‘கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
கனக வேத கோடூதி’
என்றால் என்ன?
காலி என்றால் பசு. இப்போது கூட நம்மூரில் ‘ கன்று காலிகள்’ என்று சொல்வதுண்டு. “கதறிச் சென்ற பசுக்கள் மீண்டுவரக் (குழலை ஊதியவரும்), அர்ச்சுனன் ஏறிய தேரின் பாகனாயிருந்து, தங்க மயமானதும், வேத ஒலியைத் தரும் சங்கை ஊதியவரும்,” என்று உரைசொல்லுகிறார்கள். சரியா?
பாரதப்போரில், அபிமன்யு வீழ்ந்ததும், புத்திர சோகம் தாங்காத அர்ச்சுனன் ‘நாளைப் பொழுது சாய்வதற்குள் அவனைக்கொன்ற சயத்திரதனைக் கொல்வேன். இல்லையேல் அக்கினியில் வீழ்ந்து இறப்பேன்” என்று சபதம் செய்கிறான். இதையறிந்த கவுரவர்கள்
தங்கள் மாபெரும்சேனையை மறுபடியும் சக்கர வியூகமாக அமைத்து அதன் நட்ட நடுவில் சயத்திரதனை நிறுத்துகிறார்கள். மறுநாள் அருச்சுனன் சக்கர வியூகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே செல்கிறான். அதிரதர்களும் மகாரதர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து எதிர்க்கிறார்கள். பொழுதோ போய்க்கொண்டே இருக்கிறது. சூரியன் மறைவதற்குள் அருச்சுனன் சபதத்தை நிறைவேற்றாவிட்டால் அவன் இறக்க நேரிடும். எனவே கண்ணன் ஒரு வஞ்சம் செய்கிறான். தனது சக்கரத்தை ஏவிச் சூரியனை மறைத்து விடுகிறான். பொழுது சாய்ந்து விட்டதாக எண்ணி சயத்திரதன் வியூகத்தின் நடுவில் இருந்து வெளிப்பட்டு வருகிறான். அவனைக்கண்டதும் கண்ணன் தனது சக்கரத்தை மீளப்பெற்றுக் கொண்டு, யுத்தம் தொடர்ந்து நடக்கலாம் என்று கூறிப் பாஞ்சஜன்யத்தை முழக்குகிறான். வானத்தில் சூரியன் விளங்குகிறது. அருச்சுனன் சயத்திரதனைக் கொன்று விடுகிறான். பாரதத்தில் கண்ணன் செய்த வஞ்சனைகள் பலவற்றில் இது ஒன்று.
இதை மனதில் வைத்தே அருணகிரியார் தமது வரிகளை அமைத்திருக்க வேண்டும். கண்ணனால் பொழுது மறைந்த போது வீட்டுக்குப்போன பசுக்கள் பொழுது மறுபடியும் விளங்கியபோது மேய்ச்சலுக்கு மீண்டனவாம். எனவே ‘போய் மீள’ என்று அருணகிரியார்
பாடியது வெறுமனே பசுக்கள் திரும்பியதையன்று. திரும்பி, மறுபடியும் மீண்டதையேயாகும். மேலும், ‘கதைவிடாத’ என்ற சொல்லில் இருந்து ‘கோடூதி’ என்ற சொல்வரை கண்ணன் பாரதப்போரில் செய்த லீலைகளையே தொடர்ச்சியாக அருணகிரி பாடி வந்திருக்கிறார் என்பது புலப்படும். இதனைப்புரியாமல் ‘குழல் ஊதியதைப்பற்றி’ இடையிலே சொல்லியதாக உரைகாரர் ‘கதைவிட்டிருக்கிறார்கள்’.
எனவே:
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
கருத லார்கள் மாசேனை …… பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
கனக வேத கோடூதி …… அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
உவண மூர்தி மாமாயன் …… மருகோனே
என்ற வரிகளுக்குப் பொருத்தமான உரை,
“(மற்றோல்லோரும் ஆயுதங்களைக் கீழே போட்டபோதும் ) கதாயுதத்தை விடாத வீமனை நாராயண அஸ்திரத்தை எதிர்கொள்ளும்படி ஏற்பாடு செய்து, அதன் மூலம் இறுதியில் கவுரவர் அழிந்து இறுதி வெற்றி பாண்டவருக்கு உண்டாகும்படி செய்தவரும், (அதே பாரதப்போரில் ) வீட்டுக்குப்போன பசுக்கள் (மேய்ச்சலுக்கு) மீளும்படி, (பொழுதை மறையச்செய்து மறுபடி காட்டித் ) தமது சங்கை முழக்கியவரும், அலைமோதுகிற பாற்கடலில் பள்ளி கொண்டவரும், ( வாமன அவதாரம் எடுத்து ஒரு காலால்) உலகை அளந்தவரும், கருட வாகனம் உடையவருமான திருமால்..”
என்பதாகும்.