இம்முறை யாழ்ப்பாணம் சென்றுவந்ததிலிருந்து அங்கு நடக்கும் வீதி விபத்துகளைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன். ஒரு விபத்தைக் கண்கூடாகவே பார்த்தோம். இரு பிள்ளைகளின் தந்தையான ஒரு இளைஞர் கண்ணிமைக்கும் நேரத்தில் போய்விட்டார். “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ்வுலகு” – குறள் நினைவில் வந்தது. பெரும்பாலானவர்கள் “வாகனங்கள் கூடி விட்டன, அதனால் விபத்துகள் நேரிடுகின்றன” என்கிறார்கள். எனக்கு அப்படிப் படவில்லை. வீதி ஒழுங்குகள் பற்றிய புரிதல் விழிப்புணர்ச்சி என்பன இல்லாமை ஒரு காரணம். ஆனால், பல படித்தவர்களே விபத்துகளில் சிக்கிக் கொள்கிறார்கள். அடிப்படையில் ஏதோ தவறு. அது என்ன? நான் பார்த்தளவில், தொண்ணூறுகளில் இருந்த மன நிலையில் இருந்து சாரதிகள் விடுபடாமைதான் தவறு என்று தோன்றுகிறது. அதாவது தொண்ணூறுகளின் முற்பாதியில், பிற்பாதியில் ஓரளவு, யாழ்ப்பாணத்தில் வாகனங்கள் ஓடவில்லை. எல்லோரும் சைக்கிள் தான். மோட்டார் சைக்கிள் ஓடுபவர்கள் வேகமாக நடு வீதியால் செல்வார்கள். அருமையாக வாகனம் ஒன்று சென்றால் அதுதான் வீதியின் ராஜா. நான் கார் பழகியபோது நடுவீதியால் செல்லவில்லை என்பதற்காக (!) பயிற்றுநரிடம் ஏச்சு வாங்கினேன்! (” டேய்! (கெட்ட வார்த்தை) ஒரு லாரி போற சயிட் நாடு றோட்டிலை கிடக்கு. ஏன் கரையிலை கொண்டுபோய்ச் செருகிறாய்?) இன்றைக்கு வாகனங்கள் கூடிவிட்டாலும் அதே மனநிலை இருக்கிறது. வாகனம் ஓடுபவர்கள் ஆழ் மனதில் (sub-conscious)_ தாம் மட்டுமே வாகனம் வைத்திருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். வாகனம் என்பது இன்று சாதாரணம் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அது அவர்களின் Ego வைப் பாதிக்கிறது. எனவே வாகனங்கள் கூடியது அல்ல, அந்த யதார்த்தத்தை ஓட்டுனர்கள் ஏற்றுக்கொள்ளாததே விபத்துகளுக்குக் காரணம்.