“பகடு இடந்து கொள் பசுங் குருதி இன்று தலைவீ!
பலிகொள்!!!” என்ற குரல் எண்டிசை பிளந்து மிசைவான்
முகடு சென்று உரும் இடிந்ததென முழங்க உடனே
மொகுமொகென்று ஒலி மிகும் தமருகங்கள் பலவே!
— கலிங்கத்துப்பரணி – காளி கோயில் வர்ணனை (காலம்: கிபி 1110)
மிருக பலி – நாகரீகமடைந்த, மனிதத் தன்மையுடன் வாழ விரும்பும் ஒரு தற்கால சமூகத்துக்கு ஏற்புடையது அல்ல. முற்றுப்புள்ளி.
மிருகப்பலியை ஆதரித்து (அல்ல, மிருக பலிக்குச் சப்பைக்கட்டுக் கட்டி) பல வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவை சிறுபிள்ளைத்தனமானவை. நகைப்புக்கு இடமானவை.
மிருகப்பலியை ஆதரித்து முன்வைக்கப்படும் சில வாதங்களும் அவற்றுக்கான சுருக்கமான பதில்களும்.
வாதம்: மிருகப்பலி தமிழரின் பாரம்பரியம்.
பதில்: பாரம்பரியம் என்பது நிலையானதல்ல. அது கூர்ப்படைவது. ஒருகாலத்தில் நரபலி, உடன்கட்டை ஏறுதல், அடிமைகளை வைத்திருத்தல் முதலிய வழக்கங்களும் தமிழரிடையே இருந்தன. இவை இன்று ஏற்புடையனவல்ல. பாரம்பரியத்தில் நீண்டதூரம் பின்னோக்கிச் சென்றால் குரங்குகளின் வழக்கங்களையும் நமது பாரம்பரியம் என்று பின்பற்ற நேரிடும்.
வாதம்: மனிதர்கள் கொல்லப்படும்போது கண்டுகொள்ளாதவர்கள் மிருகங்கள் கொல்லப்படும்போது பொங்குகிறார்கள்.
பதில் 1: மிருகபலிக்கு எதிரான பலர் மனிதர்களின் உரிமைகளுக்காகவும் (தமிழர்களின் உரிமைகள் உட்பட) பல்வேறு வழிகளில் குரல்கொடுத்து வந்தவர்களே.
பதில் 2: அவ்வாறில்லாவிடினும் ஒரு தவறு இன்னொரு தவறை நியாயப்படுத்தாது. ஒரு பெரிய தவறுகூட இன்னொரு சிறிய தவறை நியாயப்படுத்திடாது.
பதில் 3: நாம் விமர்சனத்தை எதிர்கொள்ளவேண்டுமேயன்றி விமர்சகரை அல்ல. விமர்சனத்தை யார் செய்தாலும், கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளாமல் விமர்சனம் செய்பவரை ஆராய முயன்றால் நீங்கள் ஏற்கனவே விவாதத்தில் தோற்றுவிட்டீர்கள்.
வாதம்: சைவசமயம் / இந்துசமயம் என்பவற்றில் நிலவும் ஏனைய பிற்போக்குத்தனங்கள் / மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்காதவர்கள் மிருகபலிக்கு எதிராகக் குரல்கொடுக்கின்றனர்.
பதில்: மேலுள்ள பதில்கள் 1,2,3 இங்கும் பொருந்தும். ஒரு தவறு இன்னொரு தவறை நியாயப்படுத்திடாது. கருத்தைக் கருத்தால் மோதுக.
வாதம்: மிருகப்பலி வழக்கம் ஏதோ ஒரு வழியில் பிராமணியத்திற்கு எதிரானது. இது தமிழர்களின் / திராவிடர்களின் வழிபாட்டு முறையாகும். ஆகவே இது ஆதரிக்கப்பட வேண்டும்.
பதில் 1: இலங்கையிலுள்ள அந்தணர்கள் தற்போது மிருகப்பலி / வேள்விகளில் அதிகம் சம்பந்தப்படுவதில்லை என்பது உண்மையே. கிராமிய சிறுதெய்வ வழிபாட்டுடனேயே மிருகப்பலி அதிகம் தொடர்புபட்டுள்ளது. ஆனால், ஆரியர்களின் வழிபாட்டு முறையில் வேள்வியும் மிருகப்பலியும் முக்கிய பங்கு வகித்தன.
ஆரியர் மத்திய ஐரோப்பாவில் இருந்து இந்தியாவுக்குள் வந்தபோது அவர்கள் மந்தை மேய்க்கும் குதிரைக்கார மேய்ப்பர்களாக இருந்தார்கள். பயிர்த்தொழில் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. எனவே எல்லா ஆரியர்களும் பிராமணர் உட்பட மாமிசம் சாப்பிடுபவர்களாக இருந்தார்கள். சிறுதெய்வ வழிபாடும் மிருகங்களை பலியிட்டுச் செய்யும் வேள்வியுமே அவர்களது பிரதான வழிபாட்டு முறைகள்.
மறுபக்கமாக, இந்திய உபகண்டத்தின் சிந்துவெளி முதலிய பிரதேசங்களில் வாழ்ந்த திராவிடர், நாகரிகம் பெற்றவர்களாகவும் பயிர்த் தொழில் செய்பவர்களாகவும் நகரங்களில் வாழ்பவர்களாகவும் இருந்தனர். அவர்கள் மாமிசம் உண்டிருக்கலாம்.ஆனால் அவர்களது பிரதான உணவு பயிர்த்தொழில் மூலம் கிடைத்த தானியங்கள். சிவன் முதலிய பெருந்தெய்வ வழிபாடுகள் அங்கே இருந்ததற்குச் சான்றுகளுண்டு. வேள்வி அங்கே இருக்கவில்லை.
ஆரியர்கள் வட இந்தியாவில் குடியேறிய வேதகாலத்தில் கூடப், பிராமணர்கள் உட்பட எல்லா ஆரியர்களும் இறைச்சி (மாட்டு இறைச்சி, குதிரை இறைச்சி உட்பட!!) உண்பவர்களாகவே இருந்தனர். வேள்வி அவர்களது வழிபாட்டின் பிரதான அங்கமாக இருந்தது. மாமிசம் மட்டுமல்ல மதுவும் வேள்வியின் அங்கமாக இருந்தது. இந்திரன், மித்ரன், வருணன், அக்கினி முதலிய சிறு தெய்வங்களே வேள்வி மூலம் வழிபடப்பட்டுள்ளன. இந்த வழிபாட்டு முறையையே ரிக் வேதம் காட்டுகிறது. சிவன், விஷ்ணு வழிபாடோ, தாவர உணவோ, பிராமணரிடையே இருக்கவில்லை. (“எங்கள் வேள்விக்கூடம் மீதில்” என்ற தனது பாடலில் “வருணன் மித்ரன் அர்யமானும் மதுவை உண்பாரோ?” என்று பாரதிகூடக் கூறியுள்ளார் வேள்வியைப்பற்றி).
ராமாயணத்தில், அசுரர்கள் என்று அவர்கள் அழைத்த திராவிடர்கள் வேள்வியைக் குழப்புபவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். இந்தக் குழப்பங்களில் இருந்து வேள்விகளைக் காப்பாற்றுவதற்கே ரிஷிகள் (பிராமணர்கள்) வந்து ராமனை அழைத்துச் சென்றுள்ளனர். இப்படி வேள்வியைக் குழப்பிய அசுரர்கள் இலங்கை அரசனான இராவணனுக்கு உறவினர்கள் என்று ராமாயணம் தெளிவாகவே கூறுகிறது. இவ்வாறு வேள்விகளைக் காப்பாற்றுவதற்காக ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் முதற்பகையை உண்டுபண்ணியவர்கள் பிராமணர்களே.
சனாதன இந்து மதத்தின் பிற்போக்குத் தன்மையில் இருந்து வெளியில் வர விரும்பிய கௌதம புத்தர் வேள்விகளைக் குழப்பினார். வேள்விகளில் பலியிடப்பட இருந்த மிருகங்களை விடுவித்தார். வட இந்திய ஆரியர்களிடையே தாவர உணவு உண்ணும் பழக்கத்தைக் கொண்டுவந்தார். இதனால் பிராமணர்களின் எதிரியாக அறியப்பட்டார்.
