “வாவிநகர் வேளாளன் செண்பக மாப்பாணனையும், அவன் ஞாதியாகிய சந்திரசேகர மாப்பாணனையும்… தெல்லிப்பழையில் இருத்தினான்” என்பது ஒன்று. எனவே யாழ்ப் பாடியின் குடும்பத்தினர் தெல்லிப்பழைப் பகுதியில் குடியேறி இருக்கவேண்டும். எவ்வாறேனும் இவர்கள் தொண்டைமண்டல வேளாளராகிய “மாப்பாணர்” என்பது இவ்வசனத்தின்மூலம் தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறே “மாப்பாண முதலியார்” என்ற பட்டம் உருவாவதாயிற்று. இவர்கள் வம்சத்தினரே நல்லூர் முருகன் ஆலயத்தை நிர்வகிப்பவர்களாக இருக்கலாம்.

மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு இல்லை. ஆனால், அடையாளங்கள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை. எல்லோர் அடையாளத்தையும் மதிப்போம்.

Photo Credit: Gane Kumaraswamy, CC BY-SA 2.0 https://creativecommons.org/licenses/by-sa/2.0, via Wikimedia Commons

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *