வாசலுக்கு வந்த வைகறை

(கவியரங்கக் கவிதை: எழுத்தாளர் மாநாடு, மெல்பேர்ன், 2009)

உளறிய மொழியை உவந்தவள், நானும்
உலகினில் மனிதனாய் உயர
மழலையை ரசித்து மடியினில் இருத்தி
வளரமுது ஊட்டிய தெய்வம்,
உலகிலே அன்னை மூன்று எனக்குண்டு.
ஒன்று எனைப் பெற்றவள்; தெல்லிப்
பழையினில் பள்ளி; பைந் தமிழ் அன்னை;
பரவினேன் இவர் இணை அடிகள்.

கன்னிக் கவிதை ஒரு கள்ளி; அவள் பின்னால்
பொன்னே மணியே புதுத் தேனே எனச் சென்றால்
சின்னக் கரு விழியில் சீற்றத்தைக் காட்டி, அவள்
என்னைக் கவனியாது ஏகுவாள்; பின்னர்
இன்று கவிதை எழுதல் இயலாது
என்று படுத்து என் இரு விழிகள் மூடுகையில்
தொட்டு எழுப்பி எனைச், சொல்லும் பொருளும் என்ற
கற்கண்டு இதழ் தந்த காரணத்தால், பின்னிரவில்
ஏதோ சில வரிகள் எழுதிக் கிறுக்கியதைக்
காதோடு சொல்லுகிறேன்; கவனித்து ஏற்று அருள்க!

வாசலுக்கு வந்திருக்கு வைகறையா? ஏன் அய்யா,
பேசப் பிறிது பொருளா கிடைக்கவில்லை?
கூசத் தகுந்த கொடுமைகளே எம் மக்கள்
வாசலுக்கு வந்து நிற்கும் போது, தமிழர்கள்
வாசலுக்கு வந்த கறைகள் பல என்று
பேசல் பொருத்தம்; அதை விட்டுப் பேசுவது
வாசலுக்கு வந்த வைகறையா?

இந்த நினைவோடு எழுத அமர்கையிலே
கண்களோ சோர்ந்து, கனவு ஒன்று கண்டேன்.
கண்ட கனவு கருத்துள்ளது ஆகையினால்
சொல்லப் புகுதல் பொருத்தம்;

தென்றல் காற்றின் தடவலுக்குப் பூக்கள் சிணுங்குகிற
சிறியதொரு கிராமம் அது; தமிழ் கிராமம்.

அலை உடுத்த கடல் அடுத்த கரையில், நித்ய
அமைதியிலே, நிம்மதியில், அழகாய் நிற்கும்.
மலை அடுத்த மகாதேவன் கோவில், காண்டா
மணி அடிக்க மணி அடிக்க மலரும் காலை

கொலை, அடுத்தவன் வாழ்வைச் சிதைத்தல், யார்க்கும்
கொடுமை செய்தல், கனவினிலும் நினைக் கா மக்கள்!
கலை, படிப்பு, தாம் செய்யும் தொழில்கள், நித்தம்
கடவுள் வழிபாடு, இதுவே அவர்கள் வாழ்க்கை.

இந்த ஊரில், நரன் என்று ஒரு இளைஞன்,
உடலை வருத்தி உழைத்து வந்தான்.
காலை மாலை கடல் செல்லும் மீனவன்;
கடலின் குழந்தை என வளர்ந்தான்.

கடற்கரை மணல் ஒத்த நிறத்தினள்
கயல் இரண்டு போல் கண்ணினள்; அங்கவை
மடக்கி வீசும் விழி வலை வீச்சிலே
வாலிபர்கள் இதயம் பிடிப்பவள்;
புயல் கிடந்த கார் வானமே கூந்தலோ?
பொறுக்கிக் கோத்த பவளம் இதழ்களோ?
இவள் நெய்தல் நிலத் தேவதையோ என
எழில் அரசி அவ்வூரில் இருந்தனள்

கோடை வானில் நிலவு பொழிந்திடக்
குளுகுளுத்த கடலைத் தழுவி ஓர்
வாடை வீசிய நல்லதோர் மாலையில்
மங்கை நரனை மணந்தாள்; மணந்தபின்
காலத் தோடு புதல்வர் பிறந்தனர்
களிப்பினோடு இல்லறமும் சென்றது.
நீலக் கடலும் அள்ளிக் கொடுக்கவே
நிம்மதியோடு வாழ்வு நகர்ந்தது

அலை கொண்ட கடல் அன்று துயில் கொண்டதுண்டு
அலைகின்ற மென் தென்றல் நிலை கொண்டதுண்டு
வலை கொண்டு படகோடு கடல் ஓடுவார்கள்
வருகின்ற தறியாது மையல் கொண்டதுண்டு
நெடுவானில் உடை வாளோடு அலைவான் ஓர் ஆயன் (Orion)
நினைவென்ன கொண்டானோ விரைவில் மறைந்தான்
கடி நாயும் அவன் பின்னால் அடி வானம் போகும்
தனியாக விடி வெள்ளி நிலவோடு மேயும்

விடி காலை வரும் நேரம் கடல் மீது மாற்றம்
மிக நின்ற தண்ணீரும் பின்னோக்கிப் போக
அடி நீள மணல் மீது பல மீன்கள் துள்ள
அட என்ன இது என்று பலர் பார்க்கப் போகக்

கருவண்ணம் உருவான சுவரோ இதென்ன
தலை நூறு படம் தூக்கி வரும் நாகம் என்ன
நர மானிடர் மீது ஒரு சாபம் என்ன
நாடெல்லாம் இனி வெள்ளக் காடாகும் என்ன

உருவாகி நெடு வானில் உயரே எழுந்து
உயிர் கொல்லி என வந்த தலை ஒன்று – நீளக்
கரை எங்கும் உரு வந்த கடல் நீர் புகுந்து
கனி காய் பூ என இன்றி உயிர் கொன்ற தன்று

கடலோடும் வலைஞர்கள் பல வீடும் அங்கு
கவிழ்த்துக் கிடந்திட்ட சிறு தோணி யாவும்
உடையான் ஏழ் உலகெல்லாம் உறைகின்ற கோவில்
ஒரு மாதா மரியன்னை உறை கோவிலோடு

கடை கண்ணி கல்லூரி விளையாட் டரங்கம்
கரையோரம் தலை தூக்கி நிலை நின்ற யாவும்
மட மானிடன் கண்ட கனவோடு சேர்த்து
வதை செய்ய வெறி கொண்ட கடல் கொண்ட தன்று..

கடல் கரையிலே நின்ற சிறுசெடி
கடலின் கோபம் தப்பியது ஆயினும்
அதனைச் சுற்றித் தழுவிய பூங்கொடி
அலையில் பட்டுத் துவண்டு விழுந்தது
கனியும் பூவும் சிதறிக் கிடந்ததைக்
கண்டவன் கண் நதி கடலில் கலந்தது
மனைவி மக்களை அள்ளிக் கொடுத்தவன்
மனம் இடிந்தனன்; வானம் இருண்டது

நாட்கள் சென்றொரு மாதம் கடந்தது
நரனின் தோணி கடலில் மிதந்தது
பாழ்க் கடல் செய்த பாவம் பயந்திடான்
‘பாரை’ வெல்ல மறுபடி போகிறான்
ஆழ நெஞ்சில் இரக்கம் இல்லாக் கடல்
அன்னை சீறினள் ஆயினும் மானிடன்
வேலை இன்றிச் சோம்பிக் கிடப்பதோ?
வேலை மறுபடி ஆள விழைகிறான்

வெறி கொண்ட கடல் வந்து தரை மோதினாலும்
மிக வாழ்ந்த எம் வாழ்வை அலை கொண்ட போதும்
“எறிகின்ற கடல் என்று மனிதர்கள் அஞ்சார்
எது வந்த தெனின் என்ன அதை வென்று செல்வார்”*
முறிகின்ற தடிகள் தான் மனிதர். ஆனாலும்
மோசங்கள் வரல் கண்டு சாயாது மனிதம்!
கருமை கொள் இரவொன்று வருமாயின், பின் வை
கறை ஒன்று கீழ்வானில் எழும் என்று கண்டோம்.

நன்றி

————————————————————–
*இவ்விரு வரிகள் மஹாகவி து. உருத்திரமூர்த்தி அவர்கள் எழுதியவை. பொருத்தம் நோக்கி ஒரு மேற்கோள் போல இங்கே எடுத்தாளப் பட்டுள்ளன.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *