ஒரு விடயம் கவனித்தீர்களா? தமிழில் ‘9’ என்ற எண்ணக்கருவுக்கு தனி ஒலிவடிவம் இல்லை. “பத்துக்கு முந்தியது” என்ற கருத்துப்படவே அதன் ஒலிவடிவம் இருக்கிறது. ஆனால், இந்தோ ஆரிய மொழிகளில் 9 இற்குத் தனி ஒலிவடிவம் உண்டு.
இதேபோல, ரோம இலக்கங்களில் 9 இற்குத் தனி வரிவடிவம் இல்லை. “பத்துக்கு முந்தியது” என்ற கருத்துப்படவே அதன் வரிவடிவம் இருக்கிறது.
உதாரணம்: 7,8,9,10
தமிழ்: ஏழு, எட்டு, ஒன்பது (ஒன்-பத்து), பத்து
ஆங்கிலம்: seven, eight, nine, ten
(எனக்கு சமஸ்கிருதம் அதிகம் தெரியாதபோதும், அங்கும் இப்படித்தான் என்று நினைக்கிறேன்: சப்த, அஷ்ட, நவ, தச. Similar to English in sound too)
ரோம இலக்கங்கள்: VII, VIII, IX, X ( 9 என்பதை VIIII என்று எழுதாமல் IX – பத்துக்கு ஒன்று குறைவு அதாவது பத்துக்கு முந்திய இலக்கம் என்ற கருத்தில் எழுதியிருப்பதைக் கவனிக்க)
அதேபோல: 70, 80, 90, 100
தமிழ்: எழுபது, என்பது, தொண்ணூறு, (தொல்-நூறு ), நூறு
ஆங்கிலம்: seventy, eighty, ninety, hundred
ரோம இலக்கங்கள்: LXX, LXXX, XC, C
அதேபோல: 700, 800, 900, 1000
தமிழ்: எழுநூறு, எண்ணூறு, தொள்ளாயிரம் (தொல்-ஆயிரம்), ஆயிரம்.
ஆங்கிலம்: seven hundred, eight hundred, nine hundred, thousand
ரோம இலக்கங்கள்: DCC, DCCC, CM, M
( தமிழர்கள் பத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை ரோமர்கள் ஐந்துக்கும் கொடுத்து 4 என்பதை ‘ஐந்துக்கு முந்தியது’ என்று ஆக்கி விட்டார்கள்)
எனவே, தமிழ் ஒலிவடிவத்திற்கும் ரோம வரிவடிவத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு வெளிப்படை. இது தமிழர்களிடமிருந்து ரோமர்களுக்குப்போன எண்ணக்கருவா? ரோமர்களிடமிருந்து தமிழருக்கு வந்த எண்ணக்கருவா? ஒலிவடிவம் எப்போதும் வரிவடிவத்திற்கு முந்தியது. ரோமர்கள் எழுதத்தொடங்கும் வரை தமிழர்கள் வாயால் எண்ணாமல் இருந்திருக்க முடியாது. ( முக்கியமாக, 9 மாதிரி சிறிய இலக்கத்தை). ஆகவே, இந்த எண்ணக்கரு தமிழர்களிடத்தும் ரோமர்களிடத்தும் வெவ்வேறாக உருப்பெற்றிருக்க வேண்டும், அல்லது ரோம வரிவடிவம் தோற்றம் பெறும்காலத்தில் அவர்கள் தமிழர்களுடன் தொடர்பில் இருந்திருக்க வேண்டும்.
உலகில் இந்தோ-அரேபிய வரிவடிவத்தை (1,2,3,4..) இலக்கங்களுக்குப் பாவிக்காமல் தமக்கென வரிவடிவத்தை வைத்திருக்கும் மிகச்சில மொழிகளில் இலத்தீனும் (ரோம மொழி) தமிழும் உள்ளடங்கும் என்பதும் கவனிக்கற்பாலது.
இதுபற்றி எனது வேறும் சில கேள்விகள்:
-தொன்மை என்றால் பழமை, முந்தியது. எனவே நூறுக்கு முந்தியது தொல்-நூறு என்றும், ஆயிரத்திற்கு முந்தியது தொல்-ஆயிரம் என்றும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். பிறகு மருவி விட்டது. நவீன தமிழில் இதைத்திருத்தி தொன்னூறு (தொல் + நூறு), தொல்லாயிரம் என்று எழுதுவது நல்லதா?
– அதேமாதிரி தொன்பது என்பது மருவி ஒன்பது ஆகியிருக்கலாமா? குறிப்பாக ஒன்பதற்கு முற்பட்ட இலக்கங்கள் அகரவரிசையில் தொடங்குவதால் (ஐந்து, ஆறு, ஏழு, எட்டு) மாணவர்கள் வாய்ப்பாடம் செய்யும்போது தொன்பது என்பதை ஒன்பது என்று சொல்லி, அது நிலைத்து விட்டதா? இதை தொன்பது என்று மாற்றி விடுவது நல்லதா?
அடுத்த தலைமுறைக்கு தமிழைக் கொண்டுசெல்ல வேண்டுமென்றால் தமிழில் logic இருக்கவேண்டும். எனவே மேற்சொன்ன விடயங்கள் பற்றி தமிழறிஞர்கள் சிந்திக்க வேண்டும்.