வாசகர்களுக்கு ஒரு ‘கதை’

வாசகர்களுக்கு ஒரு ‘கதை’ சொல்லப் போகிறேன். முதலாம் பராக்கிரமபாகுவின் யாழ்ப்பாண ஆக்கிரமிப்புப் பற்றிய ஒரு ‘கதை’.

இது உண்மையில் கதையல்ல. வரலாற்றில் இப்படித்தான் நடந்திருக்கும் என்று மேற்கொள்ளப்படுகின்ற ஒரு கற்றறிந்த ஊகங்களின் தொடர் (series of educated guesses). இதை நான் ‘கதை’ என்று அழைப்பதற்குக்காரணம் இதுதான். இந்தக் ‘கதை’ யானது ஏற்கெனெவே நான் எழுதியிருக்கும் பல பதிவுகளின் அடிப்படையிலானது. என்னுடைய ஊகங்களுக்கான காரணங்களை அந்தப்பதிவுகளில் விரிவாகக் கூறியிருக்கிறேன். மறுபடியும் அவற்றையெல்லாம் ஒரு பதிவில் எழுதுவது சாத்தியமில்லை. ஏதாவது ஊகத்திற்கான காரணத்தை நான் முன்பு குறிப்பிடத் தவறியிருந்தால், அதை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். மற்றும்படி ஒரு ‘ கதைவடிவில்’ சொல்லிக்கொண்டு போனால்தான் இந்தப்பதிவை நிறைவுசெய்ய முடியும். என்னுடைய ஊகங்களுக்கான காரணங்கள், எனது பழைய பதிவுகளைப் படித்தவர்களுக்கு விளங்கும்.

கதை இதுதான்.

* சென்ற மிலேனியத்தின் தொடக்கத்திலே அதாவது கிபி 1000ம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் பெரும்பாலும் காடாயிருக்கிறது. இடைக்கிடை சில கிராமங்கள் இருக்கின்றன. அவற்றில் இருந்தவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் தான். பெரும்பாலும் மீனவர்களும் வேடர்களும். ஆனால், தனி அரசு ஒன்று க்குத் தேவையான சனத்தொகை இல்லை. அரசியல் தேவையும் இல்லை. ஏனெனில் அதற்கு முற்பட்ட ஆயிரம் ஆண்டுகளில் பலதடவை இராசரட்டையில் (அனுராதபுர அரசு) தமிழர்கள் ஆட்சி செய்து இலங்கைத்தீவின் பிரதான அதிகார மையத்தையே தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கிறார்கள். ஆனால் யாழ்குடாவில் அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் அரச குலங்களைச் சேர்ந்தவர்களோ போர்வீரர்களோ அல்ல. அவர்கள், அதற்குமுற்பட்ட ஆயிரம் ஆண்டுகளில், அவ்வப்போது  மாறிமாறி வந்த தமிழகப்பேரரசுகளின் extension ஆகவே தங்களைக் கருதிக்கொள்கிறார்கள். அல்லது, அனுராதபுரத்தில் தமிழரசு இருந்தால் அதற்கு விசுவாசமாயிருக்கிறார்கள். இவர்களின் விசுவாசம் பற்றி யாரும் அலட்டிக்கொள்ளவும் இல்லை.

*கிபி 980 அளவில் இருந்து கிட்டத்தட்ட முழு இலங்கைத்தீவும் சோழப்பேரரசின் பிடியில், “மும்முடிச் சோழ மண்டலம்” எனும் மாநிலமாக இருக்கிறது. சோழர்களின் அதிகார மையம் பொலநறுவையில் இருந்து செயற்படுகிறது. ருகுணுப்பிரதேசத்தில் சிங்கள இளவரசர்கள் சோழர்களுக்கு எதிராகக் கலகம் செய்து வருகிறார்கள். கிபி 1050 அளவில் முதலாம் விஜயபாகு, கலகக்காரர்களின் தலைவனாக முதன்மை பெறுகிறான்.

* யாழ்ப்பாண அரசின் முதல் அரசனான உக்கிரசிங்கன் பெரும்பாலும் ஒரு சோழத்தளபதி. இவன் அநேகமாக 1060- 1070 இற்குள், விஜயபாகுவுடன் போராடுவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட மேலதிகப்படைகளின் தளபதியாக இலங்கை வந்து, பொலநறுவையில் நிலைகொள்கிறான்.

* கிபி 1070 இல் சோழ நாட்டில் பெரும் உள்நாட்டுப்போர் ஏற்படுகிறது. இதைப்பாவித்து, முதலாம் விஜயபாகு மும்முனைத்தாக்குதல் மூலம் பொலன்னறுவையை மீட்கிறான். உக்கிரசிங்கன் யாழ்ப்பாணத்துக்குப் பின்வங்கி, அங்கே தனியரசை ஸ்தாபிக்கிறான். தலைநகர் கந்தரோடை.

* முதலாம் குலோத்துங்கன் சோழ நாட்டை ஸ்திரப்படுத்தியபின்னர், கிபி 1100 அளவில், அவனது தளபதி கருணாகரத்தொண்டைமான் இலங்கை வந்து, உக்கிரசிங்கனைச் சோழ மேலாதிக்க வட்டத்தினுள் கொண்டுவருகிறான். தொண்டைமானாறு வெட்டப்படுகிறது. குடியேற்றங்கள் சில நிகழ்கின்றன.

* சோழ இளவரசி மாருதப்புரவீக வல்லியை உக்கிரசிங்கன் மணக்கிறான். தலைநகர் வல்லிபுரத்திற்கு (சிங்கைநகர்) மாறுகிறது. மேலும் சில சோழர் குடியேற்றங்கள் நிகழ்கின்றன. இருந்தாலும் ஒரு அரசைப் பேணுவதற்குத் தேவையான சனத்தொகை இல்லை. குறிப்பாகப் பயிர்த்தொழில் செய்வோர் இல்லை.

* மேற்குறித்த தம்பதிகளுக்கு வாலசிங்கன் எனும் மகன் பிறக்கிறான். அவன், அதிராஜேந்திரன், மாருதப்புரவீகவல்லி ஆகியோருக்கும் சோழ பரம்பரையில் வேறு பலருக்கும் இருந்தது ஆன விகாரமாக்கும் நோயுடன் பிறக்கிறான்.

* வாலசிங்கன் அரசனாகிறான் (கிபி 1110 – 1150 இற்குள்). தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாடி என்ற அந்தகக்கவி வீரராகவ முதலி நாகபட்டினத்திலோ அல்லது மாமல்லபுரத்திலோ கப்பல் ஏறி, ‘ கரையோட்டமாகச்’ சிங்கைநகர் வந்து வாலசிங்கனைப் போற்றிப் பாடுகிறான். குரூபியான வாலசிங்கன் அரசசபையில் ‘ திரைக்குப் பின்னால்’ இருந்து அரசாண்டது பதிவு செய்யப்படுகிறது.  (“கரையோட்டமாக மரக்கலம் போட்டுன்னைக் காண வந்தால், 
திரை போட்டிருந்தனையே வால சிங்க சிரோன்மணியே” – யாழ்ப்பாடி என்ற வீரராகவ முதலியாரின் கவிதை )

*வாலசிங்கன் யாழ்க்குடாவின் ஒரு பகுதியை, குறிப்பாக இன்றைய வலிகாமத்தின் தெற்குப்பகுதியை யாழ்ப்பாடிக்குப் பரிசிலாக வழங்குகிறான். இவ்விடம் மணற்றிடல் அல்லது  மணற்றி என்று அப்போது அழைக்கப்படுகிறது. யாழ்ப்பாடி தனது உறவினர்களை, அதாவது பயிர்த்தொழில் செய்வோரான தொண்டைமண்டல வேளாளரைக் கொணர்ந்து குடியேற்றுகிறான். யாழ்க்குடாநாட்டின் சனத்தொகை அதிகரிக்கிறது (இங்கே நான் யாழ்க்குடா என்று சொல்வது இப்போதைய பெயரே. அப்போது அந்தப் பெயர் இல்லை) .

* கிபி 1150  அளவில் பொலநறுவையில் மகா பராக்கிரமபாகு அரசனாகிறான். போட்டி இளவரசர்களை வென்று சிங்களவர்களை ஒன்று படுத்துகின்றான்.

* கிபி 1064 அளவில் பாண்டி நாட்டு அரசுரிமைப் போட்டியில் மகா பராக்கிரமபாகு தலையிட்டதை சோழ, சிங்கள மூலங்கள் உறுதிசெய்கின்றன. அவனது படையெடுப்பு வட இலங்கையில் இருந்து வந்திருக்கிறது. எனவே 1150 – 1160 இற்குள் யாழ்ப்பாணம் உட்பட்ட வட இலங்கையை பராக்கிரமபாகு ஆக்கிரமித்து இருக்க வேண்டும்.

* இக்காலத்தில் அரைச் சுதந்திர அரசாகத் தோற்றம்பெற்று வந்த யாழ்ப்பாண இராச்சியத்திற்குப் பராக்கிரமபாகுவை எதிர்க்கும் ஆட்பலம் இருந்திருக்காது. மேலும் அரசன் வாலசிங்கன் நோயாளி. வீரராகவ முதலி குருடன். மன்னர் குலத்தவனும் அல்ல. எனவே பலவீனமான தலைமைத்துவம். பலவீனப்பட்டு வந்த சோழப்பேரரசு உதவிசெய்யும் நிலையில் இருந்திருக்கவில்லை. இது தொடர்ந்து பாண்டியநாட்டில் நடந்த நிகழ்ச்சிகளால் தெளிவாகிறது. பாண்டிய நாட்டிலேயே சோழப்பேரரசு தலையிடுவதற்குத் தயங்கியதோடு, தோற்றுவிடும் கட்டத்திலும் இருந்திருக்கிறது. எனவே யாழ்ப்பாண அரசுக்கு உதவி செய்ய முடியாத நிலையிலேயே இருந்திருக்கும். எனவே பராக்கிரமபாகுவின் பெரும் படைகள் வந்தபோது மிதமான எதிர்ப்புடனோ, எதிர்ப்பின்றியோ யாழ்ப்பாணம் பணிந்திருக்க வேண்டும். வாலசிங்கன் போரில் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது அதற்கு முன்பே தனது பரம்பரை நோயினால் இறந்திருக்கலாம். அவனுக்குஅரசேறக்கூடிய சந்ததி இருக்கவில்லை. இக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து சில தமிழ்க்குடிகள் மறுபடியும் தமிழகம் செல்கின்றனர்.

* பராக்கிரமபாகுவின் ஆக்கிரமிப்பில் மணற்றி “வெலிகம (மணலூர்)” என்று சிங்களத்தில் பெயரிடப்படுகிறது. மல்லாகம், சுன்னாகம், கொக்குவில், கோண்டாவில்,சுதுமலை முதலிய ஊர்கள் சிங்களவர்களால் பெயரிடப்படுகின்றன. இவற்றிலும், முக்கியமான துறைமுகங்களிலும் சிங்களப்படைகள் நிலைகொள்கின்றன.

* இதனைத்தொடர்ந்து மகா பராக்கிரமபாகு கிபி 1064 அளவில் தமிழகத்தின் தென்பகுதியை ஆக்கிரமிக்கிறான். பாண்டியநாட்டில் ஏற்பட்டிருந்த அரசுரிமைப்போட்டியில் தலையிட்டுக் குலசேகர பாண்டியனுக்கு எதிராகப் பராக்கிரம பாண்டியனை அரியணை ஏற்றுவது இதற்கான சாட்டு. ராமேஸ்வரம் ஊடாகத் தண்டநாயகன் லங்காபுர தலைமையில் சிங்களப்படைகள் தமிழகத்தில் நுழைகின்றன.

* பாண்டிய நாடு சோழ சாம்ராஜ்யத்தில் பெயரளவில் சேர்ந்ததாக இருப்பினும், அரியணைப்போட்டியில் சோழப்பேரரசு நேரடியாகத் தலையிடவில்லை. குலசேகர பாண்டியனைப் பாண்டிய மன்னனாக அங்கீகரித்து அவனுக்கு மட்டுப் படுத்தப்பட்ட ஆதரவு மட்டும் வழங்குகிறது. குலசேகர பாண்டியனின் பாண்டியப்படைகள் லங்காபுரவைக் கடுமையாக எதிர்த்தும் லங்காபுர கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மதுரையைக் கைப்பற்றுகிறான். பராக்கிரம பாண்டியனின் மகன் வீர பாண்டியனை அரசனாக்குகிறான். குலசேகர பாண்டியன் தப்பியோடிச் சோழ நாடு வருகிறான்.

* குலசேகரனுக்கு ஆதரவாகச் சோழ சேனாதிபதி திருச்சிற்றம்பலமுடையான் பெருமான் நம்பிப் பல்லவராயன் தனது படைகளுடன் களமிறங்குகிறான். அதேநேரம் இலங்கையில் இருந்து தண்டநாயகன் ஜகத் விஜய தலைமையில் மேலதிக சிங்களப்படைகள் அனுப்பப்படுகின்றன. பாசி, தொண்டி துறைமுகங்களுக்கு அருகில் நடந்த போர்களில் சிங்களப்படைகள் ஆரம்ப வெற்றியைக் காண்கின்றன. சோழ நாடும் சிங்களப்படைகளிடம் வீழுமோ என்ற அச்சம் சோழ சாம்ராஜ்யத்தில் நிலவுகிறது.

* இதைத் தொடர்ந்து சோழ இளவரசன் மூன்றாம் குலோத்துங்கன் தலைமையில் மேலதிக சோழப்படைகள் பாண்டிநாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. மதுரைக்கு அருகில் நடந்த போரில் இறுதி வெற்றி சோழர் வசமாகிறது. தண்டநாயகர்கள் லங்காபுர, ஜகத் விஜய ஆகியோரின் தலைகள் வெட்டப்பட்டு மதுரைக் கோட்டை வாசலில் தொங்கவிடப் படுகின்றன. எஞ்சிய சிங்களப்படை இலங்கைக்குத் தப்பி ஓடுகிறது. சோழர்களால் குலசேகர பாண்டியன் மதுரையில் அரசன் ஆக்கப்படுகிறான்.

* இதைத் தொடர்ந்து மகா பராக்கிரமபாகு மறுபடியும் மதுரையைத் தாக்க ஆயத்தம் செய்கிறான்.  யாழ்க்குடாநாட்டின் ஊர்காவற்றுறை, வலிகாமம் ஆகிய இடங்களில் அவனது தயாரிப்புகள் நடந்ததாக சோழர் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. (“வலிகாமம்” என்ற பெயர் கிபி 1170 களில் எழுதப்பட்ட சோழர் கல்வெட்டு ஒன்றில் முதன்முதல் சொல்லப்படுகிறது. சோழர்கள் வேறுநாடுகளைப்பற்றிக் குறிப்பிடும்போது பெயர்களை உச்சரிப்பு ரீதியாகத் தமிழ்ப்படுத்துவது (transliterate) வழக்கம். உதாரணம்: மான்யகேட் => மண்ணைக் கடகம். ஆகவே “வெலிகம” என்பதை வலிகாமம் என்று உச்சரிப்பு ரீதியாகத் தமிழ்ப்படுத்தி இருப்பார்கள். அந்த நேரத்தில் வலிகாமம் பராக்கிரமபாகுவின் கீழ் இருந்ததாகச் சோழர் கல்வெட்டு கூறுகிறது. எனவே யாழ்ப்பாடிக்கு வழங்கப்பட்ட “மணற்றி” பிரதேசம் பராக்கிரமபாகுவால் translate செய்யப்பட்டு பின்னர் சோழர்களால் transliterate செய்யப்பட்டு வலிகாமம் ஆகியது என்பது தெளிவு).

* இதை அறிந்த சோழர் படைத்தலைவனும் திருச்சிற்றம்பலமுடையானின் அண்ணனுமான அம்மையப்பன், பராக்கிரமபாகுவின் எதிரியான மானாபரணன் எனும் சிங்கள இளவரசனின் உதவியுடன், வட இலங்கை சென்று பராக்கிரமபாகுவின் கப்பல்களை அழித்து மீள்கிறான். ஆனால், அப்போது அவன் நிலப்பிரதேசம் எதையும் கைப்பற்றியதாக இல்லை. எனவே, யாழ்ப்பாணம் தொடர்ந்தும் மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியிலேயே இருந்திருக்க வேண்டும்.

*இதற்குச் சிறிது பிற்பாடு பராக்கிரமபாகு இறக்கவே சோழ – சிங்களப்போர் ஓய்கிறது. தொடர்ந்து பொலநறுவையில் அறியணைக்குழப்பமும் போட்டியும் ஏற்படுகின்றன. பாண்டிய, கலிங்க அரச வம்சங்கள் அரியணைக்குப் போட்டி இடுகின்றன. இறுதியில், 1212 அளவில், பராக்கிரம பாண்டியன் என்ற பாண்டிய வம்சத்தவன் பொலநறுவையில் அரசனாகிறான். (முதற்சொன்ன பராக்கிரம பாண்டியன் அல்ல. அவனின் உறவினன்).

* கிபி 1215 இல் கலிங்க மாகன் என்ற மூன்றாம் குலோத்துங்கனின் மருமகன் முறையான கலிங்க இளவரசனைப் பொலன்னறுவையை ஆக்கிரமிக்கச் சோழர்கள் அனுப்புகிறார்கள். இதுவும் ஒரு முகமூடி போட்ட சோழப்படையெடுப்பு ஆனாலும், கலிங்க வம்சத்திற்குப் பொலநறுவையில் இரத்த உறவுகள் இருந்ததால் legitimcy அதிகம் என்று சோழர்கள் நினைத்திருக்கலாம். மாகன் முதலில் காரைநகரில் இறங்கி, யாழ்ப்பாண இராச்சியத்தின் அப்போதைய தலைநகரான சிங்கைநகர் (வல்லிபுரம்) சென்று, அதிக எதிர்ப்பின்றி அதனை விடுவிக்கிறான். பின்னர் பொலன்னறுவையைத் தாக்கிக் கைப்பற்றி, பராக்கிரம பாண்டியனைக் கண்களைத் தோண்டிக் கொல்கிறான். ராஜரட்டையில் சோழர் ஆட்சி நிலவுகிறது.

* சில ஆண்டுகளில் தமிழகத்தில் சோழப்பேரரசு அஸ்தமிக்கிறது. புதிதாக எழுச்சி பெற்ற பாண்டியப்பேரரசின் உதவியுடன் சிங்கள அரசர்கள் பொலன்னறுவையை மீட்கின்றனர் (ஆனால் தலைநகர் ஆக்கவில்லை). மாகன் யாழ்ப்பாணத்துக்குப் பின்வாங்குகிறான். தமிழகத்தில் முக்கியமாகத் தொண்டை மண்டலத்தில் இருந்து பயிர்த்தொழில் செய்பவர்களையும் வேறு பல தொழிலாளிகளையும் கொண்டுவந்து நல்லூர், திருநெல்வேலி, இருபாலை, புலோலி, இணுவில், தெல்லிப்பழை, நரசிங்கதேவன் துறை (மயிலிட்டி) முதலிய இடங்களில் குடியேற்றுகிறான். சுதந்திர யாழ்ப்பாண அரசை மறுபடியும் ஸ்தாபித்து, தலைநகரை நல்லூருக்கு மாற்றுகிறான்.

*இப்படித்தொடங்கிய யாழ்ப்பாண அரசு, சாவக அரசன் ஒருவனின் படையெடுப்பு, ஆறாம் பராக்கிரமபாகுவின் கோட்டையரசின் படையெடுப்பு ஆகிய நிகழ்ச்சிகள் புறநீங்கலாக, கிபி 1619 இல் இரண்டாம் சங்கிலி போர்த்துக்கேயரால் தோற்கடிக்கப்படுவது வரை (அதாவது கிபி 1230 முதல் 1619 வரை, சுமார் நானூறு ஆண்டு காலம்) நிலைத்திருக்கிறது.

 

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

1 கருத்து

  1. வரலாறு ஒரு பெரிய puzzle போன்றது. அந்த புதிரை விடுவிக்க பல அனுமானங்கள் தேவை படுகிறன.

    சில நேரங்களில் ஒரு time machine இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என எண்ணத் தோன்றும்.

    நல்ல பதிவு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *