ஸோ….. “வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று” என்பதற்கு விண்ணியலின்படி அர்த்தம் என்ன? நானே கொஞ்சம் யோசித்துப்பார்த்தேன். கீழே உள்ள படத்தின்படி நடந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அதாவது, வெள்ளி உதிக்கின்ற அதே நேரத்தில் வியாழன் மறைவதற்கு, வெள்ளி, வியாழன், பூமி (குறிப்பாக பூமியில் ஆண்டாளின் இடம்) இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருந்திருக்க வேண்டும். இது கொஞ்சம் அரிதுதான்.
கொஞ்சம் நீண்ட விளக்கம் தேவையானவர்களுக்கு: சூரியனைச் (Sun) சுற்றும் கிரகங்கள் புதன் (Mercury), வெள்ளி (Venus), பூமி (Earth), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Saturn), யுரேனஸ் (Urenus), நெப்டியூன் (Neptune) என்ற ஒழுங்கில் சுற்றுகின்றன. புளூட்டோ (Pluto) இப்போது கிரகமாகக் கருதப்படுவதில்லை. இந்தப்படத்தில் வெள்ளி, பூமி, வியாழன் ஆகியவற்றை மட்டும் காட்டியிருக்கிறேன்.ஆண்டாளுக்கும் இதற்குமுள்ள சம்பந்தம் அறிய முதற்பதிவு காண்க. பூமி தன்னைத்தானே மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது. இதனால் இரவு, பகல் தோன்றுவதோடு பூமியில் இருந்து பார்ப்பவர்களுக்கு விண்பொருள்கள் யாவும் கிழக்கிலிருந்து மேற்கே நகர்வதாகத் தோன்றுகிறது. ஆண்டாளுக்கு நேரம் விடிகாலையாயின் அவள் பூமியின் இருட்டுப்பாதியின் (அதாவது சூரியனுக்கு முதுகு காட்டும் பாதியின் ) ஓரத்தில் அப்போது இருக்கிறாள் என்றும், பூமி தன்னைத்தானே சுற்றுவதன் காரணமாக அவள் இருக்கும் இடம் வெளிச்சப் பாதிக்கு வரப்போகிறது என்றும் பொருள். என்னுடைய படத்தில் இருட்டுப்பாதியில் அரைவாசியையும் வெளிச்சப் பாதியில் அரைவாசியையும் காட்டியிருக்கிறேன். ஆண்டாள் இருக்கும் இடம் (தென்னிந்தியா) இருட்டு-வெளிச்ச எல்லைக்கோட்டுக்கு அருகில், ஆனால் எங்கள் பார்வைக்கு மறுபுறத்தில் இருக்கிறது. எனவே ஆண்டாளுக்குத் தெரியும் வானப்பிரதேசத்தின் ஒரு எல்லையில் வியாழனும் மறு எல்லையில் வெள்ளியும் உள்ளன. பூமியின் சுழற்சியால் ஆண்டாளுக்கு வியாழன் மறைவதாகவும் வெள்ளி உதிப்பதாகவும் தெரியும். வெள்ளி, பூமி, வியாழன் ஆகியன ஒரு நேர்கோட்டில் வரும்போதே இது சாத்தியம்.