மாருதப்பிரவல்லி அல்லது மாருதப்புரவீக வல்லி யார் என்று கேட்டால், பெரும்பாலான யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் இலங்கைவாழ் இந்துக்களுக்கும் (கர்ண பரம்பரைக் கதைகள் மூலம்) தெரிந்திருக்கும்.
“இதென்ன கேள்வி? மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலைக்கட்டுவித்த சோழர் குலத்து இளவரசி. கீரிமலையில் தீர்த்தமாடிக் குதிரை முகம் நீங்கப்பெற்றவள். அவளை மா (குதிரை) முகம் விட்டதனால் மாவிட்ட புரம் என்றாயிற்று” என்பீர்கள். அவ்வாறுதான் எமது சைவசமய பாடப் புத்தகங்களும், யாழ்ப்பாண வைபவ மாலையும் கூறுகின்றன.
ஆனால், “அவள் எந்தச் சோழ அரசனுடைய மகள்? அவள் கந்தசுவாமி கோயிலைக்கட்டிய காலம் என்ன?” என்று கேட்டால், பலருக்குத்தெரியாது.
யாழ்ப்பாண வரலாற்றை ஆராய்ந்துள்ள அறிஞர்களுக்குத் தெரியும். அவர்கள், “திசையுக்கிர சோழனின் மகள். கந்தரோடையில் இருந்து அரசாண்ட உக்கிர சிங்கனின் மனைவி” என்பார்கள். உக்கிர சிங்கனின் ஆட்சிக்காலம் காலம் கி. பி. 795 தொடக்கம் என்றும், அவன் வடதிசையிலிருந்து படையோடு வந்து ஆட்சியைக் கைப்பற்றியவன் என்றும் கூட நிறுவி விட்டார்கள். ஏனென்றால், யாழ்ப்பாண வைபவ மாலை அவ்வாறு சொல்கிறது.
எனக்கு இந்தப் பதிலிலும் திருப்தியில்லை. ஏனெனில், இந்தப்பதில் அக்காலத்துத் ‘தமிழ்நாட்டு’ மற்றும் ‘இந்திய’ வரலாறோடு பொருந்தவில்லை. பல விடயங்கள் உதைக்கின்றன.
– “திசையுக்கிர சோழன்” என்றொரு சோழ அரசன் இந்திய வரலாற்று மூலங்கள் எதிலும் காணப்படவில்லை.
– ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது “திசையுக்கிர சோழன்” காலத்தில் தமிழ்நாட்டில் பல்லவ அரசே காணப்பட்டது. சோழர்கள் இருந்திருந்தால் சிற்றரசர்களாக இருந்திருப்பார்கள்.
– குறிப்பிட்ட காலத்தில் ஏற்பட்ட ‘இந்தியப்’ படையெடுப்புகள் பற்றி மகாவம்சம் எதுவும் கூறவில்லை.
– இதே காலத்தில் அதாவது உக்கிர சிங்கன் காலத்தில் தொண்டைமான் எனும் அரசன் தொண்டைமானாற்றை வெட்டியதாக வைபவ மாலை சொல்கிறது. தொண்டைமான் என்பது பல்லவருக்குரிய பட்டப்பெயராயினும் அவர்கள் வெளிநாடுகளில் அப்படி அறியப்படவேண்டிய அவசியமில்லை. அவர்கள் வெட்டியிருந்தால் ‘பல்லவனாறு’ என்றே பெயர் வந்திருக்கும்.
– திசையுக்கிர சோழனின் மகனின் மருமகனே கூழங்கைச் சக்கரவர்த்தியென்றும், இவன் மதுரையில் வந்திருந்தபோது பாண்டி மழவனென்பவன் இவனை அரசாட்சி செய்ய யாழ்ப்பாணம் அழைத்து வந்ததாகவும் வைபவ மாலை கூறுகிறது. இது ஒரு மிக முக்கிய குறிப்பு. ஆனால், கூழங்கைச் சக்கரவர்த்தியே கலிங்கமாகன் என்று கொண்டால் (இதைப்பற்றி முன்பு பதிவிட்டிருக்கிறேன்), இவன் இலங்கைக்குப் படையெடுத்த காலம் கி.பி 1215. இது வைபவ மாலை சொல்லும் மாருதப்புரவீக வல்லி காலத்தோடு ஒத்துவரவில்லை. மேலும், சோழ வம்சத்தவன் எதற்கு மதுரையில் வந்திருந்தான் என்பதற்கு வைபவமாலைக்கு ‘உரை’ எழுதியவர்களால் விளக்கம் சொல்ல முடியவில்லை. அவர்கள் இதை உண்மையில்லை என்று ஒதுக்கி விட்டனர். ஆனால், மாருதப்புரவீக வல்லி காலத்தைச் சரியாக மதிப்பிட்டால் இதற்கு நல்ல விளக்கம் சொல்ல முடியும்.
என்னுடைய கருதுகோள் (conjecture ) இது (following). இது ஒரு கற்றறிந்த ஊகங்களின் (educated guesses) தொகுதி தான். பொருந்துகிறதா என்று பாருங்கள். கலிங்க மாகன் பற்றி என்னுடைய ஊகங்களையும் படியுங்கள்.
1 – உக்கிர சிங்கனுடன் பேசித் தொண்டைமானாற்றை வெட்டுவித்தவன், சோழர் தண்டநாயகனான கருணாகரத் தொண்டைமான். எனவே இவன் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் (கி. பி. 1070 – 1120) வாழ்ந்தவன்.
2- உரும்பிராயில் இருக்கும் கருணாகரப் பிள்ளையார் கோயிலும் இவன் கட்டியதே. ‘கருணாகரன் ‘, ‘தொண்டைமான்’ என்ற இரண்டு பேர் யாழ்ப்பாணத்துடன் தொடர்புபட்டிருக்கிறார்கள் என்றால் வேறு தொண்டைமானைத் தேட வேண்டியதில்லை.
3 – எனவே உக்கிர சிங்கனும் ஒரு சோழப்படைத் தலைவனாதல் வேண்டும். உக்கிரசிங்கன் “இலங்கையில் பாதிக்கு மேல் கைப்பற்றி ஆண்டு வந்தான். தென்பகுதியை வேறு அரசன் ஆண்டு வந்தான்” என்பது சோழர்காலப் படையெடுப்புகளின் பாணியுடன் ஒத்துப்போகிறது. பெரும்பாலும் இவன் முதலாம் குலோத்துங்கனாலோ, ராஜாதி ராஜனாலோ, வீர ராஜேந்திரனாலோ அனுப்பப் பட்டிருக்கலாம். இது மகாவம்சக் குறிப்புகளுடன் ஒத்துப்போகிறது.
4 – கலிங்க மாகனின் படையெடுப்பு கி.பி. 1215இல் நடந்தது. இது மூன்றாம் குலோத்துங்கனின் காலமென்றும், கலிங்க மாகன் பெரும்பாலும் சோழ கங்க வம்சத்தவன் என்றும் இன்னொரு பதிவில் காட்டி இருக்கிறேன். சோழகங்கர்கள் பெண்வழிச் சோழ மரபினர். எனவே கலிங்க மானைச் சோழ மன்னன் ஒருவனின் “மருமகன்” (அதாவது சகோதரி மகன்) என்பது மிக அழகாகப் பொருந்துகிறது. இக்காலத்தில் மதுரையில் சோழப்பேரரசு அரசு செலுத்தி வந்ததோடு சோழ ஆளுநர்கள் மதுரையில் தங்கி இருந்தனர் என்பது மிகத்தெளிவாக அறியப்பட்ட விடயம். எனவே சோழ வம்சத்தினன் மதுரையில் தங்கியிருந்ததும் பொருந்துகிறது.
5- எனவே திசையுக்கிர சோழன் யார்? அவனது மகனின் மருமகன் மூன்றாம் குலோத்துங்கனுக்குச் சமகாலத்தவனாக இருந்திருக்கிறான். மூன்றாம் குலோத்துங்கனின் பாட்டன் இரண்டாம் குலோத்துங்கன். இவன் யாரென்று பார்த்தால் இவன் மிகுந்த சைவ சமய வெறியன். சிதம்பரத்திலேயே வசித்தவன். எனவே இவன் தில்லை மூவாயிரவரில் ஒருவரை மாவிட்டபுரம் கோயில் குருக்களாக அனுப்பியதெல்லாம் பட்டென்று பொருந்துகிறது.
முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த உக்கிரசிங்கன் அவன் பேரனான இரண்டாம் குலோத்துங்கன் காலத்திலும் வாழ்வது சாத்தியம் குறைவானது தான். ஆனால், ஒருவேளை, கருணாகரத் தொண்டைமான் முதலாம் குலோத்துங்கனுக்குப் பிற்பட்ட காலத்தில் தொண்டைமானாற்றை வெட்டுவித்திருக்கலாம். கலிங்கப்போர் நடந்தபோது முதலாம் குலோத்துங்கன் வயதானவன். கருணாகரன் படைத்தலைவன் ஆனதால் இளைஞனாக இருந்திருக்க வேண்டும். எனவே விக்கிரம சோழன் காலத்தில் அவன் தொண்டைமானாற்றை வெட்டி இருக்கலாம். அவனை விடவும் உக்கிர சிங்கன் சற்று இளைஞனாக இருந்தால் அவன் இரண்டாம் குலோத்துங்கன் மகளை மணப்பது அசாத்தியமல்ல.
எனவே, என்னுடைய கற்றறிந்த ஊகங்கள் சரியாய் இருந்தால் மாருதப்புரவீக வல்லி இரண்டாம் குலோத்துங்கன் மகள், இரண்டாம் இராஜராஜன் சகோதரி, மூன்றாம் குலோத்துங்கன் அத்தையாதல் வேண்டும். காலம் கி.பி. 1100 – 1150 வரை.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் அவ்வாலயத்தின் அந்தணர் பரம்பரை ஓலைச்சுவடி பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்திருக்கிறேன். அதில் எத்தனை தலைமுறைகள் உள்ளன என்று யாரேனும் தெரிவித்தால் இந்த ஊகத்தை மேலும் ஊர்ஜிதம் செய்யலாம்.
பிற்சேர்க்கை (11.07.2018): கருணாகரத் தொண்டைமான் பற்றிச் சுவையான குறிப்புகள் சில விக்கிப்பீடியாவில் கிடைத்தன. அதாவது, முதலாம் குலோத்துங்கன் காலத்தில், அவனால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட தளபதி அல்லது சிற்றரசன் ஒருவன் இலங்கையில் சோழர் ஆட்சியின் கீழ் இருந்த (வடக்கு ) பகுதிகளைச் சுதந்திர மன்னனாக ஆளும் ஆசையால், சிங்கள மன்னனுடன் ஒப்பந்தமொன்று செய்து கொண்டு சோழர் ஆதிக்கத்திலிருந்து விலகித் தனியரசைப் பிரகடனம் செய்ததாகவும், அதனால் குலோத்துங்க சோழன் வெகுண்டு அவனைச் ‘சிவத் துரோகி” என்று குறிப்பிட்டதாகவும், கருணாகரத் தொண்டைமான் இலங்கைக்குச் சென்று சோழப்பேரரசின் சார்பில் அவனை அடக்கியதாகவும், இச்சந்தர்ப்பத்திலேயே தொண்டமானாறு வெட்டப்பட்டதாகவும், உரும்பிராய்க் கருணாகர பிள்ளையார் கோவில் கட்டப்பட்டதாகவும் இக்குறிப்புகள் கூறுகின்றன. இதற்கு மூலநூல் எதுவென்று தெரியவில்லை. ந. சுப்பிரமணியனின் “தமிழ்நாட்டு வரலாறு” என்ற நூலில் இது குறிக்கப்பட்டுள்ளதாம். அந்த நூலை நான் இன்னும் பார்க்கவில்லை. எனவே அவரின் மூலம் எதுவென்று தெரியாது. இவையெல்லாம் உண்மையென்று கொண்டால்:
– யாழ்ப்பாண வைபவ மாலையிற் கூறப்பட்டிருக்கும் பல்லவ மன்னன் கருணாகரன் தான் என்பது தெளிவாகிறது. அவன் காலமும் தெளிவு.
– அவனால் அடக்கப்பட்ட தளபதி உக்கிர சிங்கனாகவே இருக்க வேண்டும். ஒரு சோழப்பிரதிநிதி ஆட்சிசெய்யும்போது இன்னொரு சோழ ப்பிரதிநிதி படையெடுத்து வந்தது ஏன் என்பதற்கு நல்லதொரு விளக்கத்தை இந்தக்கதை தருகிறது. உக்கிர சிங்கன் சுதந்திர மன்னனாக வைபவ மாலையிலே குறிப்பிடப் பட்டதற்கும், சோழ மன்னன் மகளை அதாவது மாருதப்புரவீக வல்லியை அவன் பலவந்தமாகக் கவர்ந்து சென்றதற்கும் விளக்கம் கிடைக்கிறது.
– கருணாகரன் விக்கிரம சோழனின் காலத்தில் வாழ்ந்திருக்கிறான் என்பதற்கு மூலநூல் ஆதாரம் (விக்கிரம சோழன் உலா) உண்டு. ஆகவே உக்கிர சிங்கனும் விக்கிரம சோழன் காலத்தில் தொடர்ந்து வாழ்ந்திருக்கலாம். மாருதப்புரவீக வல்லி விக்கிரம சோழன் மகளாக
இருக்கலாம்.
-அல்லது, உக்கிர சிங்கனின் புரட்சி நடந்தது இரண்டாம் குலோத்துங்கன் காலத்திலாக இருக்கலாம். இது “முதலாம் குலோத்துங்கன் காலம்” என்று சுப்பிரமணியன் சொல்லியிருந்தாலும் அவர் எந்த ஆதாரத்தை வைத்து அதைக்கூறினார் என்று தெரியாமல் அவரது கூற்றை முழுதும் நம்பமுடியாது. நிச்சயமாக, அரசியல் ரீதியில் தனக்கு எதிராகப் போனவனைச் ‘சிவத்துரோகி” என்ற சொல்லால் வர்ணிப்பது இரண்டாம் குலோத்துங்கனின் இயல்புடன் அதிகம் பொருந்துகிறது. இது உண்மையாக இருந்தால் மாருதப்புரவீக வல்லி நான் முன்பு சொன்னதுபோல இரண்டாம் குலோத்துங்கன் மகளாக இருக்கலாம். இதுதான் அதிகளவு சாத்தியமென்றே எனக்கு இன்னும் படுகிறது.
Interesting information and analysis. I am from Jaffna, Sri Lanka. My family records indicate that we belong to Kulakoddan, a Chola King. We have our dynasty detail for 500 years and published as a book too in 2011. If you want I can send a book for your research. Thanks.
Dr. Sivayogan, yes, I would be interested to look at this book, thanks. Are you able to send a soft copy?
அருமையான கட்டுரை. மேற்கண்ட தரவுகள் ஆச்சரியத்தை எனக்கு ஏற்படுத்தி உள்ளது.
நான் உங்கள் அளவில் வரலாற்றை அறிந்தவன் இல்லை…
ஆயினும் உங்கள் கற்பிதங்கள் பலவும் சோழ வரலாற்று ஆட்சி காலத்தை ஒத்திருப்பதாக இருக்கிறது.
மிக நன்றி. தொடர்ந்து கற்போம்!