ஆகமொத்தம் திராவிடரிடம் இருந்து பல நல்ல இயல்புகளை ஆரியர்கள் கற்றுக்கொண்டார்கள் (எழுதப் படிக்கவும், நகரங்களை அமைக்கவும், பயிர் செய்யவும், நீர்ப்பாசனக் கால்வாய்களை அமைக்கவும் இப்படி எத்தனையோ விடயங்களைக்கற்றுக்கொண்டார்கள், அது வேறு கதை). அவர்களிடம் இருந்து வேள்வி என்ற தீய வழக்கத்தையும் அதுபோன்ற பிற்போக்குத்தனங்களையும் திராவிடர்கள் கற்றுக் கொண்டார்கள். வேள்வி செய்வது மூலம் பிராமணியத்தை எதிர்ப்போம் என்பது நெய்யைச் சொரிந்து நெருப்பை அணைப்போம் என்பதுபோல.
( உவமைக்குச் சொந்தக்காரர் வள்ளுவர். அருமையான உவமை தந்தீர்கள் வள்ளுவரே, இந்த இடத்தில் இன்னும் பொருத்தம்!)
எனவே வேள்விகள் பிராமணியத்திற்கு எதிரானவை என்பது உண்மையல்ல. உண்மை என்னவெனில் உலகின் சகல நாகரீகங்கள், இனங்களிலும் ஒருகாலத்தில் பலிகள் இருந்தன. நாகரீக வளர்ச்சியுடனேயே இவை குறைந்து வந்துள்ளன.
பதில் 2: ஒரு விடயத்தை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பதை அது பிராமணீயத்துடன் சம்பந்தப்பட்டதா இல்லையா என்பதை வைத்துத் தீர்மானிப்பது முட்டாள்தனம். மூடநம்பிக்கைகள் எதிர்க்கப்பட வேண்டும் – அவற்றைப்பரப்புவது ஆரியப் பார்ப்பனராயினும் சரி, அல்லது திராவிட உணர்வாளராயினும் சரி.
வாதம்: நீதிமன்றம் மிருகப்பலியை ஆதரித்துத் தீர்ப்பளித்துள்ளது.
பதில்: தவறு. மிருகப்பலி செய்வது சட்டப்படி குற்றமல்ல என்றே நீதிமன்றம் கூறியுள்ளது. எல்லோரும் போய் மிருகப்பலி செய்யுங்கள் என்றோ, அது ஒரு நல்ல விடயம் என்றோ கூறவில்லை. அளவுக்கதிகமாக உண்டு சுகநலத்தை இழப்பது, சோம்பேறியாக இருப்பது, காதலித்து ஏமாற்றுவது, மது அருந்துவது, புகை பிடிப்பது, ( மேலைநாடுகளில்) விலைமாதரிடம் செல்வது இவையெல்லாம் சட்டப்படி குற்றங்கள் அல்ல. ஆனால் அவை விரும்பத்தகாத விடயங்கள். அவற்றுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்வதும் சுய விருப்பின் அடிப்படையில் அவற்றைத் தவிர்ப்பதும் அவசியம். அது போன்றே இதுவும்.
வாதம்: சுகாதாரமான மாமிச உணவை ஏழைமக்கள் பெற மிருகப்பலி உதவுகிறது.
பதில்: தானம் செய்வது உங்கள் நோக்கமாக இருந்தால் கடையில் இறைச்சியை வாங்கி ஏழைகளுக்குப் பகிர்ந்தளியுங்கள். அன்பையும்
கருணையையும் போதிக்கவேண்டிய கோயில் முன்றலில் வைத்துக் கொடூரமாக அதைச் செய்ய வேண்டியதில்லை.
வாதம்: தாவரங்களுக்கும் உயிருண்டு. ஏன் அதைப்பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை.
பதில்: இதே வாதத்தை மறுபக்கம் நீட்டினால் மிருகங்களைப்போலவே மனிதருக்கும் உயிருண்டு. ஆகவே மிருகப்பலியை ஆதரிப்பவர்கள் நரபலியையும் ஆதரிப்பீர்களா? மனித இறைச்சி சாப்பிடத் தயாரா? குறைந்த பட்சம், மரண தண்டனை கொடுக்கப்பட்ட குற்றவாளிகளைத்தன்னும் கோயில் முன்றலில் வெட்டி அவர்களின் இறைச்சியைச் சாப்பிடத்தாயாரா? அப்படி ஏன் செய்வதில்லை?
தாவரங்களுக்கும் ‘உயிருண்டு’ என்பது உண்மையே. ஆனால், அவற்றுக்கு மூளை, நம்மையொத்த நரம்புத்தொகுதி என்பன கிடையாது. அவை வலியை எப்படி உணர்கின்றன என்பன பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முழுமை பெறவில்லை. நம்மைப்போல குடும்ப அமைப்புகள் அவற்றுக்குக்கிடையாது. அவை கண்ணீர் விடுவதில்லை. அப்படி விட்டாலும் அதை நாம் உணர்வதில்லை. அவற்றுக்கு ‘உயிர்’ இருந்தால் அதன் இயங்குநிலைகள் நம்மைவிட வேறுபட்டவை.
ஒரு ஆட்டுக்குட்டி அப்படியல்ல. அதற்குத் தாயுண்டு. நம்மைப்போல தாய், பிள்ளை என்ற புரிதலுண்டு. தாய் முலையில் பால் குடித்ததுண்டு. நம்போல மூளையும், நரம்புத்தொகுதியும், குருதியும், இதயமும் உண்டு. கண்ணீர் உண்டு. வெட்டப்படும்போது நம்மைப்போல் வலியுண்டு. அதன் வேதனையை எம்மால் புரிந்துகொள்ள முடியவேண்டும். அது கூர்ப்பில் நமக்கு மிக அருகிலுள்ளது.
“காலில் ஒரு பாவி கழுத்தில் ஒரு மாபாவி
கோலி இழுக்கக் கொடும்பாவி வெட்டினனோ?”
என்று தங்கத்தாத்தா பாடுகிற வேதனை தாயாட்டுக்கு உண்டு.
உலகில் எந்த உயிரையும் வேதனைப்படுத்தாமல் வாழ்வது சாத்தியமில்லை. ஆனால் முடிந்தளவு மற்றைய உயிர்களை வேதனைப்படுத்துவதைக் குறைக்கலாம். இதில் மனிதருக்கு அடுத்த படிநிலை கூர்ப்பில் மனிதருக்கு அருகிலுள்ள உயிரினங்கள். மங்கோலியர்கள் புயலில் இறப்பதைவிட தமிழர்கள் இறப்பதில் நாம் அதிகம் வேதனைப்படுவதில்லையா? அதுபோலவே ஆடு / அகத்திமரம் ஒப்பீடும்.
வாதம்: புலால் சாப்பிடுகிறவர்கள் மிருகபலிக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் அர்த்தமில்லை.
பதில்: புலால் சாப்பிடுவதை முடிந்தவரை குறைப்பது நல்லது என்பதே என் நிலை. இருந்தாலும், புலால் சாப்பிடுகிறவர்கள் பலிக்கு எதிராகக் குரல் கொடுக்கக்கூடாது என்றில்லை. ஒரு விலங்கைக் கொல்வதாக இருந்தாலும் முடிந்த வரை வேதனையின்றிக் கொல்லல் நன்று. ஒரு மனிதனுக்கு மரணதண்டனையை விஷ ஊசி மூலம் நிறைவேற்றுவதற்கும் கண்களைப் பிடுங்கிக் கழுவேற்றுவதற்கும் வித்தியாசமுண்டு.
மேலை நாடுகளில் இறைச்சிக்காகக் கொல்லப்படும் கால்நடைகள் கூட வேதனை குறைந்த வகையில் கொல்லப்பட வேண்டும் என்று சட்டங்களுண்டு. வதைத்துக்கொல்லும் நாடுகளில் இருந்து இறைச்சி இறக்குமதி செய்யத் தடைகளுண்டு.
மேலும், மேலே கூறியதுபோல, உணவுக்காக வெட்டுவதென்றாலும் கோயில் முன்றிலில் வெட்டுவது அருவருக்கத் தக்கது. எல்லோரும்தான் மலம் கழிக்கிறோம். அதற்காகக் கோயில் முன்றிலில் கழிக்கலாமா?
இன்னும் சில ஆண்டுகளில் செயற்கை இறைச்சி வந்துவிடும். அது விலங்கிறைச்சியைவிட மலிவாகவும் ஆகிவிடும். அப்புறம் இறைச்சிக்காக எந்த விலங்கையும் கொல்ல அவசியமில்லை.
ஆக மொத்தம் வேள்விகள் / பலிகளை ஆதரித்து வாதிடுவதில் எந்தப்பொருளுமில்லை.
(படம்: மாமல்லபுரம் சிற்பம்: எருமை பலிகொடுக்கப்பட்டு வெட்டப்பட்ட தலையுடன் கிடக்கும் பாவனை. படம் எடுத்தவர்: விழி மைந்தன்.)
Very logical Analysis & Argument.Interesting.
Thank you.