நானோ தனியே நடந்தேன் – கடல் அழுதல்
ஏனோ எனவும் வியந்தேன்
நீலமாய்க் கடலும், வெள்ளை நிறத்தினில் அலையும், பச்சைக்
கோலமாய்க் கூந்தல் தன்னைக் கோதிடும் தென்னை நாலும்,
நீளமாய்ச் செல்லும் தண்ட வாளமும் நிறங்கள் கூட்ட,
ஓலமாய்க் கடலும் பாடும் ‘ஓம்’ எனும் ஒலியும் கேட்கும்.
காதல்கள் நிறைய உண்டு கடற்கரை மணலின் மீது.
ஆதுர மொழிகள் உண்டு. அலை பாயும் கண்கள் உண்டு.
போதில்லாப் போதில் பூத்துப் பொசுங்கிய மனங்கள் உண்டு.
சீதளக் காற்று, சின்னச் சிரிப்போடு வருடிச் செல்லும்.
போரிலே படைகள் போலப் பொதி பொதி முகில்கள் வானில்.
காரிய முகிலும், வெள்ளைக் கவின் பெறு முகிலும் மோத,
யாரிடம் செல்லும் வெற்றி? ரத்தமே பொழிந்து தானோ
சூரியன் மறையும் போது சூழ்ந்தது செம்மை எங்கும்?
கப்பலோ ஒன்று அங்கே தூரத்தில். அதன் தளத்தில்
எப்பாட்டுப் பாடிக் கொண்டு இழுக்கிறான் வலையை? வீசும்
உப்புக் காற்றவனும் பாட ஊதுமோ சுருதி? தாளம்
தப்பாது அலைகள் வீசும் கடல் ஜல தரங்கம் தானோ?
கடல் போல வாழ்க்கை ஆயின் கரையோர நண்டா நாங்கள்?
உடல் மிக ஊதிப் போன திமிங்கிலம் தானா? இல்லை
கடற்பாசி தின்னுகின்ற சிறு சிறு மீனா? அந்த
மடமீனை விழுங்கி வாழும் பெரு மீனா? சுறவு தானா?
குருதியை விரும்பி வாழும் கொள்ளிக் கண் முதலை தானா?
அரவமா? இல்லை அந்தக் கடல் மீது பறக்கும் வெள்ளைப்
பறவையா? அலைகள் ஏதும் பட்டுக் கொள்ளாமல் சென்று
வருமீனை மட்டும் கொத்தி வாழுதல் முடியும் தானா?
கடற் கரை மணலில், ஓய்வாய்க் கால்களும் புதைய, ஆங்கே
நடப்பவன் காலின் பக்கம் அலை கொண்டு வந்து தள்ளத்
தடக்கிடும் முத்துப் போல அதிஷ்டங்கள் சிலர்க்கு வாழ்வில் !
இடர்ப் படும் வலைஞன் கூடை இன்னுந்தான் நிரம்ப வில்லை!!