“செஜாரா மலாயு” வில் ராஜேந்திர சோழன் பற்றிய வர்ணனை – II

Please see Part –  I first if you have not read it.

***

கங்கை நகரத்தில் இருந்து, ராஜா சுரன் “கிளாங் கியூ” நாட்டை நோக்கி முன்னேறினார். சியாமியப் பாஷையில் இந்நாட்டின் பெயருக்கு அர்த்தம் “மரகத நாடு” என்பதாகும். இது முன்நாட்களில் ஒரு பரந்த தேசமாகும். ஜோஹோர் ஆற்றங்கரையில் கருங்கல்லினால் கட்டப்பட்ட வலிமையான கோட்டை ஒன்றைக் கொண்டிருந்தது. இந்நாட்டின் அரசனாகிய ராஜா சுளன், உலகின் அரசர்களில் சிறந்தவர் ஆவார்.

ராஜா சுரன் படையெடுத்து வருவதைத் கொண்டதும், ராஜா சுளன் தனக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசர்களையெல்லாம் திரட்டிக்கொண்டு, பெரும்படையுடன் அவரை எதிர்த்துச் சென்றார். அலையெறியும் கடல் போன்ற அவரது சைனியத்திலே யானைகளும் குதிரைகளும் தீவுகள் போல அமைந்திருந்தன. போர் வீரர்களின் கவசங்கள் செதில்கள் போல அமைந்திருந்தன. பதாகைகள் காடு போல இருந்தன. இறகுகள் கட்டிய ஈட்டிகள் குதிரைவாலிப் புல்வெளி போல இருந்தன. கண்ணுக்கெட்டிய தூரம்போல் நான்கு மடங்கு தூரம் நடந்தபின் அவர்கள் ஒரு ஆற்றை அடைந்தனர். ராஜா சுரனின் சைனியன்கள் ஒரு பெருங்காடு போல (ஆற்றின் எதிரில்) நின்றன. அவர்களைக் கண்டதும் ராஜா சுளன் சியாமியப் பாஷையில் “கூப்பிடு அவர்களை” என்று அறைகூவினார். அதனால் இன்றும் அவ்வாற்றின் பெயர் “பாங்கில்” என்பதாகும். மலாய் பாஷையில் இச்சொல்லிற்கு இவ்வர்த்தமே உண்டு.

(ராஜா சுளனின் ) சியாமியப்படைகள் (ராஜா சுரனின்) கலிங்கத்துப் படைகளுடன் மோதிய போது, பெரும் சத்தம் எழுந்தது. யானைகள் யானைகளுடன் மோதின. குதிரைகள் குதிரைகளைக் கடித்தன. அம்புகளாகிய மேகக்கூட்டங்கள் ஒன்றோடொன்று மோதின. ஈட்டிகள் ஈட்டிகளைக் குத்தின. வேல்களும் வேல்களும் எதிர்த்தன. வாள் வீரர்கள் வாள் வீரர்களை எதிர்த்தனர். போர் வீரர்களுக்கு நண்பன் யார், எதிரி யாரென்று தெரியாததால் பலர் தம் தரப்பினரையே கொன்றனர். பெருந்தொகையான வீரர்கள் மாண்டனர். அப்போது ராஜா சுளன் தனது போர் யானையைச் செலுத்திக்கொண்டு ராஜா சுரனின் படைகளிடையே புகுந்தார். அவர் சென்றவிடங்களிலெல்லாம் கலிங்கப்படைகளின் பிணங்கள் குவிந்தன. அவர் முன்னால் கலிங்கப்படையினர் பின்வாங்கலாயினர். இதைக்கண்ட ராஜா சுரன் அவரை எதிர்த்து வந்தார். ராஜா சுரனின் போர்யானை பதினொரு ஹஸ்தம் உயரமான பெருங் களிறு. ஆனால் ராஜா சுளனின் யானை அச்சமின்றி அதை எதிர்த்துச் சென்றது. இரண்டு யானைகளும் இடிபோல முழங்கிக்கொண்டு ஒன்றையொன்று மோதின. அவற்றின் தந்தங்கள் மோதியபோது மின்னல்கள் தோன்றின. இரண்டு யானைகளாலும் ஒன்றையொன்று வெல்ல முடியவில்லை. ராஜா சுளன் தனது யானைமீது நின்று தன் ஈட்டியை ராஜா சுரன் மீது எறியக் குறி பார்த்தார். அவர் குறி தப்பியது; ஈட்டி, ராஜா சுரனின் போர்யானையை ஒரு கரையிலிருந்து மறுகரை ஊடுருவிச் சென்றது. ராஜா சுரன் ராஜா சுளனைக் குறிபார்த்து விரைவாக அம்பு ஒன்றை எய்தார். அது அவரது நெஞ்சைத் தாக்கி முதுகு வழியாக வெளியேறவே, ராஜா சுளன் தன் யானைமீது இறந்து வீழ்ந்தார். இதைக்கண்டதும் அவரது படை வீரார்கள் சிதறி ஓடினர். கலிங்கத்துப் படைவீரர்கள் அவர்களைத் துரத்திக்கொண்டு சென்று கிளாங் கியூ கோட்டைக்குள் நுழைந்தனர். ராஜா சுளனுக்கு மிகவும் அழகுடைய புதல்வி ஒருத்தி இருந்தாள். அவளது பெயர் புத்திரி ஒனங் கியூ என்பதாகும். ராஜா சுரன் அவளை மணந்துகொண்டார். அவளைத் தன்னுடன் கொண்டு தமஸாக் நோக்கி முன்னேறினார்.

ராஜா சுரன் எண்ணுதற்கரிய ஒரு படையோடு தம்மை எதிர்த்து வந்துகொண்டிருக்கிறார் என்பதும், தமஸாக் வரை வந்து விட்டார் என்பதும் சீனாவில் பிரஸ்தாபமாயிற்று. இதையறிந்த சீனத்து ராஜா மிகவும் கலவரப்பட்டு, தனது மந்திரி பிரதானிகளை அழைத்து, “கலிங்கத்து அரசன் வந்தால் எமது நாட்டைப் பாழாக்கி விடுவான். அவனது படையெடுப்பைத் தடுக்க என்ன உபாயம் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். அப்போது புத்திக்கூர்மையுள்ள ஒரு மந்திரி, “உலகுடைய பிரபுவே! தங்கள் அடிமை இதற்கொரு யுக்தி செய்யவா?” என, சீன ராஜாவும் அனுமதி அளித்தார். எனவே அம்மந்திரி ஒரு கப்பலைத் தயார்படுத்தி, அதைத் துருப்பிடித்த ஊசிகளால் நிரப்பினான். கசமாக், பிடாரா மரங்களை அக்கப்பலில் நட்டான். வயதானவர்களும் பல்லிழந்தவர்களுமாகிய பல சனங்களை அக்கப்பலில் நிரப்பினான். அவர்கள் தமசாக்கை நோக்கிப் பயணித்தனர். ஒரு குறுகிய காலத்தின் பின் தமசாக்கை அடைந்தனர். சீனத்தில் இருந்து ஒரு கப்பல் வந்திருக்கிறது எனும் செய்தி தமசாக்கில் இருந்த ராஜா சுரனை எட்டியதும், அவர் தூதர்களை அனுப்பிச் சீனாவுக்கு அங்கிருந்து எவ்வளவு தூரமென்று விசாரித்தார். விசாரிக்கவே சீனத்தில் இருந்து வந்தவர்கள் “நாங்கள் சீனத்தில் இருந்து புறப்பட்ட்டபோது நாங்கள் எல்லோரும் மிகவும் சிறியவர்கள். எமக்குப் பன்னிரண்டு வயதளவே இருக்கும். இதோ இம்மரங்களின் விதைகளை நாங்கள் அப்போது இக்கப்பலில் நட்டோம். இப்போது நாங்கள் முதியவர்களாகிப் பல் விழுந்து விட்டது. இந்த மரங்களும் வளர்ந்து கனிகள் கொடுக்கின்றன. இதோ இந்த இரும்பு உலக்கைகளைப் பாருங்கள். நாங்கள் சீனாவை விட்டுப் புறப்பட்ட போது இந்த உலக்கைகள் உங்கள் கையளவு மொத்தமாக இருந்தன. இப்போது துருப்பிடித்ததால் அவை தேய்ந்து ஊசியாகி விட்டன. நாங்கள் எத்தனை வருடம் கடலில் இருந்தோம் என்று எங்களுக்கே தெரியாது’ என்றார்கள். இதைக் கலிங்கத்துத் தூதுவர்கள் ராஜா சுரனிடம் தெரிவித்ததும், அவர் “சீனா இவ்வளவு தூரத்தில் இருப்பதாயின் நாம் என்று அங்கே சென்று அடைவோமோ? நாம் திரும்பிச் செல்வதே நலம்” என்று சொல்ல, அவரது தளபதிகளும் அதற்கு உடன்பட்டனர்.

[இதற்குப்பிறகு ராஜா சுரனின் வேறு பல சாகசங்களை செஜாரா வர்ணிக்கிறது. பறக்கும் குதிரையில் பறப்பதும் பாதாள லோகம் செல்வதும் அவற்றில் சில. அவர் ஒரு பாதாள இளவரசியைத் திருமணமும் செய்து கொள்கிறார். இந்த வர்ணனைகளுக்கு எந்த வரலாற்று அடிப்படையும் இருப்பதாக நான் நினைக்காததால் அவற்றைத் தவிர்த்து மேலே செல்கிறேன்]

ராஜா சுரனின் இந்தச் சாகசங்கள் தொகுக்கப்பட்டு, இந்துஸ்தானி மொழியிலே, கற்சாசனத்திலே பொறிக்கப்பட்டன. இந்தக்கல் பொன்னாலும் வெள்ளியாலும் அலங்கரிக்கப்பட்டு, அவரது வெற்றிக்கு அடையாளமாக நிறுத்தப்பட்டது. தனது சந்ததியில் வந்து பூலோக அரசர்களையெல்லாம் வெல்லுகின்ற ஒருவன் அந்தக்கல்லைக் காண்பான் என்று ராஜா சுரன் தெரிவித்தார்.

பிறகு ராஜா சுரன் கலிங்க நாட்டுக்குத் திரும்பினார். தனது நாட்டில் மிகப்பெரும் நகரம் ஒன்றையும் கோட்டை ஒன்றையும் நிர்மாணித்தார். கருங்கல்லினாலான அக்கோட்டையின் சுவர்கள் ஏழு பாகம் உயரமும் அகலமும் உடையனவாயும், கற்கள் ஒன்றோடொன்று மிகைத்திறமையுடன் பொருத்தப்பட்டதால் இடைவெளிகளுக்குள் பூச்சி புழுக்கள் கூடநுழைய முடியாமலும், உருக்கிய இரும்பினால் கட்டியது போல் ஒரேசீராக இடைவெளி இன்றித் தோன்றும்படியும் இருந்தன. கோட்டைக்கதவுகள் உருக்கினால் செய்யப்பட்டு பொன்னாலும் இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டன. கோட்டைச்சுவருக்குள்ளே ஏழு குன்றுகளும், அதன் மத்தியிலே கடல் போன்றதோர் எரியும் இருந்தன. ஏரியின் ஒரு கரையில் ஒரு யானை நின்றால் மறுகரையில் இருந்து பார்க்கத் தெரியாத அளவு அவ்வளவு விசாலமாக ஏரி இருந்தது. ஏரியின் மத்தியில் ஒரு தீவும் அதில் நந்தவனங்களும் இருந்தன. இந்த நகரத்தின் பெயர் பிஜ்நகர் என்பதாகும். இந்நகரம் தற்காலத்துக் கலிங்க நாட்டில் இருக்கிறது. இவ்வாறாக ராஜா சுரனின் கதையைச் சுருக்கமாகச் சொல்லலாம். அவரின் எல்லாச் சாகசங்களையும் விரிவாகச் சொல்வதாயின், ஹம்டாவின் கதைபோல நீளும்.

காலப்போக்கில் ராஜா சுரனுக்கு, புத்திரி ஒனங் கியூ மூலம், மூன்று ஆண் மக்களும், பேரழகுடைய ஒரு புதல்வியும் பிறந்தனர். சண்டுவாணி வாசியாஸ் என்ற பெயருடைய அந்தப்புதல்வியை ராஜா ஹெரான், தன் மகனாகிய ராஜா சுழனுக்கு மணம்பேசி முடித்தார். புதல்வர்கள் விசித்திரம் ஷா, பலிதூதனி, நிலுமானம் ஆகியோர். இவர்களில் பலிதூதனி என்பவனை ராஜா சுரன், அம்தான் நகருக்கு அரசனாக்கினார். நிலுமானம் என்பவனுக்குச் சந்துகனி நாட்டை அளித்தார். மூத்தவனாகிய விசித்திரம் ஷாவுக்கு ஒரு சிறிய பிரதேசத்தையே கொடுத்தார். இதனால் அதிருப்தி அடைந்த விசித்திரம் ஷா தனது நாட்டைத் துறந்து, கடல்நாடுகள் எல்லாவற்றையும் கைப்பற்றித் தனக்கென ஓர் அரசை அமைக்கத் தீர்மானித்துக் கிளம்பினான். இதற்காக அவன், சகல ஆயுத தளபாட வசதிகள் உடைய இருபது போர்க்கப்பல்களுடன் புறப்பட்டான். பல நாடுகளையும் கைப்பற்றிக்கொண்டு சில்பு என்ற பிரதேசத்திலுள்ள கடலை அவன் அடைந்தபோது, பெரும் புயற்காற்றினால் அவனது கப்பற்படை சிதறியது. சிதறவே, அவன் படையில் அரை வாசிப்பேர் உயிர்பிழைத்து சந்துகனி நாட்டிற்குத் திரும்பி வந்து சேர்ந்தனர். மாற்றப்பாதியினரின் கதி தெரியவில்லை. இவ்விளவரசனின் சாகசங்கள் மிகப்பல. இங்கே சுருக்கமாகவே அவற்றைச் சொன்னோம்.

அரும்பதவுரை:

ராஜா சுரன்: ராஜேந்திரன்

ஜோஹோர் பிரதேசம் மலாயத் தீபகற்பத்தின் தென் கோடியாகும். அதற்குத் தெற்கே இருந்த சிங்கப்பூர்த் தீவு “தமஸாக்” எனப்பட்டது.

கிளாங் கியூ என்ற நாடு ஸ்ரீவிஜயப் பேரரசையே குறிக்க வேண்டும். அது மலாயத் தீபகற்பத்தை உள்ளடக்கி இருந்தது.

ராஜா சுளன்: இப்பெயர் சோழ அரசனைக்குறிப்பதாக “செஜாரா” வில் ஏற்கனவே வந்திருக்கிறது. ஆனால் இவ்விடத்தில் இது சோழ அரசனைக்குறிக்க முடியாது. இவன் ஸ்ரீவிஜய நாட்டு அரசன். எனவே இது “சூளாமணி வர்மன்” என்பதன் திரிபாகலாம். இவன் ராஜேந்திரனது படையெடுப்பின்போது அரசுசெய்த சங்கிராம விஜ்யோத்துங்கனின் மூதாதை. இவன் பெயராலேயே நாகப்பட்டினம் சூளாமணி விகாரம் கட்டப்பட்டது. எனவே ‘செஜாரா’ இவனை இவன் வம்சத்தில் வந்த சங்கிராமனுடன் கலந்திருக்க வேண்டும்.

கலிங்கர்: க்ளிங், கிளிங்கா: இச்சொல் மலேசியாவில் பொதுவாக இந்தியர்களையும் குறிப்பாகத் தென்னிந்தியர்களையும் குறிப்பதற்கு இன்றும் வழங்குகிறது. மலாயரைப் பொறுத்தவரை கலிங்கர், இந்தியர் என்பன ஒத்த சொற்கள். எனவே மலாயர் தம்நாட்டிலுள்ள தமிழர்களைக் “கலிங்கர்” (க்ளிங்கா) எனவே அழைக்கின்றனர். “கலிங்கத்துப் பேயே” என்பது மலாயில் பிரபலமான வசைச் சொல்லுமாகும். எனவே “கலிங்கப்படைகள்” என்பது இவ்விடத்தில் இந்திய உபகண்டத்தில் இருந்து வந்தவர்களையே அதாவது தமிழர் படையையே குறிக்கிறது.

சீயம்: தாய்லாந்து. ஸ்ரீவிஜய நாட்டினரை ‘சீயம் பாஷை’ பேசுபவர்களாக செஜாரா காட்டுகிறது. இது ஆய்வுக்குரியது.

ஹஸ்தம்: கிட்டத்தட்ட ஒரு முழத்திற்கு ஒப்பானது.  Estimated to be 45 cm. ஆகவே ராஜேந்திரனின் யானையின் உயரம் ஐந்து மீட்டர் வரை என்று செஜாரா கூறுகிறது.

கும்ப கஜம்: ‘பட்டத்து யானை’ என்ற சொல்லுக்கு செஜாராவில் பாவிக்கப்படும் மலாய் மொழிச்சொல் ‘கும்ப கஜா (‘கும்பத்து யானை’ ) என்பதாகும். இந்தச்சொல் நானறிந்த வரையில் தமிழ் இலக்கியங்களிலோ (கீழ்வரும் இடம் தவிர), அன்றி இந்தியாவின் வடமொழி இலக்கியங்களிலோ பாவிக்கப்படவில்லை. ஆனால், கடாரப்படையெடுப்பு பற்றி வர்ணிக்கும் ராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியில்

“சங்கிராம விஜயோத்துங்க வர்மன்

ஆகிய கடாரத்து அரசனை வாகயம்

பொருகடல் கும்பக்கரியொடும் அகப்படுத்து”

என்று வருகிறது. இங்கே ‘கும்பக்கரி’ என்று வருவதற்கு இந்திய வரலாற்றாசிரியர்கள் சரியான பொருள் சொல்லவில்லை. ஏனெனில் அது மலாய மொழித் தாக்கமுள்ள சொல். இந்தச்சொல்லொற்றுமை ராஜேந்திர சோழன் படையெடுப்பையே செஜாரா வர்ணிக்கிறது என்பதற்குச் சான்றுமாகும்.

ஆனால், ராஜேந்திர சோழன் நேரடியாகக் கடாரப்படையெடுப்பில்  கலந்து கொண்டதற்கோ, அல்லது சோழர்களின் தரையிறங்கு படையில் யானைப்படை இடம்பெற்றிருந்ததற்கோ வரலாற்று ஆதாரங்கள் இல்லை. ஆகவே, அரசர்களுக்கிடையிலான யானைப்போர் செஜாராவின் அதீத கற்பனை என்றே நினைக்கிறேன்.

ஒனங் கியூ: ராஜேந்திர சோழன் ஒனங் கியூ என்ற ஸ்ரீவிஜய இளவரசியை மணந்தான் என்பதைப் பல வரலாற்றாசிரியர்கள் அப்படியே விழுங்கி விட்டார்கள். முதலாம் குலோத்துங்க சோழன் (ராஜேந்திரனின் மகள் வயிற்றுப் பேரன்), இந்த ஸ்ரீவிஜய இளவரசியின் மகளின் மகன் என்று கூடச் சிலர் சாதிக்கிறார்கள். இதற்கு மேலதிகச் சான்றாக, சோழர் குலத்திலோ அல்லது குலோத்துங்கனின் தந்தை குலமான சாளுக்கிய குலத்திலோ ‘உத்துங்கன்’ என்ற பெயர்முடிவு இல்லாதிருக்க, ஸ்ரீவிஜய சக்கரவர்த்திகள் பாவித்த ‘உத்துங்கன்’ என்ற பெயர் முடிவை குலோத்துங்கன் ஏற்றுக்கொண்டதைக் காட்டுகிறார்கள். ஆனால், கால அடைப்படையில் இது அதிகம் சாதித்தியமில்லை. ஏனெனில், கீழைச் சாளுக்கிய ராஜராஜ நரேந்திரனுக்குப் பட்டம் கட்டி வைத்துச் சில ஆண்டுகளின் பின்னரே ராஜேந்திரன் கடாரத்தின் மீது படையெடுத்திருக்கிறான். அப்படையெடுப்பில் அவன் ஒரு ஸ்ரீவிஜய இளவரசியைத் திருமணம் செய்து, அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தை வளர்ந்தபின் ராஜராஜ நரேந்திரன் அவளை மணப்பதானால் அவர்களுக்கிடையில் பெரும் வயது வித்தியாசம் இருந்திருக்க வேண்டும். அப்படியே மணந்திருந்தாலும் அவள் ராஜராஜ நரேந்திரனின் முதலாவது மனைவியாக இருந்திருக்க மாட்டாள். அவர்களின் புதல்வன் முடிக்குரியவனாக இருக்கச் சாத்தியங்கள் குறைவு.

ஆனால், ஒனங் கியூவின் மகளான சந்துவனி வாசியாஸ் என்ற மங்கையை, இந்திய அரசன் ஒருவன் தனது மகனுக்காகப் பெண் கேட்டான் என்று செஜாரா சொல்வதால், அவளது திருமணத்தில் எதோ ஒரு முக்கியத்துவம் இருந்திருக்கவே வேண்டும். குறிப்பிட்ட அரசர்களின் பெயர்கள் தெரியாதவிடத்து ‘சேரன், சோழன், பாண்டியன்’ என்ற பெயர்களை இட்டு நிரப்பப் பாவிக்கிறது செஜாரா. இவ்வகையிலேயே “ராஜா ஹெரான் மகனான ராஜா சுழன் ‘ என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒனங் கியூ என்ற பாத்திரம் ஒரு குறியீடாக இருக்கலாம். அல்லது ராஜேந்திரனின் மகன்கள் அல்லது தளபதிகளில் ஒருவன் அவளை மணந்திருக்கலாம். அல்லது ராஜேந்திரனே உண்மையில் அவளை மணந்திருக்கலாம். எது உண்மையென்று தெரியவில்லை.

பிஜ் நகர்: கங்கை கொண்ட சோழபுரம். அதன் நடுவில் இருந்ததாக வர்ணிக்கப்படுவது சோழகங்க ஏரி. படையெடுப்பின் பின் தாய்நாடு திரும்பி புதிய தலை நகரமொன்றை உருவாக்கிய அரசர்கள் மிகக்குறைவு. அப்படி உருவாக்கினாலும் அதன்மத்தியில் ஏரி ஒன்றை அமைத்தவர்கள் வேறு யாருமில்லை. ராஜேந்திரன் ஒருவனே அதைச்செய்தான். எனவே ‘பிஜ் நகர்’ பற்றிய வர்ணனை, ராஜேந்திர சோழனும் ராஜா சுரனும் ஒருவரே என்பதைத் தெளிவாக்குகிறது. பிஜ் நகர் என்ற பெயர் பிரகதீஸ்வரர் கோயில் என்பதில் இருந்து வந்திருக்கலாம். இங்கே தகப்பன் ராஜராஜன் கட்டிய பெரியகோவிலுடன், மகன் ராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரத்தை ‘செஜாரா’ குழப்பி இருக்கிறது.

ஒனங் கியூவில் புதல்வர்கள்: ராஜேந்திரனுக்கு மூன்று பிரபலமான ஆண்மக்கள் (இராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன்) இருந்தனர். இந்த மூன்று புதல்வர்களையும் ஒனங் கியூவின் மக்களாக செஜாரா குழப்புகிறது. ஆனால், பாதி மலாய் – பாதித் தமிழ் இளவரசன் ஒருவன் சோழர்களின் முன்னணிப்படையுடன் பிலிப்பைன்சின் சேபு தீவுவரை சென்றதாகவும், அங்கே ஒரு ராஜவம்சத்தை நிர்மாணித்ததாகவும் பிலிப்பைன்சின் வரலாற்று ஏடுகள் கூறுகின்றன. பிலிப்பைன்சின் வரலாற்று ஏடுகளில் அவனுக்கு இருக்கும் பெயர் ஸ்ரீ லுமாய். இவனும், விசித்திரம் ஷா என்ற இளவரசனும் ஒருவராகலாம். எனவே விசித்திரம் ஷாவின் கதை நம்பும்படி உள்ளது. அவன் யாருடைய மகன் என்பது தெளிவில்லை. உண்மையில் ராஜேந்திரனுடைய மகனாகவோ அல்லது தளபதி ஒருவனின் மகனாகவோ இருக்கலாம். ஸ்ரீ லுமாயின் வம்சம் மெகல்லன் உலகத்தைச் சுற்றிவந்தபோது பிலிப்பைன்ஸில் அரசாண்டது.

சில்பு: பிலிப்பைன்ஸில் உள்ள செபு தீவும் அதற்கடுத்துள்ள கடலும்.

பேர்க்கப்பல்: போர்க்கப்பல் என்ற சொல்லுக்கு ‘செஜாரா’ பாவிக்கும் மலாய மொழிச் சொல் ‘பேர்க்கப்பல்’ என்பது. எனவே, அந்தச்சொல்லே சோழர்களின் படையெடுப்பில் இருந்துதான் மலாய மொழிக்குப் போயிருக்கிறது.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *