“செஜாரா மலாயு” வில் ராஜேந்திர சோழன் பற்றிய வர்ணனை – I

“செஜாரா மலாயு” மலாய ராஜவம்சத்தின் சரித்திரத்தைக் கூறுகிற ஒரு மலாய் மொழியிலான கிரந்தமாகும். இது கிட்டத்தட்ட சிங்கள ராஜவம்ச சரித்திரத்தைக்கூறுகின்ற “மகாவம்சத்தை” ஒத்தது. ஆனால், மகாவம்சத்தை விட இதில் புழுகுகளும் அறிவுக்கு ஒப்பாத செய்திகளும் இன்னும் அதிகம். முன்னூறு வருடம் அரசாளுகின்ற அரசர்களையும், வானத்தில் பறக்கும் குதிரைகளையும் பற்றி இதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே இது ஒரு வரலாற்று நூல் என்பதை விட ஓர் இதிகாசம் என்பது அதிகம் பொருந்தும். ஆனால், இதில் குறிப்பிட்டுள்ள பல நிகழ்ச்சிகள் உண்மையான வரலாற்றுச் சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டவை. ராஜேந்திரனின் கங்கை, கடாரப்படையெடுப்புகள் அவ்வாறான நிகழ்வுகளில் முக்கியமானவை.

மலாய ராஜவம்சத்தின் அடிவேர் பாரத பூமியில் இருந்தே வந்ததென்பதை செஜாரா மிகத் தெளிவாக ஒப்புக்கொள்கிறது. ஆனால், செஜாராவை எழுதியவர்களுக்கு இந்திய உபகண்டம் பற்றிய தெளிவான புரிதல் இருந்ததாகத் தெரியவில்லை. எனவே பல வரலாற்று உண்மைகளைக் கற்பனைகளோடு கலந்தும், ஒழுங்கு மாற்றியும், இடம் பொருள் ஏவல்களைக் கலந்தும், தமிழ் மற்றும் வடமொழிப்பெயர்களை மலாய் மொழியின் இலக்கணத்திற்கேற்ப மாற்றியும், அவர்கள் செஜாராவில் நுழைத்திருக்கிறார்கள். ஆனால், அதிஷ்டவசமாக செஜாரா வர்ணிக்கும் காலத்தைப்பற்றிக் கற்பனை கலக்காத (அல்லது மிகக்குறைவான அளவு கலந்த) அறிவுக்குப் பொருத்தக்கூடிய வரலாற்று மூலங்கள் பலவும் (உதாரணம்: சோழ அரசர்களின் மெய்க்கீர்த்திகள்) இருப்பதால், செஜாராவில் இருக்கும் கற்பனைகளில் இருந்து உண்மையை ஓரளவு பிரித்தறிய முடியும். அல்லது, எப்படியான உண்மைகளில் இருந்து குறிப்பிட்ட கற்பனைகள் எழுந்திருக்கலாம் என்று ஊகிக்க ஆவது முடியும்.

உண்மையில், செஜாராவின் முதலாவது அத்தியாயம் ஏறக்குறைய முழுவதும் சோழ வம்சத்தைப்பற்றியதே. சோழ வம்சத்தைப்பற்றி செஜாரா குறிப்பிடும் இடங்களைச் சுருக்கமாகப்பார்ப்போம்.

“ராஜா சுழன் என்பவர் இந்து நாடுகளிலும், சிந்து நாடுகளிலும், மற்றும் மேற்கிலுள்ள எல்லா நாடுகளிலும் இருந்த அரசர்களுக்குள்ளே தலையாயவர் ஆவார். இவர் அம்தான் நகராவில் இருந்து அரசு புரிந்தார். இவரது மகளை, ராஜா இஸ்கந்தரின் வம்சத்தில் வந்த ராஜா நார்சி மணந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர்: (1) ராஜா ஹெரன் (2) ராஜா சுரன் (3) ராஜா பாண்டேன். இவர்களுள் ராஜா ஹெரன் இந்துஸ்தானத்தையும், ராஜா பாண்டேன் துருக்கிஸ்தானத்தையும் ஆண்டனர். ராஜா சுரனைத் தனது சொந்த நாட்டை ஆளும்படி ராஜா சுழன் அமைத்தார். சிறிது காலத்தின்பின் ராஜா சுழன் இறந்துவிட, ராஜா சுரன் அவரைவிட இன்னும் சிறப்புடனும் அதிகாரத்துடனும் அம்தான் நகரத்தில் அரசு புரிந்தார். சீன தேசம் ஒன்றைத் தவிர, கிழக்குத் திசையிலும் மேற்குத்திசையிலும் இருந்த அனைத்து அரசுகளும் அவர் ஆணைக்கு உட்பட்டிருந்தன.”

