இதை இன்னும் ஆழமாகப் பார்க்கலாம். மேலைநாடுகளில் எந்த “ஏழையும்” ஒரு பழைய காராவது வைத்திருப்பார். அது அங்கு அத்தியாவசியம். யாழ்ப்பாணத்தில் அப்படியில்லை. சில தசாப்தங்கள் முன்வரை மெத்தப்பெரிய பணக்காரர்கள் மட்டுமே கார் வைத்திருந்தார்கள். பெரிய அரச உத்தியோகத்தர்களே மோட்டார் சைக்கிள் தன்னும் வைத்திருந்தார்கள். இதனால் வாகனம் என்பது மிக நிச்சயமாக ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகவும் பலரின் நெடுநாள் கனவாகவும் இருந்தது. இன்று அப்படியில்லாவிட்டாலும் பல பேர் தமது நெடுநாள் கனவு நிறைவேறி வாகனம் வாங்கும்போது தாங்கள் ஊரில் ஒரு முக்கிய புள்ளியாகி விட்டதாக எண்ணிக் கொள்கிறார்கள். வாகனங்கள் வாங்குவது சுலபமாகி விட்டது என்று ஏற்றுக்கொள்வது அவர்களின் வாகனம் பற்றிய சந்தோஷத்தைப் (‘feel good’ factor) பாதிக்கிறது. எனவே வாகனம் வாங்குவது முன்புபோலவே சிரமம் என்றும் தாங்கள் வாழ்க்கையில் உயர்ந்ததாலேயே தங்களுக்கு இது சாத்தியப் பட்டிருக்கிறது என்றும் அடிமனதில் (sub conscious) ஒரு மாயை வைத்திருப்பார்கள். எனவே வாகனங்கள் அதிகரித்து விட்டதை அவர்களின் வெளிமனம் (conscious mind) உணர்த்தினாலும் அடிமனம் ஏற்றுக்கொள்ளாது. தாங்கள் வீதிக்கு ராஜா போல ஓட வேண்டும். மற்றையவர்கள் விலகி வழிவிட வேணும் என்றே அடிமனதில் எதிர்பார்க்கிறார்கள். மறுவளமாக, இன்னும் வாகனங்கள் வாங்காதோரும் வாகனங்கள் இன்று சாதாரணமாகி விட்டன என்று ஏற்றுக்கொள்ள விரும்ப மாட்டார்கள். அது அவர்களை சராசரியிலும் “தாழ்த்துவதாகும்”. தாங்கள் சராசரி, வாகனம் வைத்தொருப்போர் அபூர்வமான பணக்காரர்கள் என்று எண்ணவே அவர்களின் ஆழ்மனமும் விரும்புகிறது. எனவே சைக்கிள்களோ பாதசாரிகளோ வீதியில் செல்லும்போது இன்னும் தொண்ணூறுகளில் செல்வது போல வீதியைப் பாவிக்கிறார்கள். விபத்துகளுக்குக் கேட்பானேன்?