அவனும் அவளும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். வேடன் அவன். விவசாயியின் மகள் அவள். அவர்கள்வாழ்வது எங்கே? இயற்கையோடு இணைந்த காட்டு வாழ்க்கையை நேசிக்கிறான் அவன். உழைப்பினால்உலகை மாற்றும் நாட்டு வாழ்க்கையை யாசிக்கிறாள் அவள். விளைவோடு ஒன்றிணைய விரும்புகிறான்அவன். விளைவிக்க விரும்புகிறாள் அவள்.
வசந்தம்
அவன்: வசந்த காலம் வந்த போது மரங்கள் பூத்தன. வனத்தில் வாழும் பறவை யாவும் பாடிக் களித்தன. அசைந்து செல்லும் ஓடை நீரின் அழகைப் பாரடீ! ஆலங்கிளையில் தேனும் சொட்டும் ஓசை கேளடீ! குளத்தங்கரையில் காட்டு முல்லை கொட்டிச் சுகந்தம் வீசுது. இளைய காடு இனிமையன்றோ? எந்தன்காட்டில் வாழ வா!
அவள்: வசந்த காலம் வந்த போது கரும்பு விளைந்தது. வயலில் செந்நெல் விளைந்து முற்றித் தலையைச்சாய்த்தது. புதிய நெல்லும் பாலும் கொண்டு பொங்கல் பொங்கலாம். பொன்னி நதியின் இனிய புனலில்ஆடி மகிழலாம். பந்தல் மீது சிவப்பு ரோஜா படர்ந்து பூத்துச் சிரிக்குது. இந்த நாட்டு வாழ்வு இனிமை. இதனை விட்டு நான் வரேன்!!
வேனில்
அவன்: கோடைக்காட்டில் மரங்கள் போடும் குட்டித் தூக்கமே! கொவ்வைக்கனியும் பாலைப் பழமும்பழுத்துச் சொரியுமே! ஆடிக் காற்றில் இலைகள் பேசும் பாஷை கேளடீ! அகன்ற கோடை இரவு வானில்மீன்கள் பாரடீ! உச்சி நேரம் முதிரை நிழலில் உலகை மறந்து கனவு காண இச்சை கொண்டு நீயும் வாடி, எந்தன் காட்டில் வாழ வா!
அவள்: கோடைக்கால வயலில் சணலும் பூத்து நிற்குது. கொம்பன் மாட்டு வண்டி அரிசி கொண்டு போகுது. பாடி ஆடிக் களத்து மேட்டில் கும்மி கொட்டுவோம்! பச்சைக்கிளிக்குப் போட்டியாகப் பறந்து திரிகுவோம்! அந்தி நேரம் வயலின் குளத்தில் அல்லிப் பூக்கள் மலர்ந்து சிரிக்கும் இந்த நாட்டில் நானும் வாழ்வேன். எங்கும் போக மாட்டேனே!
மாரி
அவன்: வானம் இருண்டு கொண்டல் சூழ மாரி வந்திடும். மங்கற் பகலை விண்மீனற்ற இரவு தின்றிடும். சீறும் ஊழிக்காற்றில் மரங்கள் செத்து வீழ்ந்திடும். கிழக்கு வானில் நெருப்புக்குன்று தீயைக் கக்கிடும்! பதைத்து மரங்கள் கண்ணீர் சிந்திப் பரிதவிக்கும் போதிலே, வதைக்கும் கூதல் மழையின் நடுவில்வருவேன் உன்னைத் தேடியே!
அவள்: கொடிய மாரி வந்த போது பாட்டு நின்றிடும். கும்மிருட்டு வந்து சேர ஒளியும் மங்கிடும். கடினஉழைப்பில் மகிழ்ந்த காலம் கனவாய்ப் போய் விடும். கழனி எங்கும் வெள்ளம் தேங்கிச் சேறாய் ஆகிடும். வழியை நோக்கி அப்போது, உன் வரவு பார்த்திருப்பனே! மழையின் நடுவில் கரங்கள் கோத்து வழிநடப்போம் இருவரும்.
அவனும் அவளும்: கரங்கள் கோத்து நாங்கள் நடக்கக் காலை ஒன்று விடிந்திடும். இருவருக்கும்இனியதான இடமொன்றுலகில் இருந்திடும்.
மல்லிகை இதழில் வெளியானது. Recentlly republished in www.tamilmurasuaustralia.com with some changes.
J.R.R. Tolkien அவர்கள் எழுதிய ஆங்கிலக்கவிதையின் தழுவல்.
Original (from the Lord of the Rings)
Ent:
When spring unfolds the beechen-leaf and sap is in the bough,
When light is on the wild-wood stream, and wind is on the brow,
When stride is long, and breath is deep, and keen the mountain air,
Come back to me! Come back to me, and say my land is fair!
Entwife:
When Spring is come to garth and field, and corn is in the blade,
When blossom like a shining snow is on the orchard laid,
When sun and shower upon the earth with fragrance fill the air,
I’ll linger here, and will not come, because my land is fair!
Ent:
When Summer lies upon the world, and in a noon of gold
Beneath the roof of sleeping leaves the dreams of trees unfold,
When woodland halls are green and cool, and wind is in the West,
Come back to me! Come back to me, and say my land is best!
Entwife:
When Summer warms the hanging fruit and burns the berry brown;
When straw is gold, and ear is white, and harvest comes to town;
When honey spills, and apple swells, though wind be in the West,
I’ll linger here beneath the Sun, because my land is best!
Ent:
When Winter comes, the winter wild that hill and wood shall slay;
When trees shall fall and starless night devour the sunless day;
When wind is in the deadly East, then in the bitter rain
I’ll look for thee, and call to thee; I’ll come to thee again!
Entwife:
When Winter comes, and singing ends; when darkness falls at last;
When broken is the barren bough, and light and labour past;
I’ll look for thee, and wait for thee, until we meet again:
Together we will take the road beneath the bitter rain!
Both:
Together we will take the road that leads into the West,
And far away will find a land where both our hearts may rest.