“பிறகு ராஜா சுரன் சீனத்தை வெற்றிகொள்ளத் தீர்மானித்தார். இதற்காக அவரிடம் சிற்றரசர்களாயிருந்த ராஜாக்களும், படைவீரர்களும் திரண்டனர். இவ்வாறாகத் திரண்ட 1002 இலட்சம் போர்வீரர்கள் கொண்ட மாபெரும் படையுடன், ராஜா சுரன் சீனத்தின்மேல் படையெடுத்துச் சென்றார். அவரது படைகள் சென்ற பாதையில், காடுகள் திறந்த சமவெளிகளாயின; நிலம் அதிர்ந்தது; மலைகள் நகர்ந்தன; குன்றுகள் சம நிலம் ஆயின; பாறைகள் துண்டுதுண்டாகிப் பறந்தன; பெரிய ஆறுகள் வற்றிச் சேறாயின. இரண்டு மாதங்களுக்கு அவர்கள் தரிக்காது முன்னேறினர். அவர்களின் கவசங்களின் ஒளியினால் மிக இருண்ட இரவிலும் நிலவு வெளிச்சம் உண்டானது. அவரின் போர்வீரர்களும் தளபதிகளும் செய்த ஓசையினாலும், யானை குதிரைகள் போட்ட கூச்சலினாலும், இடி முழக்கத்தின் ஒலி கூட மழுங்கடிக்கப்பட்டது. ராஜா சுரன் தான் கடந்த ஒவ்வொரு நாட்டையும் வென்று தன் ஆணைக்கு உட்படுத்தினார். இவ்வாறாக அவர் கங்கை நகரத்தை அடைந்தார். ”

“அப்போது கங்கை நகரத்தை ஆண்டவர் கங்கை ஷா ஜுவானா என்பவர். கங்கை நகரம் ஒரு குன்றின்மேல் அமைந்திருந்தது. முன்பக்கம் அணுகுதற்கரிய சரிவுடனும், பின்புறத்தில் அணுகுதற்கு இலகுவாகவும் இருந்தது. அதன் கோட்டை, பெராக் பிரதேசத்தில் உள்ள டிண்டிங் நதிக்கரையில் இருந்தது. ராஜா சுரனின் படையெடுப்பைப்பற்றி கங்கை ஷா கேள்வியுற்றதும், அவர் தனது சிற்றரசர்களைத் திரட்டினார். தன் கோட்டைக்கதவுகளை மூடி, தன் வீரர்களைக் காவலுக்கு அமைத்தார். தன் அகழியை நீரால் நிரப்பினார். ராஜா சுரனின் படைகள் சீக்கிரம் கோட்டையைச் சூழ்ந்து கொண்டு கடுமையாகத் தாக்கின. ஆனால் எதிர்ப்பு பலமாக இருந்தது. எனவே ராஜா சுரன் தனது பெரிய போர்யானையில் ஏறிக்கொண்டு, பொழிகின்ற அம்புகளையும் வேலைகளையும் இலட்சியம் செய்யாது, கோட்டைக்கதவை நெருங்கினார். அணுகிக் கோட்டைக்கதவைத் தனது சக்கராயுதத்தால் தாக்கவே அது தவிடு பொடியாக்கி விழுந்தது. ராஜா சுரன் தனது முன்னணிப்படைகளுடன் கோட்டையில் புகுந்தார். இதைக்கண்ட கங்கை ஷா தனது வில்லை வளைத்து ராஜா சுரனின் யானையின் மத்தகத்தை நோக்கி அம்பொன்று விடவே அது இறந்து கீழே விழுந்தது. இதைக்கண்ட ராஜா சுரன் குதித்திறங்கித் தன் வாளை உருவி, கங்கை ஷாவின் தலையை வெட்டி வீழ்த்தினார். இதன்பிறகு கங்கை ஷாவின் குடிமக்கள் அனைவரும் ராஜா சுரனுக்குப் பணிந்தனர். கங்கை ஷாவின் சகோதரியான புத்திரி கங்காவை ராஜா சூரன் மணந்து கொண்டார். “

அரும்பதவுரை:

ராஜா சிக்கந்தர்: இது மகா அலெக்ஸ்சாந்தரைக் குறிக்கிறது. [செஜாராவின் வேறு பகுதிகளில் ராஜா சிக்கந்தர் ‘மகிடோனிய’ (மசிடோனிய) அரசன் என்று வரும்.]

ராஜா சுழன்: ராஜராஜ சோழன் ஆகலாம் அல்லது பொதுவாகச் சோழ மன்னர்களைக் குறிக்கலாம்.

இந்துநாடு அல்லது இந்துஸ்தான்: தற்போதைய இந்தியா

சிந்து நாடு: தற்போதைய பாகிஸ்தான் ஆகலாம்

மேற்கிலுள்ள நாடுகள்: இங்கு “மேற்கு” என்பது மலாயத் தீபகற்பத்துக்கு மேற்கில் என்பதைக் குறிக்கும். மலாயருக்குத் தெரிந்திருந்த ‘மேற்கு’ நாடுகள் இந்திய உபகண்டத்தில் இருந்த நாடுகளே.

ராஜா நார்சி: நாரராஜனின் மகள் ஒருத்தியை ராஜராஜ நரேந்திரன் (வேங்கி மன்னன்) மணந்து கொண்டான் என்ற தகவலில் இருந்து ‘ராஜா நார்சி’ என்ற பாத்திரம் உருவாகியிருக்கலாம். இப்பாத்திரம் அலெக்ஸ்சாந்தரின் வம்சத்தில் வந்தது என்பது வெறும் கற்பனையே. மலேய அரச வம்சம் அலெக்ஸ்சாந்தர், இராஜேந்திரன் முதலிய பேரரசர்களின் வம்சம் என்று காட்டுவதற்கு செஜாரா எழுதியவர்கள் விரும்பியிருக்க வேண்டும். அல்லது இப்பெயர் “நரசிம்ம பல்லவன்” என்பதில் இருந்தும் வந்திருக்கலாம்.

ராஜா ஹெரன், ராஜா சுரன், ராஜா பாண்டேன்: இது சேர, சோழ, பாண்டியர் என்ற தமிழ் மன்னரைக் குறிக்க வேண்டும். ராஜராஜ சோழன் முத்தமிழகத்தையும் வென்றான் என்பதைக் குறியீடாகச் சொல்லுவதாயும் இருக்கலாம்.

ராஜா சுரன்: ராஜேந்திரன்

“ஷா” என்பது அரசன் என்று பொருள்படும் பாரசீகச் சொல்லாகும். எனவே “கங்கை ஷா” என்பது கங்கையின் அரசன் என்பதாகும்.

பெராக் பிரதேசம் மலாயத் தீபகற்பத்தில் கடாரத்திற்கு அருகில் இருப்பது. அங்கே உண்மையாகவே டிண்டிங் என்ற பெயருள்ள நதி உண்டு. ராஜேந்திரனின் கங்கை, கடாரப்படையெடுப்புகளை செஜாரா ஆசிரியர்கள் ஒன்றாகப்போட்டுக் குழப்பியதால் கங்கை நதியையும் டிண்டிங் நதியையும் ஒன்றாகக் கருதி இருக்க வேண்டும்.

ராஜேந்திரன் “புத்திரி கங்கா” என்ற பெண்ணை மணந்தான் என்பது ராஜேந்திர சோழன் கைப்பற்றிய நாடொன்றின் இளவரசியை மணந்ததாக இருக்கலாம் அல்லது கங்கையைக் கைப்பற்றியதைக் குறியீடாகச் சொல்வதாகவும் இருக்கலாம். சோழ மன்னர்கள் கங்கையைக் கைப்பற்றியதை “மணந்ததாகச்” சொல்லும் குறியீடு தமிழிலக்கியத்திலும் நெடுங்காலமாக உண்டு. “திங்கள் மாலை வெண்குடையான் சென்னி (சோழ மன்னன்) செங்கோல் அது ஓச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி” என்றவாறு இந்த symbolism சிலப்பதிகார காலத்திலேயே உருவாகி விட்டது.

இப்பதிவின் இரண்டாம் பாகத்தைக் காண இங்கே அழுத்துக.

 

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

1 கருத்து

  1. இரண்டு பதிவுகளை படித்தேன்..மிக பிரமாதமான எளிமையான விளக்கங்களும் அருமையாக ஆராய்ந்தும் எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள் அண்ணா

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *